என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • இந்த தொகை 2023 ஆண்கள் உலகக் கோப்பையின் மொத்த பரிசுத்தொகையை விடவும் அதிகமாக உள்ளது.
    • 5-வது மற்றும் 6-வது இடங்கள் பிடிக்கும் அணிக்கு தலா ரூ. 6.18 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) போட்டி செப்டம்பர் 30-ந்தேதி முதல் நவம்பர் 2-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் கலந்து கொள்கின்றன.

    இந்த போட்டிகள் இந்தியாவில் குவாஹாட்டி, இந்தோர், நவி மும்பை, விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களிலும் இலங்கையில் கொழும்பு நகரத்திலும் நடைபெறுகிறது.

    இந்நிலையில் இந்த போட்டிக்கான தொடருக்கான பரிசுத் தொகையாக ஐ.சி.சி அறிவித்துள்ளது. அதன்படி இந்த தொடருக்கான பரிசுத்தொகையாக ரூ.122 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய பதிப்பை விட 297% அதிகமாகும்.

    முக்கியமாக, இந்த தொகை 2023 ஆண்கள் உலகக் கோப்பையின் மொத்த பரிசுத்தொகையை விடவும் அதிகமாக உள்ளது.

    அதன்படி கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.39.55 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.19.77 கோடி. அரையிறுதியில் தோல்வியடையும் அணிகளுக்கு ரூ.9.89 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

    5-வது மற்றும் 6-வது இடங்கள் பிடிக்கும் அணிக்கு தலா ரூ. 6.18 கோடியும் 7-வது மற்றும் 8-வது இடங்கள் பிடிக்கும் அணிக்கு ரூ.2.47 கோடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • 2024-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
    • சில தினங்களுக்கு முன்னர் ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார்.

    இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின். இவர் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்தார். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவேன் என்று அஸ்வின் கூறியிருந்தார்.

    அந்த வகையில் 2025 ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே அணிக்காக இடம் பிடித்து விளையாடினார். அந்த தொடரில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதனால் சில போட்டிகள் அவர் விளையாடவில்லை. இதனால் அவரை சிஎஸ்கே அணியில் இருந்து விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

    இதனையடுத்து சில தினங்களுக்கு முன்னர் ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார். தான் ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றதற்கு காரணமே உலகெங்கிலும் நடைபெற்று வரும் லீக் போட்டிகளில் விளையாடி இன்னும் நிறைய கற்றுக்கொள்ள விரும்புவதாக தெரிவித்தார்.

    இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த கையோடு தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐ.எல்.டி டி20 லீக் தொடருக்கான ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    எதிர்வரும் ஐ.எல்.டி டி20 சீசனுக்காக என்னுடைய பெயரை பதிவு செய்திருக்கிறேன். நிச்சயம் ஏதாவது ஒரு அணி என்னை வாங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே ஐ.எல்.டி டி20 லீக் போட்டிகளில் இந்திய முன்னாள் வீரர்களான யூசுப் பதான், ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு ஆகியோர் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

    • பும்ரா சுப்மன் கில் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளனர்.
    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்காக ரோகித் சர்மா ஆயத்தமாகி வருகிறார்.

    ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந்தேதி ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

    இந்திய அணியில் இடம் பெற்றுள்ள டெஸ்ட் கேப்டன் சுப்மன்கில், வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோருக்கு உடல் தகுதிக்கான சோதனை நடத்தப்பட்டது. பெங்களூரில் உள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் சிறப்பு மையத்தில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் இருவரும் தேர்ச்சி பெற்றனர். இதே போல ஒரு நாள் போட்டிக்கான கேப்டன் ரோகித்சர்மாவும் உடல் தகுதி சோதனையில் தேர்ச்சி பெற்றார்.

    சுப்மன்கில் 20 ஓவர் அணிக்கு துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக துலிப் டிராபி போட்டியில் இருந்து அவர் விலகினார். இதனால் அவருக்கு உடல் தகுதி சோதனை கட்டாயமாக்கப்பட்டது.

    • முதலில் பேட் செய்த ஓவல் இன்வின்சிபிள்ஸ் அணி 100 பந்துகளில் 168 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய டிரென்ட் ராக்கெட்ஸ் அணி 100 பந்துகளில் 142 ரன்கள் எடுத்து தோற்றது.

