search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகலா புஷ்பா எம்.பி. மீது பாலியல் புகார் கொடுத்த பெண் கடத்தப்பட்டாரா?
    X

    சசிகலா புஷ்பா எம்.பி. மீது பாலியல் புகார் கொடுத்த பெண் கடத்தப்பட்டாரா?

    சசிகலா புஷ்பா எம்.பி. மீது பாலியல் புகார் கொடுத்த பெண் கடத்தப்பட்டிருக்கலாம் என அவருடைய சகோதரி திசையன்விளை போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளையை அடுத்த ஆனைகுடியை சேர்ந்தவர் கருப்பசாமி. அவருடைய மனைவி பானுமதி. அவரும், அவருடைய சகோதரி ஜான்சிராணியும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்தனர்.

    அந்த புகாரில், சசிகலா புஷ்பா எம்.பி. வீட்டில் வேலை பார்த்த போது, அவருடைய குடும்பத்தினரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக பானுமதி தெரிவித்து இருந்தார். அதன் பேரில் தூத்துக்குடி புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார், சசிகலா புஷ்பா எம்.பி, அவருடைய கணவர் லிங்கேசுவர திலகன், மகன் பிரதீப் ராஜா, தாய் கவுரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் பானுமதியும், அவருடைய சகோதரி ஜான்சிராணியும் புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு ஒரு மனுவை அனுப்பினர். அதில் சசிகலா புஷ்பா எம்.பி. மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக குறிப்பிட்டிருந்தனர்.

    அந்த மனுவின் உண்மை தன்மையை அறியும் வகையில், அதில் உள்ள கையெழுத்து, சம்பந்தப்பட்ட புகார்தாரரின் கையெழுத்துதானா? என்பது குறித்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக புகார்தாரர்களான பானுமதி, ஜான்சிராணி ஆகியோர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். அந்த சம்மனை ஆனைகுடியில் உள்ள அவர்களது வீட்டில் போலீசார் ஒட்டி இருக்கிறார்கள்.

    இந்த நிலையில் புகார்தாரர்களில் ஒருவரான ஜான்சிராணி, திசையன்விளை போலீஸ் நிலையத்திற்கு நேற்று வந்தார். அவர் போலீசாரிடம் அளித்த புகாரில், “எனது சகோதரி பானுமதியை காணவில்லை. அவரை அடைக்கலாபுரத்தைச் சேர்ந்த ஒருவர் கடத்திச் சென்றிருக்கலாம். அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என கூறப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து திசையன்விளை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனால் இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை. சசிகலா புஷ்பா எம்.பி. மீதான வழக்கை வாபஸ் பெற மனு கொடுத்த பெண் கடத்தப்பட்டிருப்பதாக தகவல் பரவியதால் திசையன்விளை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஷ் கூறும் போது, “பானுமதி, ஜான்சிராணி ஆகியோர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. அவர்கள் புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜர் ஆகலாம். அவர்கள் வர இயலாத நிலையில் போலீசார் நேரில் சென்று பானுமதி, ஜான்சிராணியிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற நடவடிக்கை எடுக்கப்படும்“ என்று கூறினார்.
    Next Story
    ×