என் மலர்
விளையாட்டு
- இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டி 20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடக்கிறது.
- விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
திருவனந்தபுரம்:
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று நடக்கிறது.
இந்த ஆட்டத்திலும் வென்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெறும் ஆர்வத்தில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இருக்கிறது.
மேத்யூ வேட் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் வேட்கையில் உள்ளது. இன்றைய ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
இந்தப் போட்டி குறித்து இந்திய வீரர் திலக்வர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது:
ரிங்கு சிங் இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடி வருவதால் அவரிடம் இருந்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பது எப்படி என்று கற்று வருகிறேன். இனி வரும் போட்டிகளில் நானும் அதை செய்ய விரும்புகிறேன். அதை செய்வேன் என்று நம்புகிறேன்.
எனக்கு எந்த அழுத்தமும் இல்லை. எந்தவித நெருக்கடியும் இல்லாமல் ஆட்டத்தை நிறைவு செய்ய நினைக்கிறேன். 5-வது வரிசையில் ஆடும் நான் எனது பங்களிப்பை முடிந்தவரை செயல்படுத்துவேன் என தெரிவித்தார்.
இடதுகை பேட்ஸ்மேன் ஆன திலக் வர்மா, 11 டி20 போட்டியில் விளையாடி 243 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 அரைசதம் அடங்கும்.
- இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டன்களில் எம்.எஸ்.தோனி ஒருவராக போற்றப்படுகிறார்.
- பல்வேறு திறமைகள் பெற்றிருந்தாலும் தோனியின் கேப்டன்ஷிப் அதிகளவில் புகழ்பெற்றதாக உள்ளது.
புதுடெல்லி:
இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டன்களில் எம்.எஸ்.தோனியும் ஒருவராக போற்றப்படுகிறார். அதிரடியாக பேட்டிங் செய்தும், மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்தும், நிறைய போட்டிகளில் பினிஷராக இந்திய அணிக்கு வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.
இப்படி பல்வேறு திறமைகள் பெற்றிருந்தாலும், தோனியின் கேப்டன்ஷிப் தான் அதிகளவில் புகழ்பெற்றதாக உள்ளது. மற்றவர்களை விட வித்தியாசமாக சிந்தித்து, பல்வேறு தருணங்களில் தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றிகளைக் கண்டுள்ளார்.
இந்நிலையில், கேப்டனாக தோனி எடுக்கும் முடிவுகளை பற்றி இந்திய கிரிக்கெட்டில் யாருமே கேள்வி கேட்க மாட்டார்கள் என்று அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அம்பத்தி ராயுடு அளித்துள்ள பேட்டியின் விவரம் வருமாறு:
வீரர்களிடம் இருக்கும் சிறந்த திறமையை தோனி வெளிக்கொணர்வார் என்பதை அனைவரும் அறிவார்கள். சென்னை அணியில் விளையாடிய சில வெளிநாட்டு வீரர்களின் திறமையை கூட தோனி சிறப்பாக வெளிக்கொண்டு வந்துள்ளார்.
அந்தப் பண்பு அவரிடம் இயற்கையாகவே இருக்கிறது. அதை எப்படி வெளிப்படுத்துவது என்பது கூட அவருக்கு தெரியாது. ஒருவேளை அவர் அந்த திறமையை ஆசீர்வாதமாக பெற்றிருக்கலாம்.
பெரும்பாலான தருணங்களில் நான் நினைக்காதவற்றை எப்படி அவர் செய்கிறார் என்று ஆச்சரியமாக பார்ப்பேன். ஒவ்வொரு நாளின் இறுதியிலும் 99.99 சதவீத தருணங்களில் அவர் சரியான முடிவுகளையே எடுத்திருப்பார். அதை அவர் நீண்ட காலமாக வெற்றிகரமாக செய்து வருகிறார்.
அதனால் இந்திய கிரிக்கெட்டில் எந்த இடத்தில் இருக்கும் நபராலும் அவருடைய முடிவுகளை கேள்வி கேட்கமுடியும் என்று நான் நினைக்கவில்லை என தெரிவித்தார்.
