என் மலர்
விளையாட்டு

டிரீம் 11 விலகல் எதிரொலி: ரூ.450 கோடிக்கு புதிய ஸ்பான்சரை தேடும் இந்திய கிரிக்கெட் வாரியம்
- இந்திய கிரிக்கெட் அணியின் முதன்மை ஸ்பான்சரான டிரீம் 11 நிறுவனம் கடந்த 2023 ஜூலை மாதம் ஒப்பந்தம் செய்து இருந்தது.
- டிரீம் 11 வழங்கிய தொகையை விட அதிகமான தொகையை பெற கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.
பணம் செலுத்தி விளையாடப்படும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் வகையில் இணையவழி விளையாட்டு மேம்பாட்டு மற்றும் ஒழுங்கு முறை சட்டமசோதாவை மத்திய அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது.
இதையடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் விளம்பரதாரராக இருந்த ஆன்லைன் விளையாட்டு நிறுவனமான 'டிரீம் 11' அந்தப் பொறுப்பில் இருந்து விலகியது.
இந்திய கிரிக்கெட் அணியின் முதன்மை ஸ்பான்சரான டிரீம் 11 நிறுவனம் கடந்த 2023 ஜூலை மாதம் ஒப்பந்தம் செய்து இருந்தது. அந்த நிறுவனம் ரூ.358 கோடிக்கு கடும் போட்டிக்கு இடையே கைப்பற்றியது. அந்த நிறுவனம் முன்னதாகவே விலகியதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) புதிய ஸ்பான்சரை தேடுகிறது.
புதிய ஸ்பான்சரை பி.சி. சி.ஐ. ரூ.450 கோடிக்கு ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2025 முதல் 2028 வரை புதிய ஸ்பான்சர் இருக்கும். டிரீம் 11 வழங்கிய தொகையை விட அதிகமான தொகையை பெற கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. அதோடு இருதரப்பு போட்டிக்கு ரூ.3½ கோடியும், ஐ.சி.சி. மற்றும் ஆசிய போட்டிகளுக்கு ரூ.1.5 கோடியும் இலக்காக பி.சி.சி.ஐ. நிர்ணயித்துள்ளது.
ஆசிய கோப்பை போட்டி விரைவில் தொடங்க உள்ளதால் ஸ்பான்சர் இல்லாத சீருடை அணிந்து இந்திய வீரர்கள் விளையாடுவார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.