    லண்டன்:

    இங்கிலாந்தில் 100 பந்து கொண்ட ஆண்களுக்கான "The Hundred" கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இதில் ஓவல் இன்வின்சிபிள்ஸ், டிரென்ட் ராக்கெட்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஓவல் இன்வின்சிபிள் அணி 100 பந்துகளில் 5 விக்கெட்டுக்கு 168 ரன்கள் குவித்தது. வில் ஜாக்ஸ் 72 ரன்னும், ஜோர்டான் காக்ஸ் 40 ரன்னும் எடுத்தனர்.

    அடுத்து ஆடிய டிரென்ட் ராக்கெட்ஸ் அணி 100 பந்துகளில் 8 விக்கெட்டுக்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

    இதன்மூலம் ஓவல் இன்வின்சிபிள் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.

    இந்நிலையில், ஓவல் இன்வின்சிபிள் அணியின் கேப்டன் சாம் பில்லிங்ஸ் கேப்டனாக தொடர்ந்து 3 முறை தனது அணிக்கு கோப்பை வாங்கித் தந்துள்ளார் என்பதால் டிரெண்டிங்கில் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக புஜாரா சமீபத்தில் அறிவித்தார்.
    • முன்னாள், இந்நாள் வீரர்கள் பலரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது பங்களிப்பை பாராட்டி வருகின்றனர்.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் நட்சத்திர வீரரான செதேஷ்வர் புஜாரா சமீபத்தில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் பலரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது பங்களிப்பை பாராட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், பிரதமர் மோடி புஜாராவுக்கு கடிதம் எழுதி பாராட்டினார். அதில் கூறியுள்ளதாவது:

    நீங்கள் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக முடிவு செய்ததை அறிந்தேன். உங்கள் அற்புதமான கிரிக்கெட் வாழ்க்கைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    குறுகிய வடிவிலான கிரிக்கெட் ஆதிக்கம் செலுத்தும் இந்த காலத்தில் நீங்கள் நீண்ட வடிவிலான ஆட்டத்தின் அழகை நினைவூட்டினீர்கள்.

    களத்தில் நீண்ட நேரம் பேட் செய்யும் திறன் பெற்ற நீங்கள், இந்திய பேட்டிங் வரிசையின் அச்சாணியாக திகழ்ந்தீர்கள். நீங்கள் களத்தில் இருக்கும் போது அணி பாதுகாப்பான நபரின் கையில் உள்ளது என ரசிகர்கள் உணர்ந்தனர்.

    உங்கள் அற்புதமான கிரிக்கெட் வாழ்க்கை, குறிப்பாக வெளிநாட்டு சவாலான சூழ்நிலைகளில், அசாதாரண திறமையும் உறுதியும் கொண்ட தருணங்களால் நிறைந்துள்ளது.

    உதாரணமாக, ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் இந்தியா ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக வரலாற்றுச் சிறப்புமிக்க தொடர் வெற்றியைப் பெறுவதற்கு அடித்தளமாக இருந்த உங்கள் ஆட்டத்தை ரசிகர்கள் எப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள்.

    மிகவும் வலிமையான பந்துவீச்சு தாக்குதல்களுக்கு எதிராக நீங்கள் உறுதியாக நின்று, அணிக்காக பொறுப்பை ஏற்பது என்றால் என்ன என்பதை காட்டினீர்கள்.

    ராஜ்கோட்டை கிரிக்கெட் வரைபடத்தில் இடம்பெறச் செய்த உங்கள் பங்களிப்பு, ஒவ்வொரு இளைஞருக்கும் பெருமையின் ஆதாரமாக இருக்கும்.

    நீங்கள் கிரிக்கெட்டுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, எழுச்சியடையும் கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.உங்கள் எதிர்கால பயணத்திற்கு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடியிடம் இருந்து பாராட்டு கடிதம் கிடைத்தமைக்கு பெருமை அடைகிறேன் என புஜாரா குறிப்பிட்டுள்ளார்.

    • முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 277 ரன்களை எடுத்தது.
    • பென் கர்ரன், சிக்கந்தர் ராசா அரை சதம் கடந்தனர்.

