search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தனக்கு தானே கல்லறை கட்டி காத்திருக்கும் ரோசி.
    X
    தனக்கு தானே கல்லறை கட்டி காத்திருக்கும் ரோசி.

    தனக்கு தானே கல்லறை கட்டி இறப்புக்கு காத்திருக்கும் பெண்

    உறவினர்கள் கைவிட்டதால் தனக்கு தானே கல்லறை கட்டி இறப்புக்காக காத்திருக்கும் பெண் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
    நாகர்கோவில்:

    குமரி மேற்கு மாவட்டத்தில் கேரள எல்லையையொட்டி அமைந்துள்ள கிராமம் பல்லுக்குழி.

    இங்கு வசித்து வருபவர் ரோசி (வயது 55). மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது வீடு அருகே தனக்காக கல்லறை கட்டி இறப்புக்கு காத்திருப்பதாக தகவல் வெளியானது.

    இது உண்மை தானா? என விசாரித்த போது ரோசி தன் வீட்டின் பின்புறம் ரூ.50 ஆயிரம் செலவில் அழகான கல்லறை கட்டி அதில் தனது உருவ படத்தையும் பொறித்து வைத்திருப்பது தெரியவந்தது.

    இதற்கான காரணம் என்ன? என்று ஊர் மக்களிடம் விசாரித்த போது அவர்கள் கூறியதாவது:-

    ரோசியின் பெற்றோருக்கு 6 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில் ரோசி 5-வது மகள் ஆவார். அவருக்கு பிறகு ஒரு தம்பி மட்டும் இருந்தார்.

    ரோசியை தவிர அனைவருக்கும் திருமணம் ஆகி தனித்தனி குடும்பமாக வசித்து வருகிறார்கள். ரோசி மட்டும் சிறு வயதிலேயே கூலி வேலைக்கு சென்றார். அதில் கிடைக்கும் பணத்தை சேமித்து வைத்தார். அவரது பெற்றோரும் உறவினர்களும் ரோசியை கண்டுகொள்ளவில்லை.

    அனைவரும் கைவிட்டதால் அவர் தனியாக வாழ்க்கையை எதிர்கொண்டார். தான் சேமித்து வைத்த பணத்தில் ஒரு நிலம் வாங்கினார். அதில் சின்ன வீடும் கட்டிக்கொண்டார்.

    ரோசியை உறவினர்கள் கண்டுகொள்ளாதது பற்றி அக்கம் பக்கத்தினர் அவரிடம் கேட்டனர். அதற்கு ரோசி எந்த பதிலும் கூறவில்லை. இதனால் சிலர் அவரை கிண்டல் செய்தனர்.

    உறவினர் யாரும் இல்லையென்றால் உன் இறப்புக்கு பிறகு உன் உடலை அடக்கம் செய்வது யார்? எங்கு அடக்கம் செய்வார்கள்? என்று கேலி செய்தனர். இதனால் மனம் உடைந்த ரோசி, தனக்கு தானே கல்லறை கட்ட முடிவு செய்தார்.

    இதையடுத்து அவர் தன் வீடு அருகே ஒரு கல்லறை கட்ட ஆரம்பித்தார். அதனை நவீன முறையில் அமைத்தார். கல்லறையின் மேல்புறம் கடப்பா கற்களை கொண்டு மூடி அமைத்து அதன் மீது சிலுவை அடையாளமும், அதன் அருகே தனது உருவ படத்தையும் வரைந்து வைத்தார்.

    இறந்ததும் அவரது உடலை அடக்கம் செய்ய யாரும் பணம் செலவு செய்ய வேண்டியதில்லை. உடலை பெட்டியில் வைத்து அதனை அவர் கட்டியுள்ள கல்லறையின் மேல்புற கல்லை அகற்றிவிட்டு அதனுள் தள்ளிவிட்டாலே போதும். ரூ.50 ஆயிரம் செலவில் இதனை அமைத்து உள்ளார்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இது பற்றி ரோசியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    நல்ல குடும்பத்தில் பிறந்த பின்னரும் எனக்கு என்று யாரும் இல்லாத நிலை ஏற்பட்டு விட்டது. இப்போது நான் தனியாகத்தான் வசித்து வருகிறேன்.

    இதுவரை யாருக்கும் பாரமாக இருக்கவில்லை. இறப்புக்கு பிறகும் அப்படியே இருக்க விரும்புகிறேன். எனவே தான் எனக்கான கல்லறையை கட்டி காத்திருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ரோசியின் நடவடிக்கைகள் அப்பகுதி மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும் இனி வரும் காலத்தில் அனைவருக்கும் இந்த நிலைதான் ஏற்படுமா? என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×