search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இன்று குண்டு வெடிப்பு தினம்- கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
    X

    கோவை உக்கடம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்.

    இன்று குண்டு வெடிப்பு தினம்- கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

    • கோவையில் உள்ள கோவில்கள், ஆலயங்கள், பள்ளி வாசல்கள் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • குண்டு வெடிப்பில் பலியானவர்களின் உறவினர்களும் பங்கேற்று புஷ்பாஞ்சலி செலுத்துகின்றனர்.

    கோவை:

    கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் அரங்கேறியது.

    இந்த சம்பவத்தில் 58 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 250க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இன்று குண்டு வெடிப்பு தினம் என்பதால் கோவை மாநகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் 4 துணை கமிஷனர்கள் தலைமையில் 2 ஆயிரம் போலீசார், வெளியூர்களில் இருந்து 2 டி.ஐ.ஜி., 4 எஸ்.பி, 18 உதவி கமிஷனர்கள், டி.எஸ்.பிக்கள், 225 கமாண்டோ போலீசார், 100 அதிவிரைவு படை போலீசார் என 1000 போலீசார் என்று மொத்தம் 3 ஆயிரம் போலீசார் மாநகர் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    லாட்ஜ், ஓட்டல்கள், மக்கள் கூடும் இடங்களான பஸ் நிலையம், மார்க்கெட் பகுதி, சினிமா தியேட்டர்கள், ரெயில் நிலையம், பொது இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு சோதனையும் நடக்கிறது.

    இதேபோல் கோவையில் உள்ள கோவில்கள், ஆலயங்கள், பள்ளி வாசல்கள் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கும் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ரெயில் நிலையங்களில் ரெயில்வே போலீசார் ரெயில் நிலையத்திற்கு வரும் அனைத்து பயணிகளையும் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதித்து வருகின்றனர். அவர்களது உடமைகளையும் சோதனைக்கு உட்படுத்துகின்றனர்.

    இதுதவிர யாராவது சந்தேகத்திற்கிடமாக நின்றால் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

    இதுதவிர 16 சோதனை சாவடிகளில் தீவிர வாகன தணிக்கை நடத்தப்பட்டு வருகிறது. சோதனை சாவடி வழியாக மாநகருக்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. வாகனங்களில் செல்வோரிடம் எங்கு செல்கிறீர்கள்? என்ன காரணம் என்பதையும் விசாரித்து அனுமதிக்கின்றனர்.

    இதுதவிர 400-க்கும் மேற்பட்ட பதற்றம் நிறைந்த பகுதிகளில் போலீசார் ஜீப், மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவற்றில் ரோந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பதற்றமான பகுதிகளில் போராட்டம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே இன்று குண்டுவெடிப்பு தினத்தையொட்டி, பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் மோட்ச தீப வழிபாடு, தீபாஞ்சலி நடக்கிறது. இதில் தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன், இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பொதுச்செயலாளர் கிஷோர்குமார், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    குண்டு வெடிப்பில் பலியானவர்களின் உறவினர்களும் பங்கேற்று புஷ்பாஞ்சலி செலுத்துகின்றனர்.

    Next Story
    ×