search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் 2 மாதத்தில் புதிய தொழில் கொள்கை: நாராயணசாமி தகவல்
    X

    புதுவையில் 2 மாதத்தில் புதிய தொழில் கொள்கை: நாராயணசாமி தகவல்

    புதிய தொழிற்சாலைகளை உருவாக்கும் வகையில் புதிய சலுகைகள், திட்டங்களுடன் கூடிய தொழில்கொள்கை, சி.ஐ.ஐ. ஆலோசனை பெற்று 2 மாதத்தில் தொடங்கப்படும் என்று நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் அக்கார்ட் ஓட்டலில் நடந்தது. சிஐஐ தென்மண்டல தலைவர் ரமேஷ் தட்லா தொடக்கவுரை ஆற்றினார். தற்போதைய தொழில் நிலை குறித்து புதுவை சி.ஐ.ஐ. பிரிவு தலைவர் ஸ்ரீகாந்த் சிவராமன் விளக்கினார். அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜஹான் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    புதுவையில் சலுகைகள் ரத்தானதால் ஏராளமான தொழில்கள் வெளிமாநிலங்களுக்கு சென்று விட்டன. இதனால் வேலைவாய்ப்பின்மை பெருகி விட்டது. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதே அரசின் முதல் கடமை. புதிய தொழிற்சாலைகளை உருவாக்கும் வகையில் புதிய சலுகைகள், திட்டங்களுடன் கூடிய தொழில்கொள்கை, சி.ஐ.ஐ. ஆலோசனை பெற்று 2 மாதத்தில் தொடங்கப்படும்.

    பிரதமர் மன்மோகன்சிங் ஆட்சியில் புதுவையில் ரூ.100 கோடி செலவில் திறன் மேம்பாட்டு மையத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த மையம் தொழிலதிபர்கள், தொழில் முனைவோருக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்கும். இம்மையம் ரூ.250 கோடி செலவில் நவீன மையமாக உருவாக்கப்படும். சிறப்பு பொருளாதார மண்டலம் நிறுவுவதற்காக சேதராப்பட்டில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. தற்போது பொருளாதார மண்டல திட்டங்களை மத்திய அரசு ஊக்குவிக்கவில்லை. இதனால் அங்கு மோட்டார் வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு மையம் ஏற்படுத்தப்படும்.

    மேட்டுப்பாளையத்தில் உள்ள போக்குவரத்து நகரில் தகவல் தொழில்நுட்பப் பூங்காவை உருவாக்க அரசு தேவையான நடவடிக்கை எடுத்துள்ளது. ஆயுத்த ஆடை தயாரிப்பு பிரிவுகளும் அங்கு தொடங்கப்படும். புதுச்சேரி துறைமுகத்தை மேம்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. கண்டெய்னர் போக்குவரத்தை கையாள்வது தொடர்பாக சென்னை துறைமுகத்துடன் ஒப்பந்தம் போடப்படும். சாகர்மாலா திட்டத்தன் கீழ் சென்னைபுதுவை இடையே சரக்கு, பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும். மீன்களை பதப்படுத்தும் குளிர்பதனம் செய்யப்பட்ட கிடங்கு வசதி செய்யப்படும். இதன் மூலம் புதுவையில் இருந்து மீன்களை ஏற்றுமதி செய்ய முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×