    ஹராரே:

    இலங்கை அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி ஹராரேயில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 277 ரன்களை எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் பென் கர்ரன் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 79 ரன்னில் அவுட்டானார். சிக்கந்தர் ராசா அரை சதம் கடந்து 56 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 122 ரன்னில் அவுட்டானார்.

    கேப்டன் சரித் அசலங்கா சிறப்பாக ஆடி அரை சதம் கடந்து 71 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், இலங்கை அணி 49.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 278 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரை இலங்கை 2-0 என கைப்பற்றி அசத்தியது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது பதும் நிசங்காவுக்கு அளிக்கப்பட்டது.

    • அண்மையில் இந்த மைல்கல்லை வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பொல்லார்ட் எட்டியிருந்தார்.
    • டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 14,562 ரன்களுடன் கெய்ல் முதலிடத்தில் உள்ளார்.

    இங்கிலாந்து முன்னாள் வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் டி20 போட்டிகளில் 14,000 ரன்கள் குவித்த 3வது வீரர் என்ற சாதனையை படைத்தார்

    அண்மையில் இந்த மைல்கல்லை வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பொல்லார்ட் எட்டியிருந்தார்.

    டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 14,562 ரன்களுடன் கெய்ல் முதலிடத்தில் உள்ளார்.

    • இந்திய கிரிக்கெட் அணியின் முதன்மை ஸ்பான்சரான டிரீம் 11 நிறுவனம் கடந்த 2023 ஜூலை மாதம் ஒப்பந்தம் செய்து இருந்தது.
    • டிரீம் 11 வழங்கிய தொகையை விட அதிகமான தொகையை பெற கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

    பணம் செலுத்தி விளையாடப்படும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் வகையில் இணையவழி விளையாட்டு மேம்பாட்டு மற்றும் ஒழுங்கு முறை சட்டமசோதாவை மத்திய அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது.

    இதையடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் விளம்பரதாரராக இருந்த ஆன்லைன் விளையாட்டு நிறுவனமான 'டிரீம் 11' அந்தப் பொறுப்பில் இருந்து விலகியது.

    இந்திய கிரிக்கெட் அணியின் முதன்மை ஸ்பான்சரான டிரீம் 11 நிறுவனம் கடந்த 2023 ஜூலை மாதம் ஒப்பந்தம் செய்து இருந்தது. அந்த நிறுவனம் ரூ.358 கோடிக்கு கடும் போட்டிக்கு இடையே கைப்பற்றியது. அந்த நிறுவனம் முன்னதாகவே விலகியதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) புதிய ஸ்பான்சரை தேடுகிறது.

    புதிய ஸ்பான்சரை பி.சி. சி.ஐ. ரூ.450 கோடிக்கு ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    2025 முதல் 2028 வரை புதிய ஸ்பான்சர் இருக்கும். டிரீம் 11 வழங்கிய தொகையை விட அதிகமான தொகையை பெற கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. அதோடு இருதரப்பு போட்டிக்கு ரூ.3½ கோடியும், ஐ.சி.சி. மற்றும் ஆசிய போட்டிகளுக்கு ரூ.1.5 கோடியும் இலக்காக பி.சி.சி.ஐ. நிர்ணயித்துள்ளது.

    ஆசிய கோப்பை போட்டி விரைவில் தொடங்க உள்ளதால் ஸ்பான்சர் இல்லாத சீருடை அணிந்து இந்திய வீரர்கள் விளையாடுவார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

    • கேரளா கிரிக்கெட் லீக் தற்போது நடைபெற்று வருகிறது.
    • நேற்று கோழிக்கோடு - திருவனந்தபுரம் அணிகள் மோதின.

    ஐபிஎல் (இந்தியன் பிரீமியர் லீக்) டி20 தொடர் பிரபலமான நிலையில் ஒவ்வொரு மாநில கிரிக்கெட் சங்கங்களும் டி20 கிரிக்கெட் லீக்கை தொடங்க ஆரம்பித்தன.

    அவ்வகையில் கேரளா கிரிக்கெட் லீக் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று கோழிக்கோடு - திருவனந்தபுரம் அணிகள் மோதின.

    இப்போட்டியில் முதலில் ஆடிய கோழிக்கோடு அணி 20 ஓவர்கள் முடிவில் 186 ரன்கள் அடித்தது. அதிரடியாக விளையாடிய சல்மான் நசீர் 26 பந்துகளில் 86 ரன்கள் குவித்தார்.