- நைனிடாலில் விபத்தில் சிக்கிய நபரை முகமது ஷமி மீட்டு பத்திரமாக அனுப்பி வைத்தார்.
- ஷமியின் இச்செயலுக்கு சமூக வலைதளங்களில் பலர் தங்களது பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.
நைனிடால்:
உத்தரகாண்ட் மாநிலத்தின் நைனிடாலில் உள்ள மலைப்பாதை வழியாக சென்ற ஒரு கார் பள்ளத்தில் கவிழ்ந்தது. அப்பகுதி வழியாக வந்த இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விபத்தைக் கண்டார். உடனடியாக அக்கம்பக்கத்தினரை அழைத்து பள்ளத்தில் சிக்கிய நபரை மீட்டு பத்திரமாக அனுப்பி வைத்தார்.
இதையடுத்து, முகமது ஷமி சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவரை மீட்டது குறித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக, ஷமி தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், அவர் மிகவும் அதிர்ஷ்டசாலி. கடவுள் அவருக்கு 2வது வாழ்க்கையை கொடுத்தார். அவரது கார் நைனிடால் அருகே மலைப்பாதையில் இருந்து எனது காருக்கு முன்னால் கீழே விழுந்தது. நாங்கள் அவரை மிகவும் பாதுகாப்பாக வெளியே எடுத்தோம் என பதிவிட்டுள்ளார்.
முகமது ஷமியின் இச்செயலுக்கு சமூக வலைதளங்களில் பலரும் தங்களது பாராட்டுதலைத் தெரிவித்து வருகின்றனர்.
- சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் முதல் போட்டியில் அரைசதம்.
- ரிங்கு சிங் நெருக்கடியை எளிதாக சமாளித்து போட்டியை முடித்து வைத்தார்.
இந்தியா- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி ஆஸ்திரேலியாவை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. 2-வது போட்டி நாளை திருவனந்தபுரத்தில் நடக்கிறது.
முதல் போட்டியில் ஆஸ்திரேலியா சிறப்பாக பேட்டிங் செய்த போதிலும், இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் (42 பந்தில் 80 ரன்), இஷான் கிஷன் (39 பந்தில் 58 ரன்) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு முக்கிய காரணமாக இருந்தனர். ரிங்கு சிங் இறுதியில் 14 பந்தில் 22 ரன்கள் எடுத்து பினிஷராக செயல்பட்டார்.

தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 8 பந்தில் 21 ரன் எடுத்த போதிலும், ருதுராஜ் கெய்க்வாட் ரன்ஏதும் எடுக்காமல் ரன்அவுட் ஆனார். இந்த ஜோடி குறைந்தபட்சம் பவர்பிளேயான முதல் ஆறு ஓவர்கள் விளையாடினால் இந்தியாவின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயரும். திலக் வர்மா 10 பந்தில் 12 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அடைந்தார். இந்த ஆறு பேட்ஸ்மேன்களில் மூன்று பேருக்கு கிளிக் ஆனால் இந்தியாவின் பேட்டிங் டாப்பாக இருக்கும்.
பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், பிரசித், முகேஷ் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். முகேஷ் குமார் மட்டுமே குறைவான ரன்கள் (ஓவரில் 29 ரன்கள்) விட்டுக்கொடுத்தார். அதேபோல் அக்சார் பட்டேல் 32 ரன்கள் விட்டுக்கொடுத்தார். மற்ற பந்து வீச்சாளர்கள் கவனம் செலுத்துவது அவசியம்.

ஆஸ்திரேலியாவை பொறுத்தரை பேட்டிங்கில் ஸ்மித், மேத்யூ ஷார்ட், இங்லிஸ், ஸ்டோய்னிஸ், டிம் டேவிட், வடே என உள்ளனர். பந்து வீச்சில்தான் அந்த அணிக்கும் சறுக்கல் ஏற்பட்டது. இதனால் பந்து வீச்சில் கவனம் செலுத்தும்.
இரு அணிகளில் சிறப்பாக பந்து வீசும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்.
- டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டி நடைபெற்றது.
- இதில் செர்பிய வீரர் ஜோகோவிச், இங்கிலாந்து வீரர் கேமரூன் நூரியை வீழ்த்தினார்.
