search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    தேசிய சீனியர் ஆக்கி: தமிழக அணி அரையிறுதிக்கு தகுதி
    X

    தேசிய சீனியர் ஆக்கி: தமிழக அணி அரையிறுதிக்கு தகுதி

    • முதல் பாதி நேர ஆட்டத்தில் உத்தர பிரசேதம் 2-0 என முன்னிலைப் பெற்றிருந்தது.
    • 2-வது பாதி ஆட்டத்தில் தமிழக அணி 3 கோல்கள் அடித்து வெற்றி பெற்றது.

    தமிழ்நாடு ஆக்கி அமைப்பு சார்பில் 13-வது தேசிய சீனியர் ஆக்கிப் போட்டி சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 17-ந்தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் 28 அணிகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டது.

    நேற்றுடன் லீக் ஆட்டங்கள் முடிந்தன. அரியானா (ஏ பிரிவு), தமிழ்நாடு (பி), கர்நாடகா (சி), பஞ்சாப் (டி), மணிப்பூர் (இ), ஜார்க்கண்ட் (எப்), உத்தரப்பிரதேசம் (ஜி), ஒடிஷா (எச்) ஆகிய 8 அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெற்றன.

    சத்தீஸ்கர், குஜராத், இமாச்சலப் பிரதேசம், அசாம், தத்ரா நகர் கவேலி, பீகார், மராட்டியம், உத்தரகாண்ட் , பெங்கால், மத்திய பிரதேசம், ஜம்மு காஷ்மீர், சண்டிகர், ஆந்திரா, கோவா, புதுச்சேரி, ராஜஸ்தான், கேரளா, டெல்லி, தெலுங்கானா, அருணாசலப் பிரதேசம் ஆகிய அணிகள் வெளியேறின.

    9-வது நாளான இன்று காலிறுதி போட்டிகள் நடைபெற்றது. காலை 7 மணிக்கு நடந்த காலிறுதி ஆட்டத்தில் கர்நாடகா- ஜார்க்கண்ட் அணிகள் மோதின.

    இதில் கர்நாடகா 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது. கர்நாடகா அணிக்காக ஹாரிஸ் முதாகர் 2 கோலும் (46 மற்றும் 49-வது நிமிடம்) கேப்டன் ஷேசே கவுடா (23-வது நிமிடம்), லிகித்பிம் (32-வது நிமிடம்) தலா ஒரு கோலும் அடித்தனர்.

    ஜார்க்கண்ட் அணியில் தில்பர் பர்லா 39-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

    அடுத்து நடைபெற்ற கால் இறுதியில் தமிழ்நாடு- உத்தர பிரதேசம் அணிகள் மோதின. முதல் பாதி ஆட்டத்தில் உத்தர பிரதேசம் 2 கோல் அடித்து முன்னிலையில் இருந்தது. 27-வது நிமிடத்தில் மனிஷ் சகானியும், 30-வது நிமிடத்தில் சுனில் யாதவும் அந்த அணிக்காக கோல் அடித்தனர்.

    2-வது பாதியில் தமிழக வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். 33-வது நிமிடத்தில் சுந்தரபாண்டி முதல் கோலை அடித்தார். 52-வது நிமிடத்தில் கேப்டன் ஜோசுவா பெனடிக்ட் வெஸ்லி 2-வது கோலை அடித்து சமன் செய்தார். இதனால் 2-2 என்ற நிலை ஏற்பட்டது.

    59-வது நிமிடத்தில் தமிழகம் 3-வது கோலை அடித்தது. கேப்டன் வெஸ்லி இந்த கோலை அடித்தார்.

    ஆட்டத்தின் முடிவில் தமிழ்நாடு 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அரையிறுதிக்கு தகுதி பெற்றது. தமிழக அணி அரை இறுதியில் அரியானா அல்லது ஒடிசாவை சந்திக்கிறது.

    Next Story
    ×