search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் அருகே கோவில் விழாவில் மோதல்-தடியடி: ஆயுதப்படை போலீசார் குவிப்பு
    X

    திண்டுக்கல் அருகே கோவில் விழாவில் மோதல்-தடியடி: ஆயுதப்படை போலீசார் குவிப்பு

    திண்டுக்கல் அருகே கோவில் விழாவில் ஏற்பட்ட மோதலால் தொடர்ந்து பதட்டம் நீடிக்கிறது. அங்கு ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    கன்னிவாடி:

    திண்டுக்கல் அருகே உள்ள முத்தனம்பட்டியில் காளியம்மன், பகவதிஅம்மன் கோவில் திருவிழா 3 நாட்களாக நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று மாலை மஞ்சள் நீராட்டு மற்றும் கரகம் கரைத்தல் நிகழ்ச்சி நடந்தது.

    சாமி ஊர்வலத்தின் போது இளைஞர்கள் சிலர் ஆடிப்பாடி சென்றனர். அப்போது எதிரே வந்த கல்லூரி பஸ்சை செல்ல விடாமல் தடுத்தனர். பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசாரில் ஒருவர் அந்த இளைஞர்களை சத்தம் போட்டு வழிவிட சொன்னார். அவர்கள் போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த போலீசார் அவர்களை தாக்கினார்.

    இளைஞர்கள் ஒன்று சேர்ந்து போலீசாருக்கு எதிராக திரளவே அவர் உடனடியாக ரெட்டியார்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    இந்நிலையில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திண்டுக்கல்- பழனி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் சாலையின் இருபுறத்திலும் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் நீண்டவரிசையில் நின்றன.

    போலீசாருடன் விரைந்து வந்த ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி கபிலன், இன்ஸ்பெக்டர் கோட்டை சாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துலட்சுமி, கனகராஜ் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சு நடத்தினர்.

    எனினும் அவர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். ஆயுதப்படை போலீசாரும் வரவழைக்கப்பட்டனர். 3 மணி நேரமாக மறியலில் ஈடுபட்ட அவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர்.

    அப்போது சிலர் போலீசார் மீதும், பஸ்கள் மீதும் கல்வீசி தாக்கினர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். பெண்களும், சிறுவர்களும் பயந்து ஓடினார்கள். இதனால் அந்த இடம் போர்களம் போல் காட்சியளித்தது.

    தடியடியில் 3 மாணவிகள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கல்வீச்சில் போலீசார் சேகர், மணிகண்டன், கிருஷ்ண குமார் ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது.

    இந்த மோதல் தொடர்பாக 19 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. கனிவேல், ராஜ்குமார், பன்னீர்செல்வம், சின்ன கோபால், நாகலிங்கம், முத்துகிருஷ்ணன், வெங்கடேசன், அய்யப்பன், நாகராஜ் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    முத்தனம்பட்டி கிராமத்தில் தொடர்ந்து பதட்டம் நீடிப்பதால் அங்கு ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×