search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சப்-இன்ஸ்பெக்டர் மீது ஆட்டோ டிரைவர் புகார்
    X

    சப்-இன்ஸ்பெக்டர் மீது ஆட்டோ டிரைவர் புகார்

    பொள்ளாச்சியில் புகார் கொடுக்க சென்ற ஆட்டோ டிரைவரது மனைவியை அபகரித்த சப்-இன்ஸ்பெக்டர் மீது டிரைவர் புகார் அளித்துள்ளார்.
    பொள்ளாச்சி:

    கோவை பொள்ளாச்சி நேருகாலனியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(வயது 34). ஆட்டோ டிரைவர்.

    இவர் நேற்று மாலை தனது 11 வயது மகன், மகளுடன் பொள்ளாச்சி காந்தி சிலை முன்பு வந்தார். அவர் திடீரென கையில் கொண்டு வந்த கேனில் இருந்த மண்எண்ணையை எடுத்து உடல் முழுவதும் ஊற்றினார். தன்னுடைய குழந்தைகள் மீதும் மண் எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொது மக்கள் கிருஷ்ணமூர்த்தியை தடுத்து நிறுத்தி அவரிடம் இருந்த மண்எண்ணை கேனை பறித்தனர். பின்னர் அவர் மீதும், குழந்தைகள் மீதும் தண்ணீரை ஊற்றி அவர்களை சமாதானப்படுத்தினர்.

    அப்போது கதறி அழுத கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:- கடந்த ஓராண்டுக்கு முன்பு நானும், எனது மனைவியும் பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு ஒரு வழக்கு தொடர்பாக சென்றோம். அங்கு பணியில் இருந்த தலைமை காவலர் ஒருவர் சமரசம் செய்து வைப்பதாக கூறினார்.

    இதுதொடர்பாக அடிக்கடி என் மனைவியை சந்தித்து பேசி வந்தார். இதனால் இருவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டது. அதன் பிறகு என் மனைவி என்னையும், குழந்தைகளையும் பிரிந்து சென்று விட்டாள். தலைமை காவலர் தவிர அவருடன் பணிபுரியும் பல போலீசாரும் என் மனைவியுடன் தொடர்பு வைத்துக் கொண்டு என்னுடன் வாழ விடாமல் தடுக்கின்றனர்.

    என் மனைவியை அபகரித்த தலைமை காவலர் தற்போது ஆனைமலை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். தற்போது எனது மனைவி எங்களை விட்டு பிரிந்து வசியாபுரத்தில் வசித்து வருகிறார். அவரை குடும்பம் நடத்த வருமாறு கூப்பிட சென்றால் போலீசார் என்னை மிரட்டி வருகின்றனர்.

    மேலும், என் மீது பொய் வழக்கு போட்டு விடுவதாக கூறுகின்றனர். இதுகுறித்து பல முறை போலீஸ் நிலையங்களில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தான் கோர்ட்டு அருகே உள்ள சாலையில் தீக்குளிக்க முயன்றேன் என கதறினார்.

    மனைவியை போலீசார் அபகரித்ததாக கூறி தற்கொலைக்கு முயன்ற கிருஷ்ண மூர்த்தியுடன் வந்த அவரது 11 வயது மகன் 5 பக்க கடிதம் எழுதி வைத்திருந்தான்.

    அதில் ‘எனது அம்மாவுக்கும், பல போலீஸ்காரர்களுக்கும் தொடர்பு உள்ளது. இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தும் பலனில்லை. எங்களுக்கு எங்கும் நீதி கிடைக்கவில்லை. நீதிமன்றம் தான் நீதி வழங்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.

    சம்பவஇடத்திற்கு வந்த போலீசார் கிருஷ்ணமூர்த்தியின் புகார் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து அவர் குழந்தைகளுடன் வீட்டுக்கு சென்றார்.

    கிருஷ்ணமூர்த்தி புகார் தொடர்பாக பொள்ளாச்சி டி.எஸ்.பி.நீலகுமார் விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரம்ய பாரதி உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் டி.எஸ்.பி. நீல குமார் இன்று கிருஷ்ண மூர்த்தியின் வீட்டுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார். அவர் விசாரித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு அறிக்கை அளிக்க உள்ளார். அதன்பேரில் புகாருக்குள்ளான போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
    Next Story
    ×