என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவரில் 231 ரன்கள் குவித்தது.

    அகமதாபாத்,

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி அகமதாபாத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 231 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 42 பந்தில் 73 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 25 பந்தில் 63 ரன்களும் அடித்தனர். சஞ்சு சாம்சன் 37 ரன்னும், அபிஷேக் சர்மா 34 ரன்னும் எடுத்தனர்.


    தென் ஆப்பிரிக்கா சார்பில் கார்பின் போஷ் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 232 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. டி காக் அதிரடியாக ஆடினார். 35 பந்தில் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். டெவால்டு பிரேவிஸ் 17 பந்தில் 31 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா டி20 தொடரை 3-1 என கைப்பற்றி அசத்தியது.

    இந்தியா சார்பில் வருண் சக்கரவர்த்தி 4 விக்கெட்டும், பும்ரா 2 விக்கெட்டும், பாண்ட்யா, அர்ஷ்தீப் சிங் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 138 ரன்களை எடுத்தது.
    • அடுத்து ஆடிய இந்திய அணி 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    துபாய்:

    12-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு மோதுகின்றன.

    லீக் சுற்று முடிவில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

    இந்நிலையில், முதல் அரையிறுதியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சமிகா 42 ரன்கள் எடுத்தார்.

    தொடர்ந்து ஆடிய இந்திய அணி 18 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    மற்றொரு அரையிறுதியில் வங்கதேசத்தை பாகிஸ்தான் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    நாளை மறுதினம் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    • முதல் பார்வையற்ற பெண்கள் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
    • அருந்ததி 70 கிலோ பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றார்.

    2025-ம் ஆண்டு இந்திய மகளிர் வீராங்கனைகளுக்கு சிறப்பான ஆண்டு என்றே சொல்லலாம். இந்த 2025-ம் ஆண்டில் கிரிக்கெட், கபடி, தடகளம் ஆகிய விளையாட்டுகளில் இந்திய வீராங்கனைகள் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர்.

    2025 மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை:

    இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்ற 2025 மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றது.


    பார்வையற்றோர் மகளிர் டி20 உலகக் கோப்பை 2025:

    இலங்கையின் கொழும்பில் நடைபெற்ற முதல் பார்வையற்ற பெண்கள் டி20 உலகக் கோப்பையில் நேபாளத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியைப் பதிவு செய்தது. பார்வையற்றோர் கிரிக்கெட் போட்டிகள் மற்ற கிரிக்கெட்டுகளிலிருந்து வேறுபட்டவை என்றாலும் இந்த வெற்றியும் இந்திய மகளிருக்கும், மாற்று திறனாளிகளுக்கும் புது உத்வேகத்தை கொடுத்தது.


    பார்வையற்றோர் கிரிக்கெட்டில் பார்வையே இல்லாதவர்கள், மிகக் குறைந்த பார்வை உள்ளவர்கள் மற்றும் ஒரு கண்ணில் மட்டும் பார்வை உள்ளவர்கள் விளையாடுகின்றனர். இந்திய மகளிர் அணி இந்தப் போட்டியின் 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் நேபாளத்தை தோற்கடித்து முதல் பார்வையற்ற பெண்கள் டி20 உலகக் கோப்பையை வென்றது.

    மகளிர் கபடி உலகக் கோப்பை 2025:

    இந்திய அணி 2025ம் ஆண்டு மகளிர் கபடி உலகக் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன்மூலம், இந்திய மகளிர் கபடி அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை தக்கவைத்து கொண்டது. இந்திய மகளிர் கபடி அணி ஒரு போட்டியில் கூட தோல்வியடையவில்லை. அரையிறுதியில் ஈரானை தோற்கடித்த இந்திய அணி, பின்னர் இறுதிப் போட்டியில் சீன தைபேயை வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.


    பிற விளையாட்டுகளில் இந்திய மகளிர் அணி:

    தெலுங்கானாவின் தேஜம் நிகாத் ஜரீன் 51 கிலோ பிரிவில் உலக குத்துச்சண்டை கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.


    நூபுர் ஷெரோன் 80+ கிலோ பிரிவில் உலக குத்துச்சண்டை கோப்பையையும், அருந்ததி 70 கிலோ பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றது இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது.


    உலக ஸ்னூக்கர் பட்டத்தை வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற வரலாற்றை அனுபமா ராமச்சந்திரன் படைத்துள்ளார்.


    பாரா வில்வித்தையில் ஷீத்தல் தேவி கைகள் இல்லாத போதிலும், தனது கால்களால் அம்பை எய்து உலக பாரா சாம்பியனானார்.


