search icon
என் மலர்tooltip icon

  செய்திகள்

  கைதான ராஜேஷ், வி‌ஷ ஊசி போட்டு கொலை செய்யப்பட்ட பிரியா.
  X
  கைதான ராஜேஷ், வி‌ஷ ஊசி போட்டு கொலை செய்யப்பட்ட பிரியா.

  வி‌ஷ ஊசி போட்டு மனைவி கொலை: கைதான மருந்துக்கடை அதிபர் பரபரப்பு வாக்குமூலம்

  ராசிபுரம் அருகே விஷ ஊசி போட்டு மனைவியை கொலை செய்த வழக்கில் மருந்துக்கடை அதிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  ராசிபுரம்:

  நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட போதகாப்பட்டியை சேர்ந்தவர் ரங்கசாமி, விவசாயி. இவருடைய மகன் ராஜேஷ் (வயது 30). இவர் நாமகிரிப்பேட்டையில் மருந்துக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

  இவருக்கும், நடுப்பட்டியை சேர்ந்த வருதராஜ் என்பவரின் மகள் பிரியா (20) என்பவருக்கும் கடந்த 2½ வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்-மனைவி இருவரும் போதாகாப்பட்டியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

  இந்த நிலையில் நேற்று காலை பிரியா வாயில் நுரை தள்ளியபடி வீட்டில் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் பிரியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு வந்து, அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும், இது தொடர்பாக பிரியாவின் தாய் ரங்கம்மாள் நாமகிரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில், வாயில் நுரை தள்ளி இருப்பதால் தனது மகளின் சாவில் சந்தேகம் உள்ளதாக புகார் செய்தார்.

  அதன்பேரில், ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, நாமகிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இதற்கிடையே, பிரியாவை கொலை செய்த ராஜேசை கைது செய்ய வேண்டும் என்று கூறி உறவினர்கள் நாமகிரிப்பேட்டை பிரதான சாலையில் மறியல் செய்ய முயன்றனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்தார்கள்.

  இதையடுத்து போலீசார், பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

  இந்த விசாரணையில், திருமணமாகி 2½ ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் பிரியாவிடம் ராஜேஷ் தகராறு செய்து வந்ததும், இதன் காரணமாக அவர் நேற்று முன்தினம் இரவு பிரியாவுக்கு வி‌ஷ ஊசி போட்டு கொலை செய்ததும் தெரியவந்தது.

  இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேசை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.

  விசாரணையின் போது பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

  ராஜேஷ் தனது மனைவி பிரியாவை வி‌ஷ ஊசி போட்டு கொன்றது குறித்து போலீசாரிடம் அவர் அளித்துள்ள பரபரப்பு வாக்கு மூலம் வருமாறு:-

  2 வருடம் குழந்தை இல்லாததால் நான், எனது மனைவி பிரியாவை அழைத்துக் கொண்டு சேலம், நாமக்கல், ராசிபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று சோதனை செய்தேன்.

  அப்போது, என்னுடைய மனைவியின் கர்ப்ப பையில் நீர்கோர்த்து இருந்தது தெரியவந்தது. அதை நீக்கினால் தான் கரு உருவாகும் என மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். மேலும், அதை நீக்காத வரையில் குழந்தை பிறப்பதற்கு வாய்ப்பில்லை எனவும் மருத்துவர்கள் கூறினர்.

  இதனால், எனது மனைவியிடம் டெஸ்ட் டியூப் பேபி குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என கேட்டேன். அதற்கு பிரியா உடன்படவில்லை. தொடர்ந்து மறுத்து வந்தார். ஏனெனில், திருமணம் நடந்து 2 வருடங்கள் தானே ஆகிறது. அதற்குள் அவசர படவேண்டாம் என கூறி மறுத்து வந்தார்.

  இதனால் வாரிசு இல்லாமல் போகும் சூழ்நிலை இருந்தது. இது எனக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அதனால், பிரியாவை கொலை செய்து விட்டு, வேறு ஒரு திருமணம் செய்து கொள்ள திட்ட மிட்டேன்.

  நான் பி.பார்ம் படித்துள்ளதால் வி‌ஷ ஊசி எவ்வாறு போட வேண்டும் என்பது பற்றி எனக்கு நன்றாக தெரியும். எனவே அதனை பயன்படுத்தி அவரை கொலை செய்ய முடிவு செய்தேன்.

  அதன்படி, சம்பவத்தன்று சர்க்கரை, ஆஸ்துமா, காய்ச்சல் மற்றும் தோல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு பயன்படுத்தப்படும் 4 விதமான மருந்துகளை என்னுடைய மருந்து கடையில் இருந்து வீட்டிற்கு எடுத்து சென்றேன். அதில் தலா 2 எம்.எல். வீதம் பெரிய சிரஞ்சி மூலம் எடுத்து, அதனை கலந்து மொத்தம் 8 எம்.எல். மருந்தை பிரியாவுக்கு ஊசி மூலம் போட்டேன்.

  இதில் சர்க்கரை மருந்து இருக்கிற காரணத்தினாலே உடலில் உள்ள அதிக சர்க்கரையை கட்டுப்படுத்தியும், ரத்தத்தில் அதிக அளவில் மருந்துகள் கலந்து இதய துடிப்புகளை நிறுத்தியது. இதனால் அவர் வாயில் நுரை தள்ளியப்படி பரிதாபமாக உயிர் இழந்தார்.

  இவ்வாறு அவர் கூறியதாக தெரிகிறது.

  திருமணமான 2½ வருடத்தில் பிரியா இறந்ததால் உதவி கலெக்டர் விசாரணையும் நடந்து வருகிறது.

  இந்த நிலையில் பிரியாவின் உறவினர் ஒருவர் திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டார். அதில் ராஜேஷ் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், அவரை திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காக பிரியாவை வி‌ஷ ஊசி போட்டு கொன்று விட்டதாகவும் கூறியுள்ளார்.

  இது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
  Next Story
  ×