search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடியாத்தம் அருகே 2 பெண்கள் பலி: பன்றிக்காய்ச்சல் பாதித்த பகுதியில் மருத்துவக்குழு முகாம்
    X

    குடியாத்தம் அருகே 2 பெண்கள் பலி: பன்றிக்காய்ச்சல் பாதித்த பகுதியில் மருத்துவக்குழு முகாம்

    குடியாத்தம் அருகே பன்றிக்காய்ச்சலுக்கு 2 பெண்கள் பலியாயினர். எனவே பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் மருத்துவக்குழு தொடர்ந்து முகாமிட்டு சிகிச்சை அளித்து வருகிறது.
    குடியாத்தம்:

    குடியாத்தம் சந்தப்பேட்டை சிவகாமி அம்மன் தெருவை சேர்ந்த நாகம்மாள் (வயது 50), விஜயலட்சுமி (50) மற்றும் 22 பேர் கடந்த 17-ந் தேதி கேரளாவுக்கு ஆன்மீக சுற்றுலா சென்றனர்.

    அப்போது சிலருக்கு வாந்தி, மயக்கம், இருமல், காய்ச்சல் ஏற்பட்டது. அவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.

    அவர்களில் நாகம்மாள், விஜயலட்சுமி ஆகியோர் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தனர். அவர்கள் பன்றிக் காய்ச்சல் பாதித்து உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    பன்றி காய்ச்சலுக்கு 2 பெண்கள் பலியானதை தொடர்ந்து கலெக்டர் ராமன் உத்தரவின்பேரில் சந்தப் பேட்டை பகுதிக்கு மருத்துவக்குழு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த குழுவினர் சந்தப்பேட்டை சிவகாமி அம்மன் தெரு, மேட்ஸ் பேக்டரி தோப்புத்தெரு ஆகிய இடங்களில் 3 பிரிவுகளாக பிரிந்து முகாமிட்டு சிகிச்சை அளித்தனர்.

    முக்கியமாக தற்போது பலியாகி உள்ள விஜயலட்சுமி, நாகம்மாளுடன் சுற்றுலா சென்று திரும்பியவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட் டது. நோய் தடுப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டது. பலியானவர்களின் உறவினர்கள், பக்கத்து வீட்டை சேர்ந்தவர்களுக்கும் தடுப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டது.

    தற்போது அந்த பகுதியில் யாருக்கும் பன்றி காய்ச்சல் பாதிப்பில்லை. இருந்தபோதிலும் மருத்துவக்குழுவினர் தொடர்ந்து சந்தப்பேட்டை பகுதியில் முகாமிட்டு சிகிச்சை மற்றும் நோய் தடுப்பு ஆலோசனைகள் வழங்கி வருகிறார்கள்.

    வீடு வீடாக நில வேம்பு கசாயமும் வழங்கப்பட்டு வருகிறது. சாதாரண நோய் அறிகுறி ஏற்பட்டாலே அந்த பகுதி மக்கள் மத்தியில் அது பன்றி காய்ச்சல் அறிகுறியாக இருக்குமோ என்ற அச்சம் நிலவுகிறது.

    திருவண்ணாமலை மாவட் டம் தண்டராம்பட்டு தாலுகா தென்கரும்பலூரை சேர்ந்த சரவணன் மகள் ஸ்ரீநிதி (11) மர்மக்காய்ச்சலால் இறந்தார். இதேபோன்று வாழவச்சனூர் செட்டிதெருவை சேர்ந்த பானு (2) சாதனா (5) ஆகிய 2 சிறுமிகளும் மர்ம காய்ச்சலுக்கு உயிரிழந்தனர்.

    எனவே அந்த பகுதிகளிலும் சுகாதாரத்துறை அலுவலர்கள் முகாமிட்டு குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களின் உடல் நிலையை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். மக்களிடையே அச்சம் நிலவுவதால் தொடர்ந்து அங்கு சுகாதாரத்துறையினர் முகாமிட்டு உள்ளனர்.
    Next Story
    ×