search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒகேனக்கல் அருவி பகுதி தண்ணீர் இல்லாமல் பாறைகளாக காட்சி அளிக்கிறது.
    X
    ஒகேனக்கல் அருவி பகுதி தண்ணீர் இல்லாமல் பாறைகளாக காட்சி அளிக்கிறது.

    ஒகேனக்கல்லில் வரலாறு காணாத வறட்சி: 2 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழப்பு

    ஒகேனக்கல்லில் வரலாறு காணாத அளவில் காவிரி ஆறு வறண்டு போனதால் சுற்றுலா பயணிகளை நம்பி தொழில் செய்துவந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.
    ஒகேனக்கல்:

    ‘‘நடந்தாய் வாழி காவிரி’’ என இளங்கோவடிகளால் பெருமையோடு பாடப்பட்ட காவிரி ஆறு, அண்டை மாநிலமான கர்நாடகாவில் உற்பத்தியாகி, தமிழகத்தில் பலநூறு மைல்கள் பாய்ந்தோடி பல ஆயிரம் ஏக்கர் விவசாயத்திற்காகவும், கோடிக்கணக்கான மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது.

    காவிரி ஆறு கர்நாடகாவில் பிறந்தாலும், புகுந்த வீடான தமிழகத்தில் அடியெடுத்து வைக்கும் இடமே ஒகேனக்கல் ஆகும்.

    புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வரும் ஒகேனக்கல்லுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா, ஆந்திரா, கேரளா என இந்தியா முழுவதிலும் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் ஒகேனக்கல்லுக்கு படை எடுப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டோ இந்த நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

    வரலாறு காணாத அளவில் காவிரி ஆறு வறண்டு சுடுகாடு போல காட்சி அளிப்பதால் சுற்றுலா பயணிகள் யாருமே ஒகேனக்கல்லை எட்டிக்கூட பார்ப்பது இல்லை.

    காவிரியில் தண்ணீர் வரத்து முற்றிலும் சரிந்த நிலையில், வெள்ளம் பெருக்கெடுத்து பாய்ந்த அருவிகள் வெறும் பாறைக்காடாக தென்படுகின்றன.

    கடும் வறட்சியான காலங்களிலும் கொஞ்சமாக தண்ணீர் வந்து கொண்டு இருந்த மெயின் அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் வந்த சுவடே இல்லாத அளவுக்கு வறண்டு கிடக்கிறது. பாறை இடுக்குகளில் குட்டைபோல தேங்கி கிடக்கும் தண்ணீரும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை முற்றிலும் குறைந்து விட்டது. இதன் காரணமாக, விடுமுறை தினங்களில், சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் அலைமோதும் ஒகேனக்கல், நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.

    சுற்றுலா பயணிகளை நம்பி தொழில் செய்து வந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டது.



    ஒகேனக்கல் சுற்றுலா தலத்தை நம்பி ஆயில் மசாஜ் செய்பவர்கள் 300-க்கும் மேற்பட்டோர், படகு ஓட்டுபவர்கள் 400-க்கும் மேற்பட்டோர், சுற்றுலா பயணிகளுக்கு உணவுகள் சமைத்து கொடுக்க 300-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் என 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.



    இதுதவிர அங்கேயே மீன் பிடித்து, மீனை சுத்தம் செய்து தனிச்சுவையோடு சமைத்து கொடுக்கும் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் உள்ளனர்.

    இங்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் உள்ள தங்கும் விடுதி மற்றும் 25-க்கும் மேற்பட்ட தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதிகள், தனித்தன்மை வாய்ந்த காட்டேஜ்கள், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டு தற்போது பொதுப்பணி துறை மூலம் பராமரிக்கப்பட்டு வரும் தங்கும் விடுதிகள் ஆகியவை உள்ளன.

    மேலும், ஒகேனக்கல் பகுதியை சுற்றிலும், சின்னதும், பெரியதுமாக 120 கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தினமும் சுற்றுலா பயணிகளை நம்பி வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் தற்போது ஒகேனக்கல் காவிரி தண்ணீர் இன்றி வறண்ட பாறைகளாக காட்சி அளிக்கிறது. இதனால் களை இழந்து காணப்படும் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் அங்கு வாழும் தொழிலாளர்கள் தினசரி வாழ்க்கையை ஓட்டுவதற்கே தடுமாறி வருகின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் கூறியதாவது:-

    சுற்றுலா பயணிகளை நம்பியே நாங்கள் வாழ்க்கை நடத்தி வருகிறோம். ஒகேனக்கல்லில் எந்த வறட்சி காலத்திலும் சுமார் 10 அடி உயரத்திற்கும் குறையாமல் தமிழக-கர்நாடக கரைகளை தொட்டப்படி தண்ணீர் பாய்ந்து கொண்டிருக்கும். 50-க்கும் மேற்பட்ட அருவிகளாக பாறைகளின் இடுக்கில் தண்ணீர் பாய்ந்து ஓடும்.

    தற்போது வறட்சியின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை. இதுபோன்ற வறட்சி எங்களது காலத்தில் இதுவரை பார்த்ததே இல்லை. தண்ணீர் வரத்து முற்றிலும் நின்று விட்ட காரணத்தினால் சுற்றுலா பயணிகளின் வரத்தும் அடியோடு குறைந்து விட்டது.

    உச்சநீதிமன்றம் உத்தரவின்படி கர்நாடகம் தண்ணீர் திறந்து விட்டிருந்தால் சுற்றுலா பயணிகளின் மகிழ்ச்சி மட்டும் அல்ல, உள்ளூர்வாசிகளின் வாழ்வாதாரமும் சீராக இருந்திருக்கும்.

    எனவே தமிழக அரசு கடற்கரை மீனவர்களுக்கு மீன்பிடி தடை காலத்தில் அரசு உதவி தொகை வழங்குவது போல் ஒகேனக்கல்லை நம்பி வாழும் தொழிலாளர்களுக்கும் உதவித்தொகையை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.




    Next Story
    ×