search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை
    X

    டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை

    டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் அக்னி வெயில் காரணமாக மக்கள் அவதி அடைந்து வந்தனர். தஞ்சை உள்பட சில மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியது. இதனால் பகலில் வெளியில் செல்ல முடியாமல் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி கிடந்தனர். தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களிலும் கடந்த 1 மாதத்துக்கும் மேலாக கோடை வெயில் தகித்து வந்தது.

    இந்த நிலையில் வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக டெல்டா மாவட்டங்களில் பட்டுக்கோட்டை, மன்னார்குடி உள்பட சில இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்தது. ஆனால் தஞ்சையில் மழை பெய்யாமல் ஏமாற்றி வந்தது. எனவே பொதுமக்கள் கோடை மழையை எதிர்பார்த்து இருந்தனர். அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் தஞ்சையில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. இன்று காலையும் மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு, பாபநாசம், கும்பகோணம் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    திருவாரூர் மாவட்டத்திலும் இன்று அதிகாலை முதல் கோடை மழை பெய்து வருகிறது. திருவாரூரில் மிதமான மழை பெய்கிறது. திருத்துறைப்பூண்டியில் பலத்த மழை பெய்து வருகிறது. மன்னார்குடி, முத்துப்பேட்டை உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தொடர்மழை பெய்து வருகிறது.

    நாகை மாவட்டத்தில் நேற்றுமுதல் மழை பெய்து வருகிறது. நாகையில் இன்றும் மழை பெய்து வருகிறது. வேதாரண்யத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் விட்டு விட்டு மழைபெய்து வருகிறது. இந்த மழை காரணமாக அங்கு உப்பு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மீண்டும் உப்பு உற்பத்தி செய்ய 25 நாட்களுக்கு மேலாகும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே வேதாரண்யத்தில் இன்றும் அதிகாலை முதல் பலத்தமழை பெய்து வருகிறது.

    இந்த மழை காரணமாக நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இன்று காலை தேர்தல் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. வேதாரண்யத்தில் 100.2மி.மீ மழையும், தலைஞாயிறில் 15.8மி.மீ மழையும் பெய்து உள்ளது. வேதாரண்யத்தில் மழை காரணமாக ரோடுகளில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் மின்தடை ஏற்பட்டதால் ஜெனரேட்டர் இயக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மழை பெய்து வருவதால் வாக்குப்பதிவு மையங்களில் பொதுமக்கள் கூட்டம் குறைவாக உள்ளது. காலை 8 மணிவரை 15 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது.

    Next Story
    ×