லண்டன்:
டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச், இங்கிலாந்து வீரர் கேமரூன் நூரியுடன் மோதினார்.
இதில் ஜோகோவிச் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
போட்டியின் போது ஜோகோவிச் விளையாடுகையில் இங்கிலாந்து ரசிகர்கள் டிரம்ஸ் கொட்டி வெறுப்பேற்றினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஜோகோவிச், போட்டிக்கு பிறகு பேசுகையில், வாயை மூடுங்கள், அமைதியாக இருங்கள். விளையாட்டு வீரர்களை மதியுங்கள் என காட்டமாக கூறினார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
- முதல் பாதி நேர ஆட்டத்தில் உத்தர பிரசேதம் 2-0 என முன்னிலைப் பெற்றிருந்தது.
- 2-வது பாதி ஆட்டத்தில் தமிழக அணி 3 கோல்கள் அடித்து வெற்றி பெற்றது.
தமிழ்நாடு ஆக்கி அமைப்பு சார்பில் 13-வது தேசிய சீனியர் ஆக்கிப் போட்டி சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 17-ந்தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் 28 அணிகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டது.
நேற்றுடன் லீக் ஆட்டங்கள் முடிந்தன. அரியானா (ஏ பிரிவு), தமிழ்நாடு (பி), கர்நாடகா (சி), பஞ்சாப் (டி), மணிப்பூர் (இ), ஜார்க்கண்ட் (எப்), உத்தரப்பிரதேசம் (ஜி), ஒடிஷா (எச்) ஆகிய 8 அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெற்றன.
சத்தீஸ்கர், குஜராத், இமாச்சலப் பிரதேசம், அசாம், தத்ரா நகர் கவேலி, பீகார், மராட்டியம், உத்தரகாண்ட் , பெங்கால், மத்திய பிரதேசம், ஜம்மு காஷ்மீர், சண்டிகர், ஆந்திரா, கோவா, புதுச்சேரி, ராஜஸ்தான், கேரளா, டெல்லி, தெலுங்கானா, அருணாசலப் பிரதேசம் ஆகிய அணிகள் வெளியேறின.
9-வது நாளான இன்று காலிறுதி போட்டிகள் நடைபெற்றது. காலை 7 மணிக்கு நடந்த காலிறுதி ஆட்டத்தில் கர்நாடகா- ஜார்க்கண்ட் அணிகள் மோதின.
இதில் கர்நாடகா 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது. கர்நாடகா அணிக்காக ஹாரிஸ் முதாகர் 2 கோலும் (46 மற்றும் 49-வது நிமிடம்) கேப்டன் ஷேசே கவுடா (23-வது நிமிடம்), லிகித்பிம் (32-வது நிமிடம்) தலா ஒரு கோலும் அடித்தனர்.
ஜார்க்கண்ட் அணியில் தில்பர் பர்லா 39-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
அடுத்து நடைபெற்ற கால் இறுதியில் தமிழ்நாடு- உத்தர பிரதேசம் அணிகள் மோதின. முதல் பாதி ஆட்டத்தில் உத்தர பிரதேசம் 2 கோல் அடித்து முன்னிலையில் இருந்தது. 27-வது நிமிடத்தில் மனிஷ் சகானியும், 30-வது நிமிடத்தில் சுனில் யாதவும் அந்த அணிக்காக கோல் அடித்தனர்.
2-வது பாதியில் தமிழக வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். 33-வது நிமிடத்தில் சுந்தரபாண்டி முதல் கோலை அடித்தார். 52-வது நிமிடத்தில் கேப்டன் ஜோசுவா பெனடிக்ட் வெஸ்லி 2-வது கோலை அடித்து சமன் செய்தார். இதனால் 2-2 என்ற நிலை ஏற்பட்டது.
59-வது நிமிடத்தில் தமிழகம் 3-வது கோலை அடித்தது. கேப்டன் வெஸ்லி இந்த கோலை அடித்தார்.
ஆட்டத்தின் முடிவில் தமிழ்நாடு 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அரையிறுதிக்கு தகுதி பெற்றது. தமிழக அணி அரை இறுதியில் அரியானா அல்லது ஒடிசாவை சந்திக்கிறது.
