search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    நெல்லையில் தலை துண்டித்து மேலும் ஒரு வாலிபர் படுகொலை

    நெல்லையில் இன்று காலையில் தலை துண்டித்து மேலும் ஒரு வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    நெல்லை:

    நெல்லையை அடுத்த கோபாலசமுத்திரம் பகுதியில் இரு தரப்பினர் இடையேயான மோதல் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் நேற்றுமுன்தினம் கீழசெவல் நயினார் குளத்தை சேர்ந்த சங்கர சுப்பிரமணியன்(வயது 38) என்பவர் முன்னீர்பள்ளம் அருகே உள்ள வடுவூர்பட்டி டாஸ்மாக் கடை அருகே தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டார்.

    அவரது தலை கோபாலசமுத்திரம் பகுதியில் உள்ள ஒரு கல்லறையில் கண்டெடுக்கப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டு கோபாலசமுத்திரத்தில் மந்திரம் என்பவர் அரசு பஸ்சில் சென்ற போது ஒரு கும்பலால் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்டார். இதற்கு பழிக்குப்பழியாக இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் நெல்லை அருகே உள்ள கோபாலசமுத்திரத்தை அடுத்த பிராஞ்சேரியில் பச்சேரி குளத்தாங்கரையில் இன்று காலை வாலிபர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் முன்னீர்பள்ளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் விரைந்து வந்து பார்வையிட்டார்.

    மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அது மோப்பம் பிடித்தபடி மெயின் ரோடு வரை சென்று விட்டு திரும்பி விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    போலீஸ் விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் கோபாலசமுத்திரத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் மாரியப்பன் (37) என்பது தெரியவந்தது.

    மாரியப்பனின் தலையை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் முன்னீர்பள்ளம் வடுவூர் பட்டி சாலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சங்கர சுப்பிரமணியன் உடல் கிடந்த இடத்தில் மாரியப்பன் தலை கிடந்தது.

    எனவே சங்கரசுப்பிரமணியன் கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இது தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த கொலையால் அப்பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. அப்பகுதியில் மேலும் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தீவிரமாக ரோந்து சுற்றி வருகின்றனர்.
    Next Story
    ×