search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலத்தில் கூட்டுறவு வங்கிகளில் பணம் டெபாசிட் செய்தவர்களிடம் வருமானவரி அதிகாரிகள் விசாரணை
    X

    சேலத்தில் கூட்டுறவு வங்கிகளில் பணம் டெபாசிட் செய்தவர்களிடம் வருமானவரி அதிகாரிகள் விசாரணை

    சேலத்தில் கூட்டுறவு வங்கிகளில் பணம் டெபாசிட் செய்தவர்களிடம் வருமானவரி அதிகாரிகள் வீடு, வீடாக சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சேலம்:

    இந்தியாவில் கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் கடந்த மாதம் 8-ந் தேதி முதல் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும், அவற்றை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் டெபாசிட் செய்யலாம் எனவும் மத்திய அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து வங்கிகளில் பழைய பணம் மூலம் டெபாசிட் செய்வது அதிகரித்தது.

    இந்த நிலையில் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு புதிய ரூபாய் நோட்டுகள் 70 கோடி ரிசர்வ் வங்கி வழங்கி இருந்தது. அந்த பணம் முறையாக வங்கியில் டெபாசிட் செய்த விவசாயிகளுக்கு சென்றடையவில்லை என்றும், கடந்த மாதம் 10-ந் தேதி முதல் இந்த மாதம் 15-ந் தேதிவரை சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளை வங்கிகளில் ரூ.150 கோடிக்கு மேல் பணம் டெபாசிட் செய்திருப்பதாகவும் புகார் எழுந்தது.

    இதைத்தொடர்ந்து கடந்த 21-ந் தேதி முதல் 23-ந் தேதி நள்ளிரவு வரை தொடர்ந்து 3 நாட்கள் சேலம், திருச்சி, கோவை ஆகிய ஊர்களில் இருந்து வந்த வருமானவரி அதிகாரிகள் சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில் ஆவணங்களை ஆய்வு செய்தனர். அப்போது முறைகேடு குறித்த சில ஆவணங்களை எடுத்து சென்றனர். அதாவது இறுதிநாள் விசாரணை முடித்து 3 சூட்கேஸ் மற்றும் ஒரு அட்டை பெட்டியில் முக்கிய ஆவணங்களை வருமானவரி அதிகாரிகள் எடுத்து சென்றனர்.

    அப்போது மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை வங்கிகளில் ரூ.10 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்த நபர்கள் யார்? என்றும், அவர்கள் உண்மையான விவசாயிதானா? அல்லது அவரது பெயரில் அரசியல் கட்சியினர் யாராவது டெபாசிட் செய்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனரா? எனவும் வங்கி கணக்கு வைத்திருக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்திட வருமானவரி அதிகாரிகள் முடிவெடுத்தனர். அதற்காக வருமானவரித்துறை மூலம் 15-க்கும் மேற்பட்டவர்கள் இடம்பெற்ற குழு நியமிக்கப்பட்டது.

    அதன்படி, முதல் கட்டமாக அரசியல் கட்சி பிரமுகர்கள் 100-க்கும் மேற்பட்டவர்களிடம் அக்குழுவினர் விசாரணை நடத்தினர். அடுத்த கட்டமாக வங்கி கணக்கு வைத்துள்ளவர்களின் முகவரியை குறித்து கொண்டு, அவர்களின் வீடு வீடாக சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இவர்களில் அதிகத்தொகை வங்கியில் டெபாசிட் செய்தவர்களிடம் அந்த பணம் உங்களுடையதா? எப்படி அவ்வளவு பெரிய தொகை கிடைத்தது? என்றும் விசாரணை நடந்து வருகிறது. முழுமையான விசாரணைக்கு பின்னரே எவ்வாறு முறைகேடு நடந்தது? என்பது குறித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வருமானவரி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    Next Story
    ×