search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கானார்பட்டியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பாசிப்பயிர்களை அமைச்சர் ராஜலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி.
    X
    கானார்பட்டியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பாசிப்பயிர்களை அமைச்சர் ராஜலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி.

    நெல்லை மாவட்டத்தில் வறட்சியால் பாதித்த விவசாய நிலங்களில் அமைச்சர்- அதிகாரிகள் குழு ஆய்வு

    நெல்லை மாவட்டத்தில் வறட்சியால் பாதித்த விவசாய நிலங்களில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் குழு ஆய்வு செய்தனர்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் விவசாயிகள் நெல், வாழை, பாசிபயிர் உளுந்து உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து இருந்தனர். இந்நிலையில் பருவமழை பெய்யாமல் ஏமாற்றிவிட்டதாலும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் வளர்ந்த நிலையில் தண்ணீரின்றி கருகி வருகின்றன.

    இதனால் விவசாயிகள் வாங்கிய கடனை எப்படி அடைப்பது என்று தெரியாமலும், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாலும் விவசாயிகள் தவித்து வரும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதே போல தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்து விட்டனர். இதனை தடுக்க தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பித்து உள்ளது.

    அதன் அடிப்படையில் நெல்லை அடுத்த மானூர் அருகே உள்ள கானார்பட்டி, வன்னிக்கோனேந்தல், திருமலாபுரம், மேலநீலதநல்லூர் உள்ளிட்ட இடங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை இன்று அமைச்சர் ராஜலட்சுமி, மாவட்ட கண்காணிப்பு அதிகாரியும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை முதன்மை செயலருமான ராஜேந்திரகுமார், கலெக்டர் கருணாகரன், வேளாண்மைதுறை இணைஇயக்குனர் கனகராஜ், வேளாண்மை துறை நேர்முக உதவியாளர் சாந்திராணி மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் ராஜலட்சுமி மற்றும் அதிகாரிகள் குழுவினர் விவசாயிகளிடம் குறைகள் கேட்டனர்.

    ஆய்வை தொடர்ந்து அமைச்சர் ராஜலட்சுமி நிருபர்களிடம் கூறியதாவது:- அரசு உத்தரவின் பேரில் அதிகாரிகளுடன் இணைந்து வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு வருகிறோம். நெல்லை மாவட்டத்தில் 39 ஆயிரம் விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்ந்துள்ளனர்.

    எனவே அவர்களுக்கு காப்பீட்டு திட்டத்தின்கீழ் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும். அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்அடைய வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அமைச்சர் ராஜலட்சுமி கூறினார்.

    நெல்லை மாவட்டத்தில் 19 ஒன்றியங்கள் உள்ளன. அதில் 16 ஒன்றியங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு அதிகாரிகள் குழுவினர் 2 குழுக்களாக பிரிந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். வறட்சியால் பாதித்த அனைத்து பகுதிகளிலும் ஆய்வு நடத்தப்படும். நெல்லை மாவட்டத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை. விவசாயிகள் இயற்கை மரணத்தை இதனுடன் ஒப்பிடக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×