- கடைசி கட்ட நெருக்கடியை சிறப்பாக எதிர்கொண்டு ரிங்கு சிங் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தார்.
- இவர் கொல்கத்தா அணியில் விளையாடும்போது தொடர்ந்து நான்கு சிக்ஸ் விளாசியவர்.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி கடந்த 23-ந்தேதி (நேற்று முன்தினம்) விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 207 ரன்கள் குவித்தது.
பின்னர் இந்தியா 19.5 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. சூர்யகுமார் அவுட்டானதும் கடைசி நேரத்தில் இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. அப்போது ரிங்கு சிங் களத்தில் இருந்தார். கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தை ரிங்கு சிங் ஆஃப்சைடு பவுண்டரிக்கு விரட்டினர். அடுத்த பந்தில் ஒரு ரன் கிடைத்தது. அதன்பின் அடுத்த மூன்று பந்துகளில் இந்தியா விக்கெடடுகளை இழந்தது. இதில் இரண்டு ரன்அவுட் ஆகும்.
கடைசி பந்தை ரிங்கு சிங் சந்தித்தார். இக்கட்டான நேரத்தில் அவர் நெருக்கடிக்கு உள்ளாகவில்லை. நிதானமாக பந்தை எதிர்கொண்டு லாங்-ஆன் திசையில் சிக்ஸ் விரட்டினார். இந்த பந்து நோ-பால் என அறிவிக்கப்பட்டது. இதனால் இந்தியா வெற்றி பெற்றது. இருந்தபோதிலும், இக்கட்டான நிலையில் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தது அனைவரையும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கியது. ரிங்கு சிங்கிடம் திறமையும் நிதானமும் இருக்கிறது என விமர்சகர்கள் பாராட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தல தோனியிடம் இருந்துதான், இக்கட்டான நிலையை எப்படி எதிர்ககொள்ள வேண்டும் என்று கற்றுக் கொண்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரிங்கு சிங் கூறியதாவது:-
என்னுடைய நிதானம் ரகசியம், எம்.எஸ். தோனியிடம் கலந்துரையாடல் செய்ததன் மூலம் கிடைத்ததுதான். அவரிடம் நான் உரையாடியபோது, முடிந்த அளவிற்கு நிதானமாக இருக்க முயற்சிக்க வேண்டும். அதேபோல், கடைசி நேரத்தில் பந்து வீச்சாளர்களுக்கு நேராக மிட்ஆன்- மிட்ஆஃப் திசையில் ஷாட் செலக்சன் இருக்க வேண்டும் என்றார். அந்த வகையில்தான் இந்த போட்டியில் நிதானத்தை கடைபிடிக்க முயற்சி செய்தேன்.
இவ்வாறு எம்.எஸ். தோனி அறிவுரை வழங்கியது குறித்து ரிங்கி சிங் தெரிவித்துள்ளார். ஆனால், தோனி எப்போது அறிவுரை வழங்கினார் என்பதை ரிங்கு சிங் தெரிவிக்கவில்லை.
இதற்கிடையே கடைசி பந்து சிக்ஸ் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்பது குறித்து கவலை இல்லை. அணியின் வெற்றிதான் முக்கியம் என்றார்.

இதுகுறித்து ரிங்கி சிங் கூறுகையில் "நான் சிக்ஸ் அடித்த பந்து நோ-பால் என்று கருதவில்லை. வெளியில் இருந்து அக்சார் பட்டேல்தான் நோ-பால் என்றார். அதன்பின்தான் நோ-பால் என்று எனக்குத் தெரியும். வெற்றிக்கான சிக்ஸ் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வில்லை என்பது பெரிய விசயம் அல்ல. நாங்கள் போட்டியில் வெற்றி பெற்றோம். இதுதான் விசயம்" என்று ரிங்கு சிங் தெரிவித்தார்.
ஐபிஎல் போட்டியில் கொல்கததா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் ரிங்கு சிங், தொடர்ந்து நான்கு சிக்ஸ் விளாசினார். அப்போது தேர்வாளர்கள் கண்ணில் பட்டு இந்திய அணிக்கு தேர்வானார்.
- சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷின்சென் நகரில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.
ஷின்சென்:
சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷின்சென் நகரில் நடந்து வருகிறது.
ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ்-சிராக் ஜோடி இந்தோனேசிய ஜோடியை எதிர்கொண்டது.
இதில் சாத்விக்-சிராக் ஜோடி 21-15, 21-16 என்ற புள்ளிக்கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
அரையிறுதியில் இந்திய ஜோடி சீன ஜோடியை எதிர்கொள்கிறது.
- உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி கோப்பையைக் கைப்பற்றியது.
- பிரதமர் மோடி இந்திய அணியின் டிரெஸ்சிங் ரூமுக்குச் சென்று வீரர்களுக்கு ஆறுதல் கூறினார்.
புதுடெல்லி:
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது.
இதற்கிடையே, போட்டியை நேரில் காண வந்த பிரதமர் மோடி இந்திய அணியின் டிரெஸ்சிங் ரூமுக்குச் சென்றார். அங்கு கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட வீரர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். இதுதொடர்பான புகைப்படங்கள் வைரலானது.
இந்நிலையில், பிரதமர் மோடி டிரஸ்சிங் ரூம் சென்று பார்வையிட்டது வீரர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தும் என முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், டிரஸ்சிங் ரூம் எப்படி இருக்கும் என்பதை நான் அறிந்திருப்பதாலும், கிரிக்கெட் வீரராக இருந்து பல ஆண்டுகளாக இந்தியாவின் பயிற்சியாளராக 7 ஆண்டுக்கும் மேலாக அந்த டிரஸ்சிங் ரூமில் இருப்பதாலும் இது ஒரு சிறந்த விஷயம் என்று நினைக்கிறேன்.
நாட்டின் பிரதமரைப் போன்ற ஒருவர் டிரஸ்சிங் ரூமுக்கு வந்து பார்வையிட்டால், அது மிகப்பெரிய ஒன்று. ஏனெனில் அது வீரர்களின் உற்சாகத்தை உயர்த்தும். ஒரு நாட்டின் பிரதமராக இருக்கும்போது டிரஸ்ஸிங் ரூமுக்குள் செல்வது சிறப்பு. இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்திருந்தால் உங்களுக்குத் தெரிந்ததைப் போல என்ன உணர்ந்திருப்பேன் என்று எனக்குத் தெரியும் என குறிப்பிட்டார்.
- மகளிர் பிரீமியர் லீக் தொடர் முதல் முறையாக இந்த ஆண்டு நடத்தப்பட்டது.
- இத்தொடரின் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பை வென்றது.
மும்பை:
இந்தியாவில் தொடங்கப்பட்ட ஆடவருக்கான ஐ.பி.எல். தொடர் 16 ஆண்டுகள் தொடர்ந்து நடைபோட்டு வருகிறது. இதேபோன்று, மகளிருக்கான டி-20 போட்டியை முதல்முறையாக இந்த ஆண்டு பி.சி.சி.ஐ. வெற்றிகரமாக நடத்தியது. இதில் மும்பை, பெங்களூரு, டெல்லி, அகமதாபாத் ,லக்னோ ஆகிய 5 அணிகள் முதல் சீசனில் விளையாடியது.
ஐ.பி.எல். போட்டிக்கு இணையாக நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் மும்பை அணி கோப்பையை வென்றது.
இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் போட்டிக்கான ஏலம் மும்பையில் டிசம்பர் 9-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஆடுகளங்களின் தன்மையை முன்கூட்டியே சரி பார்ப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.
- பொதுவாக பந்து வீச்சாளர்கள் மைதானத்திற்கு வந்த பிறகு ஆடுகளத்தை சரி பார்க்கிறார்கள்.
இந்தியாவில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டியில் இந்தியாவை தோற்கடித்தது.
இதற்கிடையே உலக கோப்பை மீது ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் கால் வைத்திருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. இதற்கு பலர் கண்டனம், அதிருப்தி தெரிவித்தனர்.
இந்த நிலையில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி கூறியதாவது:-
உலக கோப்பை மீது ஆஸ்திரேலிய வீரர் தனது கால்களை வைத்திருந்தது என் மனதை காயப்படுத்தியது.
