search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் ரூ. 50 ஆயிரம் கேட்டு கடத்தப்பட்ட சிறுவன் மீட்பு: 2 பேர் கைது
    X

    கோவையில் ரூ. 50 ஆயிரம் கேட்டு கடத்தப்பட்ட சிறுவன் மீட்பு: 2 பேர் கைது

    கோவையில் ரூ. 50 ஆயிரம் கேட்டு கடத்தப்பட்ட சிறுவன் மீட்கப்பட்டான். இதுதொடர்பாக வீட்டு வேலைக்கார பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கோவை:

    திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பழனி சிவக்குமார் (வயது 43). இவர் அந்த பகுதியில் பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது மகன் இனியன் (4½).

    பழனி சிவக்குமார் தனது மகனை கோவை ராமநாதபுரம் சுப்பிரமணியம் லே-அவுட்டில் வசித்து வந்த தனது சகோதரி அமுதா (33) என்பவரின் பராமரிப்பில் படிப்பதற்காக விட்டு இருந்தார். இனியன் தனது அத்தை வீட்டில் தங்கி இருந்து அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் யு.கே.ஜி. படித்து வந்தான்.

    சம்பவத்தன்று வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்த இனியன் திடீரென மாயமானான். இதனால் அதிர்ச்சியடைந்த அமுதா இனியனை அக்கம்பக்கத்தில் தேடியும் எந்த பலனும் இல்லை.

    இந்தநிலையில் அமுதாவின் செல்போனுக்கு பொது தொலைபேசியில் இருந்து ஒரு போன் வந்தது. அதில் பேசிய பெண் ஒருவர் உங்கள் மருமகன் தன்னிடம் தான் உள்ளான் என்றும், அவனை கடத்தி வைத்து இருப்பதாகவும் ரூ. 50 ஆயிரம் பணம் கொடுத்தால் விட்டு விடுவதாகவும் கூறி போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

    இதில் அதிர்ச்சியடைந்த அமுதா அந்த பொது தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டார். அப்போது அதில் பேசிய பொது தொலைபேசி உரிமையாளரிடம் நடந்த சம்பவங்களை கூறினார்.

    அப்போது அவர் இங்கு குழந்தையுடன் 2 பெண்கள் இருப்பதாக கூறினார். தொலைபேசி உரிமையாளர் பேசியதை பார்த்து உஷாரான அந்த பெண்கள் இனியனை அங்கே விட்டு விட்டு தப்பிச் சென்றனர்.

    பின்னர் அமுதா உடனடியாக பொது தொலைபேசி உள்ள இடத்துக்கு விரைந்து சென்று இனியனை மீட்டார்.

    பின்னர் இது குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜெயராமன் வழக்குப்பதிவு செய்து இனியனை கடத்திய ராமநாதபுரத்தை சேர்ந்த முனியப்பன் என்பவரது மனைவி காமாட்சி (54), அதே பகுதியை சேர்ந்த பாபு என்பவரது ஜெரினா பானு (45) ஆகியோரை கைது செய்தனர்.

    பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் காமாட்சி என்பவர் கடந்த 4 வருடங்களாக அமுதாவின் வீட்டில் வேலை செய்து வந்ததும், பணத் தேவை காரணமாக அந்த பகுதியில் இட்லி கடை நடத்தி வந்த ஜெரினா பானு என்பவருடன் சேர்ந்து குழந்தையை கடத்தியதும் தெரிய வந்தது.

    அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×