search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    6 வயது சிறுமியை கொன்ற என்ஜினீயருக்கு தூக்குத்தண்டனை வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
    X

    6 வயது சிறுமியை கொன்ற என்ஜினீயருக்கு தூக்குத்தண்டனை வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

    6 வயது சிறுமியை கொலை செய்த என்ஜினீயருக்கு தூக்குத்தண்டனை வழங்கக்கோரி ஏராளமான பெண்கள் உள்பட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    பூந்தமல்லி:

    6 வயது சிறுமியை கொலை செய்த என்ஜினீயருக்கு தூக்குத்தண்டனை வழங்கக்கோரி ஏராளமான பெண்கள் உள்பட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த திருமாவளவன், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.

    காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த மதனந்தபுரம் மாதா நகர், 10-வது குறுக்கு தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பாபு(வயது 34). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், பெருங்களத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஸ்ரீதேவி. இவர், தனியார் பள்ளி ஆசிரியை.

    இவர்களுடைய மகள் ஹாசினி(6), தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 5-ந்தேதி வீட்டின் முன் விளையாடிக்கொண்டு இருந்த ஹாசினி அதன் பிறகு மாயமானாள். இது குறித்த புகாரின்பேரில் மாங்காடு போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வந்தனர்.

    விசாரணையில் அதே குடியிருப்பில் வசிக்கும் தஷ்வந்த்(23) என்ற சாப்ட்வேர் என்ஜினீயர்தான் சிறுமி ஹாசினியை தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதும், அப்போது சிறுமி கூச்சலிட்டதால் அவளை போர்வையால் உடல் முழுவதும் சுற்றியதில் அவள் மூச்சுத்திணறி இறந்து விட்டதும் தெரிந்தது.

    பின்னர் சிறுமியின் உடலை, அனகாபுத்தூர் அருகே முட்புதரில் வீசி தீ வைத்து எரித்ததும் தெரியவந்தது. இதையடுத்து தஷ்வந்தை போலீசார் கைது செய்தனர். அவர் மீது கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.

    இந்தநிலையில் சிறுமியை கொலை செய்த தஷ்வந்துக்கு ஜாமீன் வழங்கக்கூடாது. அவருக்கு ஆதரவாக வக்கீல்கள் யாரும் கோர்ட்டில் ஆஜராகக்கூடாது. அதிகபட்ச தண்டனையாக அவருக்கு தூக்குத்தண்டனை வழங்கக்கோரி மதனந்தபுரம் மாதா நகரில் நேற்று 200-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட பொதுமக்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் உதவி கமிஷனர் கண்ணன் தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்து, அங்கிருந்து ஊர்வலமாக நடந்து சென்று குன்றத்தூர்- போரூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் குன்றத்தூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    அப்போது அந்த வழியாக வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சாலை மறியலில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமரசம் செய்து வைத்தார். அதன் பின்னர் சாலை மறியலை கைவிட்டு பெண்கள் உள்பட அனைவரும் கலைந்து சென்றனர்.

    பின்னர் நிருபர்களிடம் திருமாவளவன் கூறும்போது, “கொடூரமான முறையில் சிறுமியை கொலை செய்ததை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். இந்த வழக்கை மற்ற வழக்குகள் போல விசாரிக்காமல் சிறப்பு கவனம் செலுத்தி விசாரிக்க வேண்டும். இந்த கொலை குற்றவாளிக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று இப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். குற்றவாளி சிறையில் இருக்கும்போதே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விரைவில் தண்டனை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

    இதற்கிடையில் பிரேத பரிசோதனை முடிந்து சிறுமி ஹாசினியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. சிறுமியின் உடல் அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு கூடி இருந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி ஆசிரியைகள், மாணவர்கள் என அனைவரும் சிறுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

    தனது மகளின் உடலை பார்த்து அவரது பெற்றோர் கதறி அழுத காட்சி பார்ப்போரின் நெஞ்சை உருக்குவதாக இருந்தது. இதனால் அந்த பகுதியே சோகத்தில் மூழ்கி கிடந்தது. 
    Next Story
    ×