உலகில் உள்ள அனைத்து அணிகளும் வெல்ல போராடும் கோப்பை, உங்கள் தலைக்கு மேல் நீங்கள் தூக்க விரும்பும் கோப்பை மீது கால் வைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை தரவில்லை.
ஆடுகளங்களின் தன்மையை முன்கூட்டியே சரி பார்ப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. பொதுவாக பந்து வீச்சாளர்கள் மைதானத்திற்கு வந்த பிறகு ஆடுகளத்தை சரி பார்க்கிறார்கள்.
நான் ஆடுகளம் அருகில் செல்வதில்லை. ஏனென்றால் நீங்கள் பந்து வீசும் போதுதான் அது எப்படி உள்ளது என்பது உங்களுக்குத் தெரியும். பிறகு ஏன் அழுத்தம் கொடுக்க வேண்டும். அதை எளிமையாக வைத்திருப்பது நல்லது. உங்களை நிதானமாக வைத்திருங்கள். அப்போது தான் நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடைசி கட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி ஆஸ்திரேலியாவை கட்டுப்படுத்தினர்.
- மைதானத்தில் ரசிகர்கள் பெரும் ஆதரவு அளித்தனர்.
ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டித்தொடரில் விளையாடுகிறது.
விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 208 ரன்கள் குவித்தது. ஜோஷ் இங்லிஸ் சதம் (110) அடித்தார். பின்னர் விளையாடிய இந்தியா 19.5 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 209 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
சூர்யகுமார் யாதவ் 80 ரன்னும், இஷான்கிஷன் 58 ரன்னும் எடுத்தனர். கடைசி பந்தில் வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில் ரிங்கு சிங் சிக்சர் அடித்தார். ஆனால் அது 'நோ-பால்' ஆக வீசப்பட்டதால் சிக்சர் கணக்கில் எடுத்து கொள்ளப்படவில்லை.
வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது:-
மைதானத்தில் வீரர்கள் திறமையை வெளிப்படுத்திய விதத்தில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். நாங்கள் நெருக்கடியில் இருந்தோம். ஆனால் அதில் இருந்து ஒவ்வொரும் மீண்டு வெற்றி பெற்றது சிறப்பானது.
கேப்டன் பொறுப்பு என்பது ஒரு பெருமையான தருணம். இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவு எல்லோருக்கும் இருக்கும். இன்று நான் கேப்டனாக அறிமுகமாகி விளையாடியது மிகப்பெரிய தருணமாக நினைக்கிறேன்.
இந்த போட்டியின் போது 2-வது பாதியில் பனி இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் பனி தாக்கம் இல்லை. இந்த மைதானம் சிறியது என்று தெரியும். இதனால் 230 ரன்கள் இலக்கு வரும் என்று நினைத்தேன்.
ஆனால் கடைசி கட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி ஆஸ்திரேலியாவை கட்டுப்படுத்தினர். 16-வது ஓவருக்கு பிறகு மூன்று வேகப்பந்து வீச்சாளர்களும் ஆட்டத்தை எங்கள் பக்கம் கொண்டு வந்தனர். இது அற்புதமானது.
இஷான் கிஷனிடம், இலக்கை பற்றி நினைக்காமல் உங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள். 10 ஓவர்களுக்கு பிறகு சேசிங் செய்ய வேண்டிய ரன்கள் எவ்வளவு என்று பார்த்து கொள்ளலாம் என்று கூறினேன்.
இதனால் ரன் இலக்கை தொட முடிந்தது. ரிங்கு சிங் அருமையாக போட்டியை முடித்து வைத்தார். நான் கேப்டன்சியை டிரஸ்சிங் ரூமில் விட்டு விட்டேன். நான் 10 அல்லது 40 பந்துகளில் பேட்டிங் செய்தாலும் ரசித்து விளையாட முயற்சித்தேன். மைதானத்தில் ரசிகர்கள் பெரும் ஆதரவு அளித்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இரு அணிகள் மோதும் 2-வது இருபது ஓவர் போட்டி 26-ந்தேதி திருவனந்தபுரத்தில் நடக்கிறது.






