search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலி ஆணை மூலம் வேலையில் சேர்ந்த ஆசிரியர்கள் யார், யார்? -  2012 முதல் ஆவணங்கள் ஆய்வு
    X

    போலி ஆணை மூலம் வேலையில் சேர்ந்த ஆசிரியர்கள் யார், யார்? - 2012 முதல் ஆவணங்கள் ஆய்வு

    திருவண்ணாமலை மாவட்டத்தில் போலி ஆணை மூலம் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் யார்-யார்? என்று கண்டறிய 2012-ம் ஆண்டு முதலான ஆவணங்கள் சரிபார்க்கப்படுகிறது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி இரும்புலி கிராமத்தை சேர்ந்த மகேஸ்வரி (வயது 36) போலி நியமன ஆணை கொடுத்து வந்தவாசி பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர முயன்றபோது கைதானார்.

    தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ஆவணியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் பட்டதாரி ஆசிரியை முத்துலட்சுமி, அவரது தங்கை வடமணப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி வரலாறு ஆசிரியை புனிதவதி, மேல்மட்டை விண்ணமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியர் விஜயகுமார் ஆகியோர் போலி பணி நியமன ஆணை கொடுத்து பணியில் சேர்ந்துள்ளது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 3 பேரும் தலைமறைவாகினர். முத்துலட்சுமி, புனிதவதி ஆகியோர் போலி பணி நியமன ஆணை வழங்கி பணியில் சேர உடந்தையாக இருந்த முத்துலட்சுமியின் கணவரும், தலைமை ஆசிரியருமான (பொறுப்பு) சக்திவேல் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    கைதான மகேஸ்வரியிடம் ரூ.3½ லட்சம் வாங்கிக்கொண்டு போலி ஆணை கொடுத்த அரசு பள்ளியில் பணிபுரிந்து தற்போது ஆரணி அருகேயுள்ள விளை அரசுப்பள்ளியில் மாற்றுப்பணியாக (டெபுடேசன்) பணிபுரிந்து வரும் தமிழ் ஆசிரியர் சக்கரபாணி நேற்று சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    சக்கரபாணி மீது விழுப்புரத்தை சேர்ந்த ஆசிரியை வசந்தா, நீலகிரியை சேர்ந்த ஆசிரியை காந்திமதி, கலசபாக்கம் மேல்பாலூரை சேர்ந்த பாண்டு, ஆரணியை சேர்ந்த ரவிசங்கர் ஆகியோரும் புகார் அளித்துள்ளனர்.

    தங்களுக்கு போலி பணி நியமன, மாறுதல் ஆணை வழங்க சக்கரபாணிக்கு பல லட்சம் ரூபாய் கொடுத்ததாக அவர்கள் தங்கள் புகாரில் கூறி உள்ளனர். அவர்களின் புகார் மனுக்கள் குறித்து விசாரணை நடத்த காவல்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    இவர்களைப்போல பலர் ஏமாற்றப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவர்கள் யார்-யார்? என்பதை கண்டறிய கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    இது பற்றி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஜெயக்குமார் கூறியதாவது:-

    போலி பணி நியமன, மாறுதல் ஆணை மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்னும் சிலர் பணியில் இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். எனவே கடந்த 2012-ம் ஆண்டு முதல் பணியில் சேர்ந்த ஆசிரியர்களின் பணி நியமன ஆணைகள், மாறுதல் ஆணைகள் மற்றும் கல்வி சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது.

    ஒருவேளை அவ்வாறு கண்டறிப்பட்டால் அவர்கள் மீது வழக்கு தொடரப்படும். துறை வாரியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்கள் பணியில் சேர்ந்தது முதல் பெற்ற சம்பள தொகை திரும்ப பெற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு முதன்மை கல்வி அதிகாரி ஜெயக்குமார் கூறினார்.
    Next Story
    ×