search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை நீர்மட்டம் 37 அடியாக சரிவு: 13 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
    X

    மேட்டூர் அணை நீர்மட்டம் 37 அடியாக சரிவு: 13 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

    மேட்டூர் அணை நீர்மட்டம் 37 அடியாக சரிந்துள்ளதால் சேலம் உள்பட 13 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    மேட்டூர்:

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை , புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர் என 12 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மேட்டூர் அணை 152 சதுர கிலோ மீட்டர் நீர்பரப்பு பகுதியை கொண்டதாகும்.

    ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும். இந்தாண்டு போதுமான தண்ணீர் இருப்பு இல்லாததால் 3 மாதம் தாமதமாக செப்டம்பர் மாதம் 20-ந் தேதி சம்பா சாகுபடிக்காக 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 87.68 அடியாக இருந்தது.

    கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டதாலும், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் வழக்கத்தை விட தென்மேற்கு பருவமழை குறைவாக பெய்ததாலும் அணைக்கு நீர்வரத்து முற்றிலும் குறைந்தது.

    இதனால் அணையின் நீர்மட்டம் 45 அடிக்கும் கீழே சரிய தொடங்கியதால் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவு கடந்த மாத தொடக்கத்தில் 750 கன அடியாக குறைக்கப்பட்டது. இதனால் கடைமடைக்கு தண்ணீர் சென்றடையாததால் விவசாய பயிர்கள் கருகியதால் விவசாயிகளும் தற்கொலை செய்து வருகிறார்கள்.

    மேட்டூர் அணையின் நீரமட்டம் 75 அடிக்கும் கீழ் குறையும் போது கடல் போல காட்சியளிக்கும் பண்ணவாடி நீர்பரப்பு பகுதியில் நீரில் மூழ்கியுள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலையின் தலை மட்டுமே வெளியில் தெரியும்.

    ஆனால் இந்தாண்டு தென்மேற்கு மற்றும் வட கிழக்கு பருவமழையும் பொய்த்ததால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து முற்றிலும் குறைந்து இன்று 160 கன அடியாக சரிந்தது. இதனால் நேற்று 37.86 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 37.74 அடியானது.

    இதனால் மேட்டூர் அணையின் வறண்ட நீர் பரப்பு பகுதியான பண்ணவாடி பகுதியில் சோளம், வேர்கடலை உள்பட பல பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இதனால் அணை நீர்பரப்பு பகுதி பச்சை பசேலென காட்சி அளிப்பதுடன் விவசாய பூமியாக மாறி உள்ளது.

    பண்ணவாடி நீர்பரப்பு பகுதியில் தண்ணீரின் நடுவே தலைகாட்டும் நந்தி சிலை தற்போது விளைநிலமாக மாறிய சோளப்பயிர்களுக்கு மத்தியில் காட்சியளிப்பது டெல்டா மாவட்ட விவசாயிகளை மட்டுமல்லாது குடிநீர் கிடைக்குமா? என்ற ஏக்கத்திற்கு பொதுமக்களையும் தள்ளி உள்ளது.

    மேட்டூர் அணையில் இருந்து பாசன வசதி பெறும் 12 காவிரி டெல்டா மாவட்டங்களும் குடி தண்ணீருக்கும் மேட்டூர் அணையின் தண்ணீரை நம்பியே உள்ளனர்.

    காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆற்றுப்படுகைகளில் ஏராளமான உறை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கிணறுகளில் பெருகும் தண்ணீர் நவீன முறையில் சுத்திகரிக்கப்பட்டு ராட்சத மோட்டார்கள் மூலம் நீரேற்று நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பொது மக்களுக்கு குடிநீராக வினியோகிக்கப்படுகிறது.

    காவிரியில் தற்போது திறந்து விடப்பட்டுள்ள 750 கன அடி தண்ணீர் மூலம் சேலம் மாவட்டத்தில் எடப்பாடி, சங்ககிரி மற்றும் ஆத்தூர் பகுதிகளுக்கான குடிநீர் தேவையை மட்டுமே பூர்த்தி செய்கிறது.

    மற்ற மாவட்டங்களுக்கு காவிரி ஆற்று தண்ணீர் சென்றடையாததால் அங்குள்ள நிலத்தடி நீர் மூலம் தற்போது குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இனி வரும் நாட்களில் மழை பெய்து கூடுதல் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடாவிட்டால் காவிரி டெல்டா மாவட்டங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதே போல சேலம் மாநகராட்சி கூட்டு குடிநீர் திட்டம், சேலம்-ஆத்தூர் கூட்டு குடிநீர் திட்டம், வேலூர் மாநகராட்சி கூட்டு குடிநீர் திட்டம், மேட்டூர் நகராட்சி மற்றும் கொளத்தூர் பேரூராட்சி கூட்டு குடிநீர் திட்டங்களும் மேட்டூர் அணையை நம்பியே உள்ளன.

    வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75 அடிக்கு மேல் இருக்கும். ஆனால் இந்தாண்டு அதற்கு மாறாக 37 அடியாக சரிந்துள்ளது. அணையின் நீர் இருப்பு பரப்பளவு குறைந்துள்ளதால் இனி வரும் நாட்களில் நீர்மட்டம் வேகமாக சரிய வாய்ப்புள்ளது.

    அணையின் நீர்மட்டம் 20 அடியாக சரியும் வரை காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விட வாய்ப்புள்ளது. மீதம் உள்ள தண்ணீர் கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு இருப்பு வைக்கப்படும்.

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழைக்கான அறிகுறியே இல்லாததால் இனி வரும் நாட்களில் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிய வாய்ப்புள்ளது. இதனால் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பயன்பெறும் சேலம் மாநகராட்சி மற்றும் வேலூர் மாநகராட்சியிலும் விரைவில் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    வடகிழக்கு பருவ மழை காலம் முடிவடையும் நாட்களை நெருங்கி வருவதால் இனி வரும் நாட்களில் மழை பெய்ய வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. இதனால் சேலம் உள்பட 13 மாவட்டங்களிலும் விரைவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அதிகாரிகளும் மாற்று ஏற்பாடு செய்வது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்கள்.
    Next Story
    ×