search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திண்டுக்கல் மாநகராட்சியில் அதிமுக வேட்பாளர் முதியவருக்கு சோப்பு போட்ட காட்சி
    X
    திண்டுக்கல் மாநகராட்சியில் அதிமுக வேட்பாளர் முதியவருக்கு சோப்பு போட்ட காட்சி

    வாக்காளர்களை கவர புதுப்புது அவதாரம் - சோப்பு போட்டும், குதிரையில் வந்தும் ஓட்டு சேகரிப்பு

    உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் நிறைவு பெறும் நிலையில் வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளில் போட்டியிடும் அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் கொடுத்தும், உறவுமுறை சொல்லி அழைத்தும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வாக்காளர்களுடன் இணைந்து காய்கறி விற்பது, தேனீர் போடுவது, கோலம் போடுவது, வடை சுடுவது ஆகிய வேலைகளில் ஈடுபட்டு மக்களை கவர்ந்து வருகின்றனர். ஒருபடி மேலே சென்று திண்டுக்கல் 17வது வார்டு பகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அந்த வார்டில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வீட்டு முன்பு குளித்துக் கொண்டிருந்த ஒரு முதியவருக்கு முதுகில் சோப்பு போட்டு ஓட்டு கேட்டார். உங்கள் வீட்டு பிள்ளையாக நான் எப்போதும் இருப்பேன் என கூறினார்.

    திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர் தனது மகனை குதிரையில் அமர வைத்து வார்டுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் சென்று வாக்கு சேகரித்தார்.

    திண்டுக்கல் 2வது வார்டில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளரை ஆதரித்து பின்னனி பாடகர்கள் செந்தில்கணேஷ் அவரது மனைவி ராஜலட்சுமி ஆகியோர் வாக்கு சேகரித்தனர். 

    திண்டுக்கல்லில் சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவாக பின்னணி பாடகர்கள் செந்தில்கணேஷ், ராஜலட்சுமி ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

    இதேபோல மாநகராட்சிக்கு உள்பட்ட அனைத்து பகுதிகளிலும் வேட்பாளர்கள் தங்களுக்கு தெரிந்த பிரபலங்களை வரவழைத்து பிரசாரம் செய்யும் யுத்தியை கையாண்டு வருகின்றனர். பல வார்டுகளில் அரசியல் கட்சியினருக்கு சவால் விடும் வகையில் சுயேட்சை வேட்பாளர்கள் பம்பரம் போல் சுழன்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.

    வத்தலக்குண்டு 10வது வார்டில் போட்டியிடும் 82 வயது மூதாட்டி வெள்ளைத்தாய் தனது ஆதரவாளர்களுடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார். தான் வெற்றி பெறும் பட்சத்தில் உங்கள் பிரச்சினைகளை முன்னின்று நிறைவேற்றுவேன் என சத்தியம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார். அவரது பிரசாரத்தை பார்த்து இளைஞர்களே ஆச்சரியத்தில் உறைந்து போயுள்ளனர்.

    பிரசாரத்திற்கு ஒருநாள் மட்டுமே இருப்பதால் அனைத்து பகுதிகளிலும் அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது. ஒருசில வார்டுகளில் தொடர்ந்து பிரசாரம் செய்து வருவதால் பொதுமக்களே சலிப்படைந்து வருகின்றனர்.
    Next Story
    ×