search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    7 பேரை திருமணம் செய்து நகை-பணத்துடன் தலைமறைவு: கல்யாண ராணியின் மோசடிக்கு உடந்தையாக இருந்த புரோக்கர்கள்
    X

    7 பேரை திருமணம் செய்து நகை-பணத்துடன் தலைமறைவு: கல்யாண ராணியின் மோசடிக்கு உடந்தையாக இருந்த புரோக்கர்கள்

    தாராபுரத்தில் 7 பேரை திருமணம் செய்து நகை-பணத்துடன் தலைமறைவான கல்யாண ராணி குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த கோணப்பன் சாலை கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார்(வயது 32). இவரது மனைவி பவித்ரா (25).

    கடந்த 27-ந்தேதி பவித்ரா பெற்றோர் வீட்டுக்கு சென்று வருவதாக கூறிச் சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த செல்வகுமார் 15 பவுன் நகைகளுடன் மாயமான எனது மனைவியை கண்டு பிடித்து தாருங்கள் என தாராபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பவித்ராவை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் பவித்ராவை உடுமலையில் வைத்து போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவருடன் வாலிபர் ஒருவர் இருந்தார். இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் பவித்ராவுடன் இருந்தவர் அவரது முதல் கணவர் கருணாகரன்(38) என்பது தெரிய வந்தது.

    தொடர்ந்து நடந்த விசாரணையில் பவித்ரா 7 பேரை திருமணம் செய்து ஏமாற்றியது தெரிய வந்தது. பவித்ராவின் உண்மையான பெயர் மாரியம்மாள்.

    இவர் திருமணத்துக்காக நீண்ட நாட்களாக பெண் தேடியும் கிடைக்காமல் இருந்த வாலிபர்களை குறி வைத்து, புரோக்கர்கள் மூலம் அவர்களை அணுகி உள்ளார். அந்த வாலிபர்கள் அனைவருமே ஓரளவு வசதி படைத்தவர்கள். அவர்களிடம் புரோக்கர்கள் பவித்ராவுக்கு பெற்றோர் கிடையாது. பவித்ராவை வளர்த்தவர்களுக்கு ரூ.3 லட்சம் கொடுக்க வேண்டும் என கூறி உள்ளனர்.

    எப்படியாவது திருமணம் நடந்தால் போதும் என கருதிய வாலிபர்கள் பவித்ராவுக்கு 15 பவுன், 20 பவுன் நகை போட்டு திருமணம் செய்துள்ளனர். மேலும் பவித்ராவை வளர்த்தவர்களுக்கு ரூ.3 லட்சம் பணமும் கொடுத்துள்ளனர்.

    சில மாதங்கள் மட்டும் அவர்களுடன் குடும்பம் நடத்தும் பவித்ரா பின்னர் நகை, பணத்துடன் தலைமறைவாவதை தொழிலாக செய்து வந்துள்ளார். பவித்ரா, மாலதி, ஏஞ்சலின் என பல பெயர்களில் மோசடி ராணியாக வலம் வந்த இவர் காந்திநகரை சேர்ந்த கருணாகரன் உள்பட 7 பேரை மணந்து மோசடி செய்துள்ளார்.

    இவரது மோசடிக்கு முதல் கணவர் கருணாகரன் உடந்தையாக இருந்துள்ளார். பவித்ராவின் இந்த மோசடிக்கு திருமண புரோக்கர்கள் சிலரும் உதவி செய்துள்ளனர். வாலிபர்களை ஏமாற்றி கிடைக்கும் நகை, பணத்தில் புரோக்கர்களுக்கு குறிப்பிட்ட தொகையை பவித்ரா செலவு செய்ததால் அவர்களும் அடுத்தடுத்து வாலிபர்களின் முகவரியை கொடுத்துள்ளனர்.

    சில புரோக்கர்கள் வாலிபர்களின் ஜாதகத்துக்கு தகுந்தாற்போல பவித்ராவின் ஜாதகத்தையும் போலியாக தயாரித்து கொடுத்து ஏமாற்றியதும் தெரிய வந்தது.

    பவித்ரா-செல்வகுமாருக்கு திருமண ஏற்பாடுகளை செய்த புரோக்கர்கள் அவரிடம் இருந்து ரூ.3 லட்சம் பெற்றுள்ளனர். செல்வகுமார் 15 பவுன் நகை போட்டு பவித்ராவை திருமணம் செய்துள்ளார். சம்பவத்தன்று பவித்ரா தனது கணவர் செல்வகுமாரிடம் பெற்றோர் வீட்டுக்கு சென்ற வருவதாக கூறிச் சென்றவர் முதல் கணவரை சந்தித்துள்ளார்.

    பின்னர் 8-வதாக 42 வயது நிரம்பிய ஒருவருடன் பவித்ராவுக்கு நிச்சயம் நடந்துள்ளது. அவர் பவித்ராவுக்கு பட்டுப்புடவை வாங்கிக் கொடுத்துள்ளார். இந்தநிலையில் தான் செல்வகுமார் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் பவித்ராவை மடக்கிப் பிடித்துள்ளனர்.

    மோசடி பணத்தில் பவித்ரா தனது முதல் கணவர் கருணாகரனுடன் உல்லாசமாக வாழ்ந்து வந்துள்ளார். ஷாப்பிங் மால்களுக்கு சென்று விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவது, ஆடம்பரமாக செலவு செய்வது என ஜாலியாக வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.

    பவித்ராவின் மோசடிகளை அறிந்த செல்வகுமார் அதிர்ச்சியில் உறைந்தார். எனது நகையை மட்டும் வாங்கி தாருங்கள், இனிமேல் அவள் என்னுடன் வாழ வேண்டாம் என போலீசாரிடம் கூறினார். உடனே பவித்ராவும் நகைகளை கழற்றி கொடுத்தார். பவித்ராவிடம் ஏமாந்த 7 வாலிபர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் யாரும் பவித்ரா மீது புகார் கொடுக்க முன்வரவில்லை.

    இதைத்தொடர்ந்து பவித்ராவை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். பவித்ராவின் மோசடிக்கு உடந்தையாக இருந்த புரோக்கர்கள் யார்- யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
    Next Story
    ×