search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு
    X

    கோவையில் அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு

    ஓ.பன்னீர்செல்வம் பேட்டியை தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க கோவையில் உள்ள அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    கோவை:

    முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியை தொடர்ந்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

    ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

    இந்தநிலையில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

    கோவை மாநகரில் நேற்று இரவு முதலே அ.தி.மு.க. மாவட்ட அலுவலகமான இதயதெய்வம் மாளிகை முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ரேஸ்கோர்ஸ், காந்திபுரம், சிங்காநல்லூர், ஆர்.எஸ்.புரம், உக்கடம், ராமநாதபுரம் உள்பட நகரின் முக்கிய இடங்களில் போலீசார் ரோந்து சுற்றி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், ரெயில் நிலையம், பூங்காக்கள் உள்பட முக்கிய இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் கோவை வ.உ.சி. மைதானத்தில் கடந்த 17-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை போராட்டம் நடத்தினர். மாணவர்கள் போராட்டம் முடிந்த பின்னரும் வ.உ.சி. மைதானம் தொடர்ந்து போலீஸ் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது. பொதுமக்களும் கூட அங்கு அனுமதிக்கப்படவில்லை. கடந்த 5-ந் தேதி வ.உ.சி. மைதானத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்பு விலக்கப்பட்டது. அங்கு வழக்கம் போல பொது மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு முதல் மீண்டும் வ.உ.சி. மைதானம் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மைதானத்தை சுற்றி தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளே செல்ல யாரும் அனுமதிக்கப்படவில்லை. மைதானத்தை சுற்றி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


    இதேபால மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், வால்பாறை உள்பட பல்வேறு பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ரோந்து வாகனங்களில் சென்று போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×