search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாப்பிரெட்டிப்பட்டி அருகே மாணவிகளுக்கு செல்போனில் ஆபாச படம் காட்டிய ஆசிரியர் பணி இடைநீக்கம்
    X

    பாப்பிரெட்டிப்பட்டி அருகே மாணவிகளுக்கு செல்போனில் ஆபாச படம் காட்டிய ஆசிரியர் பணி இடைநீக்கம்

    பாப்பிரெட்டிப்பட்டி அருகே அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு செல்போனில் ஆபாச படம் காட்டிய ஆசிரியரை பணி இடைநீக்கம் செய்து தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி உத்தரவிட்டார்.

    பொம்மிடி:

    தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மோளையானூரில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியராக கவுதமன் இருந்து வருகிறார். இங்கு ஆங்கில ஆசிரியராக பையர்நத்தம் கிராமத்தை சேர்ந்த முருகன் பணியாற்றி வருகிறார். இவர் 8-ம் வகுப்பு மாணவிகள் 2 பேரை தனியாக அழைத்து செல்போனில் ஆபாச படங்கள் காட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் வீட்டுக்கு சென்று பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியர் கவுதமனிடம் நடந்த சம்பவம் குறித்து புகார் தெரிவித்தனர்.

    இதுகுறித்து தலைமை ஆசிரியர், தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரிக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் ஆங்கில ஆசிரியர் முருகனை கோட்டப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இடமாறுதல் வழங்கி முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

    இந்தநிலையில் நேற்று மாணவிகளின் பெற்றோர் மற்றும் ஊர்பொதுமக்கள் பள்ளிக்கு வந்து ஆசிரியர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர் கவுதமன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களிடம் புகார் மனு கொடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கலெக்டர் விவேகானந்தன் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

    அதன்பேரில் நேற்று அரூர் உதவி கலெக்டர் (பொறுப்பு) இலாகிஜான், பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் மணி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பள்ளிக்கு சென்றனர். வருவாய்த்துறை அதிகாரிகள் புகார் கூறிய மாணவிகள், தலைமை ஆசிரியர், ஆசிரிய-ஆசிரியைகள் மற்றும் பள்ளி மாணவிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது பொதுமக்கள், ஆசிரியர் முருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் வலியுறுத்தினர். இதுதொடர்பான அறிக்கை கலெக்டர் விவேகானந்தன், மாவட்ட முதனமை கல்வி அலுவலர் மகேஸ்வரி ஆகியோரிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் அளித்தனர்.

    இந்தநிலையில் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டிய ஆங்கில ஆசிரியர் முருகனை பணி இடைநீக்கம் செய்ய கலெக்டர் விவேகானந்தனுக்கு, தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி பரிந்துரை செய்தார். இதையடுத்து ஆசிரியர் முருகனை பணி இடைநீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி நேற்று உத்தரவிட்டார். இந்த விவகாரம் ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×