search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலவரத்தில் ஈடுபட்ட 195 பேர் கைது: தப்பி ஓடிய 100 பேரை பிடிக்க வேட்டை
    X

    கலவரத்தில் ஈடுபட்ட 195 பேர் கைது: தப்பி ஓடிய 100 பேரை பிடிக்க வேட்டை

    சென்னையில் மெரீனா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த கலவரத்தில் 195 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய 100 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    சென்னை:

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சென்னையில் மெரீனா கடற்கரையில் லட்சக்கணக்கான மாணவர்களும், இளைஞர்களும் ஒன்று கூடி அமைதியான முறையில் அறவழி போராட்டத்தை நடத்தினர். 7 நாட்களாக தொடர்ந்த இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர போலீசார் பல கட்டங்களாக பேச்சு நடத்தினர். இதில் உடன்பாடு எட்டப்படாமலேயே இருந்தது.

    ஜல்லிக்கட்டுக்காக தமிழக அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்த பின்னரும் போராட்டம் தொடர்ந்ததால், அதனை முடிவுக்கு கொண்டு வர கடந்த 23-ந்தேதி போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். மெரீனாவில் திரண்ட இளைஞர்களும், மாணவர்களும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மாநகரம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மறியல் நடந்தது. இந்த போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது.

    மாணவர்களுக்கு ஆதரவாக நடந்த இந்த போராட்ட களத்தில் சமூக விரோத கும்பல் ஊடுருவியது. ஐஸ் அவுஸ், திருவல்லிக்கேணி, அரும்பாக்கம், வடபழனி, வியாசர்பாடி உள்ளிட்ட இடங்களில் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்ட கலவரக்காரர்கள், போலீஸ் வாகனங்களை தீவைத்து எரித்தனர்.

    கலவரத்தின் உச்சக்கட்டமாக ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையம் தீக்கிரையாக்கப்பட்டது. பொதுச் சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டன.

    மாணவர்களின் போராட்டத்தை பயன்படுத்தி குறிப்பிட்ட சில அமைப்புகளை சேர்ந்தவர்களே கலவரத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 7 சமூக விரோத அமைப்புகளுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தின் வன்முறையில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள்.

    நேற்று முன்தினம் வரையில் 85 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கைது நட வடிக்கை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று இரவு வரையில் 195 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கலவரத்தில் ஈடுபட்டவர்களை வீடியோ காட்சிகள் மூலமாக போலீசார் அடையாளம் கண்டு வருகிறார்கள்.

    இதுபோன்று அடையாளம் காணப்பட்டவர்கள் மேலும் நூற்றுக்கணக்கில் உள்ளனர். தலைமறைவாக உள்ள அவர்களை தேடிக் கண்டுபிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.

    இதற்கிடையே போலீசாரே ஆட்டோக்களுக்கு தீவைப் பது போன்ற வீடியோ காட்சிகள் பற்றியும் தனிப் படை போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதன் முடிவில் போலீசார் வன்முறையில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×