search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயிலை சேதப்படுத்திய 150 பேர் மீது வழக்கு
    X

    ரெயிலை சேதப்படுத்திய 150 பேர் மீது வழக்கு

    சேலத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ரெயிலை சேதப்படுத்திய 150 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    சேலம்:

    ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கோரி சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாணவர்கள், இளைஞர்கள் உள்பட பலர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த 19-ந் தேதி மாணவர்கள் பெங்களூரு- காரைக்கால் பயணிகள் ரெயிலை சிறைபிடித்தனர்.

    நேற்று முன்தினம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ரெயில் மீட்கப்பட்டு சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அந்த ரெயிலை ரெயில்வே பொறியாளர்கள் ஆய்வு செய்தனர்.

    இதில் ரெயில் என்ஜின், ரெயில் பெட்டிகளின் கண்ணாடி உடைக்கப்பட்டும், இருக்கைகள் கிழித்தும் சேதப்படுத்தப்பட்டிருந்தன. இதன் சேதமதிப்பு சுமார் ரூ.68 லட்சம் என்று முதற்கட்ட ஆய்வில் தெரியவந்தது.

    இந்த ரெயில் என்ஜின் பராமரிப்பு பணிக்காக கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜபுரம் ரெயில் லோகோ செட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது. 16 ரெயில் பெட்டிகளும் பெங்களூரு அருகே உள்ள யஸ்வந்த்பூர் ரெயில் பெட்டிகள் பராமரிப்பு பணிமனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    இந்த நிலையில் ரெயிலை சேதப்படுத்தியது தொடர்பாக 150 பேர் மீது சேலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தடை செய்யப்பட்ட பகுதியில் தண்டவாளத்தை கடந்து செல்லுதல், ரெயில் மறியல் செய்தல், ரெயிலுக்கு இடையூறாக தண்டவாளத்தில் கற்கள் வைத்தல், ரெயிலை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் இந்த வழக்கு சேலம் மாநகர போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளதால், அவர்கள் இதுதொடர்பாக மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே நேற்று ரெயில்வே ஊழியர்கள் தண்டவாள பகுதியில் சீரமைப்பு பணிகளில் மேற்கொண்டனர்.

    இது குறித்து மாநகர போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில், ‘ரெயிலை சேதப்படுத்தியது மாணவர்களா?, அல்லது சமூக விரோதிகளா? என விசாரித்து வருகிறோம். ரெயில் நிறுத்தப்பட்டது முதல் மீட்கப்பட்டது வரை வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோ மூலம் ரெயிலை சேதப்படுத்தியது யார்? என்பதை ஆராய்ந்து வருகிறோம். ரெயில் சேதப்படுத்தியதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர். 
    Next Story
    ×