search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வாக்குச்சாவடி முன்பு திரண்டு நின்ற வாக்காளர்கள்.
    X
    வாக்குச்சாவடி முன்பு திரண்டு நின்ற வாக்காளர்கள்.

    மதுரை மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் ஓட்டுப்பதிவு நேரம் முடிந்த பிறகும் வாக்களித்த பொதுமக்கள்

    மதுரை 38-வது வார்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 5 மணிக்கு பிறகு, வாக்காளர்களுக்கு அனுமதி தரப்படவில்லை. அவர்கள் வண்டியூர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன்பிறகு அவர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டன.

    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று நடந்தது.மதுரை மாவட்டத்தில் பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் மாலை 5 மணி வரை மட்டுமே வாக்குப்பதிவு நடந்தது. இருந்தபோதிலும் 20-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நேரம் முடிந்த பிறகும் வாக்காளர்களுக்கு ஓட்டு போட அனுமதி தரப்பட்டது.

    மேலூர் 4-வது வார்டுக்கு உட்பட்ட வெள்ள நாதன்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளி வாக்குச் சாவடியில் வாக்காளர்களுக்கு 5 மணி வரை டோக்கன்கள் தரப்பட்டன. அதன்பிறகு மீதம் உள்ளவர்களுக்கு அனுமதி தரப்படவில்லை. இதனால் அவர்கள் திருச்சி மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    மதுரை 38-வது வார்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 5 மணிக்கு பிறகு, வாக்காளர்களுக்கு அனுமதி தரப்படவில்லை. அவர்கள் வண்டியூர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன்பிறகு அவர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டன.

    ஜெய்ஹிந்துபுரம் 80-வது வார்டு வாக்குச்சாவடியில் மாலை 5 மணிக்கு பிறகு திரண்டு வந்த வாக்காளர்களுக்கு சாலை மறியல் போராட்டத்திற்கு பிறகு ஓட்டு போட அனுமதி வழங்கப்பட்டது.

    ஜெய்ஹிந்துபுரம் அங்கன்வாடி வாக்குச்சாவடியில் போலீசார்-வாக்காளர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன்பிறகு தேர்தல் அதிகாரிகள் டோக்கன் வழங்கினார்கள்.

    மதுரை 78-வது வார்டு சுந்தரராஜபுரம் டி.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி, அண்ணாநகர் அம்பிகா கல்லூரி (34-வது வார்டு), தெப்பக்குளம் சவுராஷ்டிரா கல்லூரி (35-வது வார்டு), சின்னக்கடை தெரு வாக்குச்சாவடி ஆகிய பகுதிகளிலும் பொது மக்களின் போராட்டத்திற்கு பிறகு வாக்காளர்கள் ஓட்டு போட அனுமதி கொடுக்கப்பட்டது.

    மதுரை மாவட்டத்தில் சில இடங்களில் ஓட்டுப் பதிவு நேரம் முடிந்த பிறகும் வாக்கு பதிவுக்காக போராட்டம் நடத்தப்பட்டது. இருந்தபோதிலும் அதிகாரிகள் அனுமதி மறுத்து விட்டனர்.

    மதுரை அய்யர்பங்களா பாரதி வித்யா மந்திர் பள்ளிக்கூடத்தில் 5 மணிக்கு பிறகும் பொதுமக்கள் ஓட்டுப்போட திரண்டு வந்தனர். அவர்களுக்கு வாக்களிக்க அனுமதி தர வேண்டும் என்று தி.மு.க. வேட்பாளர் கோரிக்கை விடுத்தார். இதற்கு அ.தி. மு.க. வேட்பாளர் எதிர்ப்பு தெரிவித்தார்.

    அங்கு இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சேர்கள், நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டன. இருந்த போதிலும் மாலை 5 மணிக்கு பிறகு ஓட்டு போட வந்தவர்களுக்கு தேர்தல் அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டனர்.

    மேலூர் சந்தைப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் ஓட்டுப்பதிவு நேரம் முடிந்தவுடன் கேட்டுகள் இழுத்து மூடப்பட்டன. அப்போது வாக்களிக்க அனுமதிக்கப்படாத 4 வாலிபர்கள் சுவர் ஏறி குதித்து வாக்குச்சாவடிக்குள் நுழைந்தனர். அவர்களுக்கு வாக்களிக்க அனுமதி தரப்படவில்லை. 4 பேரையும் போலீசார் விரட்டியடித்தனர்.

    திருமங்கலம் 17-வதுவார்டு அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவு எந்திரம் உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு மாலை 5.30 மணி வரை வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. அதன்பிறகு அங்கு வாக்குப்பதிவு நடக்க வில்லை.

    Next Story
    ×