search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    ரெயில் பாதை
    X
    ரெயில் பாதை

    உசிலம்பட்டி-ஆண்டிப்பட்டி இடையே அதிவேக ரெயில் சோதனை ஓட்டம்

    உசிலம்பட்டி-ஆண்டிப்பட்டி இடையே புதிதாக அமைக்கப்பட்ட அகல ரெயில்பாதையில் அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நாளை மறுநாள் நடக்கிறது.
    தேனி:

    தேனி மாவட்டம் போடி-மதுரை இடையே இயங்கி வந்த மீட்டர்கேஜ் ரெயில், கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் இந்த பாதை, அகல ரெயில்பாதையாக மாற்றும் பணி தொடங்கியது. 90 கிலோமீட்டர் தூரம் உள்ள இந்த ரெயில் பாதையில் ஏற்கனவே மதுரையில் இருந்து உசிலம்பட்டி வரை 37 கிலோமீட்டர் தூரம் அகல ரெயில்பாதை அமைக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் ரெயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

    இதையடுத்து உசிலம்பட்டியில் இருந்து ஆண்டிப்பட்டி வரை 21 கிலோமீட்டர் தூரம் அகல ரெயில்பாதை அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றன. இந்த பாதையில் உள்ள ஆண்டிப்பட்டி கணவாய் பகுதியில் பாறைகள் நடுவே ரெயில் பாதை சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள உசிலம்பட்டி-ஆண்டிப்பட்டி அகல ரெயில் பாதையை மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்தை சேர்ந்த தென்சரக பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் நாளை மறுநாள் (புதன்கிழமை) ஆய்வு செய்கிறார்.

    முதலில் அவர் பாதுகாப்பு ஆணையர், ரெயில்வே அதிகாரிகளுடன் மோட்டார் டிராலியில் பயணம் செய்து ஆய்வு மேற்கொள்வார். அன்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை உசிலம்பட்டியில் இருந்து ஆண்டிப்பட்டி வரை புதிய அகல ரெயில்பாதையில் அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது.

    எனவே இந்த நேரத்தில் பொதுமக்கள் ரெயில் பாதை அருகே செல்லவோ, ரெயில் பாதையை கடக்கவோ முயற்சிக்க வேண்டாம். ரெயில்பாதையில் அருகில் பொதுமக்கள் செல்ல ரெயில்வே நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்த சோதனையில் பாதுகாப்பு ஆணையருடன், மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் வி.ஆர்.லெனின், கட்டுமானத்துறை தலைமைச் செயல் அதிகாரி ரவிந்திரபாபு, முதன்மை பொறியாளர் இளம்பூரணன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
    Next Story
    ×