    குறிப்பாக சல்மான் நசீர் ஒரே ஓவரில் 40 ரன்களை விளாசி அசத்தினார். அபிஜீத் பிரவீன் வீசிய கடைசி ஓவரில் சல்மான் நசீர் 6 சிக்சர் விளாசினார். மேலும் Wide பால், நோ பாலுடன் சேர்த்து கடைசி ஓவரில் மட்டும் 40 ரன்கள் கிடைத்தது

    • இந்தியா, இலங்கையில் அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது.
    • கடந்த 2021 டி20 உலகக் கோப்பையிலும் தோனி இந்திய அணி ஆலோசகராக செயல்பட்டிருந்தார்.

    மும்பை:

    இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 20 அணிகள் விளையாடுகின்றன. தொடரை நடத்தும் அடிப்படையில் நடப்பு சாம்பியன் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் தானாகவே தகுதி பெற்றன.

    இந்த தொடரில் வெற்றி பெற்று கோப்பையை தக்கவைக்கும் நோக்கில் இந்திய அணி பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதல் கட்டமாக சுப்மன் கில்லை இந்திய டி20 அணியின் புதிய துணை கேப்டனாக நியமித்துள்ளது.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியை நியமிக்க பி.சி.சி.ஐ. முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக தோனியை பி.சி.சி.ஐ. நிர்வாகம் அணுகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

    ஆனாலும், இதற்கு தோனி என்ன முடிவெடுத்துள்ளார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

    ஏற்கனவே, எம்.எஸ்.தோனி 2021-ல் நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக செயல்பட்டார். ஆனால் அந்த தொடரில் இந்திய அணி லீக் சுற்றோடு நடையை கட்டியது.

    • முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 207 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய ஐக்கிய அரபு அமீரகம் 176 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

    துபாய்:

    ஆசிய கோப்பை தொடருக்கு தயாராகும் பொருட்டு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) அணிகள் இடையே முத்தரப்பு டி20 தொடர் நடைபெறுகிறது. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை பாகிஸ்தான் 39 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    இந்நிலையில், 2வது லீக் போட்டியில் பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 207 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் சயீம் அயூப் 69 ரன்னும், ஹசன் நவாஸ் 56 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரகம் 176 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    அந்த அணியின் ஆசிப் கான் தனியாக போராடினார். அதிரடியாக ஆடிய அவர் 35 பந்தில் 6 சிக்சர், 6 பவுண்டரி உள்பட77 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இதன்மூலம் பாகிஸ்தான் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பாகிஸ்தான் சார்பில் ஹசல் அலி 3 விக்கெட்டும், முகமது நவாஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை செப்டம்பர் 10-ம் தேதி சந்திக்கிறது.
    • இந்திய அணி பரம எதிரியான பாகிஸ்தானை செப்டம்பர் 14-ம் தேதி துபாயில் சந்திக்கிறது.

    மும்பை:

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது.

    இந்த தொடரில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், பி பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

    இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை செப்டம்பர் 10-ம் தேதி துபாயில் சந்திக்கிறது. பரம எதிரியான பாகிஸ்தானை செப்டம்பர் 14-ம் தேதி துபாயிலும், ஓமனை செப்டம்பர் 19-ம் தேதி அபுதாபியிலும் எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டி செப்டம்பர் 28-ம் தேதி துபாயில் அரங்கேறுகிறது.

    இந்நிலையில், ஆசிய கோப்பை போட்டி தொடங்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக ஐக்கிய அரபு நாடுகள் வாரியம் அறிவித்துள்ளது.

    உள்ளூர் நேரப்படி ஆசிய கோப்பை போட்டிகள் மாலை 6 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 7.30) தொடங்குவதாக இருந்தன. அந்த நேரத்தில் அங்கு அதிகப்படியான வெப்பம் இருப்பது வழக்கம் என்பதால் வீரர்கள் பெரிய சிரமத்தை சந்திப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

    எனவே, இதை கருத்தில் கொண்டு ஆசிய கோப்பை போட்டிகள் அரை மணி நேரம் தாமதமாக மாலை 6.30 மணிக்கு தொடங்கும் என ஐக்கிய அரபு நாடுகள் வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி இந்திய நேரத்தில் இரவு 8 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது.

    ×