search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    புதிதாக கண்டெடுக்கப்பட்ட 17ம் நூற்றாண்டு கல்வெட்டு
    X
    புதிதாக கண்டெடுக்கப்பட்ட 17ம் நூற்றாண்டு கல்வெட்டு

    ஒட்டன்சத்திரம் அருகே 400 ஆண்டுகள் பழமையான நடுகற்கள் கண்டுபிடிப்பு

    ஒட்டன்சத்திரம் அருகே சில்வார்பட்டியில் 400 ஆண்டுகள் பழமையான நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே சில்வார்பட்டியில் பழமையான சிற்பங்கள் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் மதுரை பாண்டியநாட்டு பண்பாடு மைய வரலாற்று ஆய்வாளர் லட்சுமணமூர்த்தி, திண்டுக்கல் ஆசிரியர் அரிஸ்டாட்டில் ஆகியோர் ஆய்வு செய்தனர்.,

    அப்போது 17ம் நூற்றாண்டை சேர்ந்த 4 நடுகற்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, இதுகுறித்து ஆய்வாளர்கள் தெரிவிக்கையில், சங்ககால தொடக்கத்தில் இருந்து நடுகல் வழிபாட்டு முறை இருந்து வருகிறது. போரில் வீரமரணம் அடைந்த வீரனின் பெருமையை பறைசாற்ற வைக்கப்படுவது நினைவு கல்.

    தற்போது சில்வார்பட்டியில் கண்டறியப்பட்ட 3 நடுகற்கள் வெவ்வேறு அமைப்புடன் கருங்கல் உடைப்பு சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தில் வீரனின் கையில் அம்பு எய்தவாறும், சரிந்த கொண்டை கொண்ட 2 பெண்கள் கையை உயர்த்தியபடி தேய்ந்த முகத்துடன் காணப்படுகிறது.

    மற்றொரு சிற்பம் ஆதிரை கவர்தல் நடுகல் வடிவில் உள்ளது. இந்த சிற்பத்தின் அருகே காளையின் உருவம், வீரனின் கழுத்தில் சரபலி, இடுப்பில் குறுவாள், கைகளில் வளையல், இடது கையில் வில் தொங்கவிடப்பட்டுள்ளது. வலது கையில் இடுப்பின் கச்சைப்பட்டையின் குருவாளை பிடித்தவாறு முறுக்கும் மீசையுடன் நின்றபடி காட்சியளிக்கிறார்.

    வீரனின் அருகில் உச்சிக்கொண்டையும், கழுத்தில் வட்ட வடிவ வளையமும் அணிந்த வீரனின் மனைவி, மகளின் சிற்பமும் பொறிக்கப்பட்டுள்ளது. அடுக்குநிலை நடுகல் என்பது ஒரு இனக்குழுவை பாதுகாத்து வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக எடுக்கக்கூடிய கல்.

    இங்கு கண்டறியப்பட்ட நடுகல் 2 அடுக்குகளை கொண்டவை. இந்த நடுகல் 1.5 அடி அகலமும், 4 அடி உயரமும் கொண்டவையாக உள்ளது. முதல் அடுக்கில் போருக்கு செல்வதுபோலவும், 2 அடுக்கில் வில்வீரனின் ஆயுதங்கள் கொண்டு குடும்பத்தோடு புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.

    இந்த சிற்பங்களை ஆய்வு செய்த போது கி.பி.17ஆம் நூற்றாண்டில் இப்பகுதியில் இனக்குழு மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்களை அறியமுடிகிறது என்றனர்.

    Next Story
    ×