    உடற்பயிற்சி மற்றும் உடற்கட்டமைப்புத் துறையில் மிஸ் ஜோத்ஸ்னா வெங்கடேஷ், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற ஐசிஎன் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்று முதலிடம் பிடித்தார்.


    டென்னிஸில் ஸ்ரீவள்ளி ரஷ்மிகா பாமிடிபதி ஃபெனெஸ்டா ஓபன் தேசிய சாம்பியன்ஷிப்பை வென்றார்.


    கோல்ஃப் விளையாட்டில் இளம் நட்சத்திரம் பிரணவி உர்ஸ் 14 வயதில் ஐஜிபிஎல்லின் முதல் பெண் சாம்பியனாகி வரலாறு படைத்தார்.



     


    • மோடி ஸ்டேடியத்தில் போட்டி நடைபெறுகிறது
    • இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் மூன்று போட்டிகள் நிறைவடைந்த நிலையில், லக்னோவில் நடக்க இருந்த 4-வது போட்டி கடுமையான பனிமூட்டத்தால் 'டாஸ்' கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இதனால் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

    இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

    இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ் மற்றும் காயத்தால் அவதிப்படும் சுப்மன் கில் ஆகியோருக்கு பதிலாக பும்ரா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்தியா: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே. ஜிதேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், வருண் சகரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங்.

    தென் ஆப்பிரிக்கா: குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஐடன் மார்க்ரம் (கேப்டன்). டெவால்ட் ப்ரீவிஸ், டேவிட் மில்லர். டொனோவன் பெரீரா, ஜார்ஜ் லிண்டே, மார்கோ ஜான்சன், கார்பின் போஷ், லுங்கி நிகிடி, ஒட்னீல் பார்ட்மேன்

    • இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 138 ரன்கள் எடுத்தது.
    • இந்திய தரப்பில் ஹெனில் படேல், கனிஷ்க் சௌஹான் ஆகியோர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    துபாய்:

    19 வயதுக்குட்பட்டோருக்கான (இளையோர்) 12-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடந்து வருகிறது. இதில் இன்று நடக்கும் அரையிறுதியில் ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி, இலங்கையுடன் மோதுகிறது.

    இந்த போட்டி இன்று காலை 10.30 மணிக்கு தொடங்க வேண்டியது. மழை காரணமாக டாஸ் கூட போடமுடியாமல் இருந்தது. இதனையடுத்து போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக ஆட்டம் 20 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

    இந்நிலையில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 28 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து கேப்டன் விமத் தின்சாரா மற்றும் சாமிக ஹீனடிகல ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 45 ரன்கள் சேர்த்தது. 32 ரன்கள் எடுத்த போது தின்சாரா ஆட்டமிழந்தார்.

    அதனை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். 7-வது விக்கெட்டுக்கு சாமிக ஹீனடிகலவுடன் செத்மிகா செனவிரத்ன ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி 52 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்தது. இதனால் இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 138 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் ஹெனில் படேல், கனிஷ்க் சௌஹான் ஆகியோர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    • விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 72 ரன்னில் இருந்த போது அவுட்டில் இருந்து தப்பித்து சதமும் அடித்து விட்டார்.
    • இந்த ஸ்னிக்கோ மீட்டர் தொழில்நுட்பத்தை நீக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் வலியுறுத்தியுள்ளார்.

    ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 371 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து அணி 286 ரன்களில் ஆல் அவுட் ஆனது. 85 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது.

    முன்னதாக கிரிக்கெட் போட்டிகளில் பந்து பேட்ஸ்மேனின் பேட் மற்றும் கையுறையில் பட்டதா? இல்லையா என்பதை கண்டறிய ஸ்னிக்கோ மீட்டர் கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட தவறு காரணமாக முதல் நாளில் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 72 ரன்னில் இருந்த போது அவுட்டில் இருந்து தப்பித்து சதமும் அடித்து விட்டார்.

    இந்த நிலையில் 2-வது நாளிலும் இதே சர்ச்சை எழுந்தது. இங்கிலாந்து வீரர் ஜேமி சுமித் 16 ரன்னில் நின்றபோது கம்மின்ஸ் வீசிய பந்து அவரது கையுறையில் உரசியதுடன் ஹெல்மெட்டில் பட்டு ஸ்லிப்பில் நின்ற உஸ்மான் கவாஜாவிடம் சிக்கியது. கள நடுவர் அவுட் வழங்க மறுத்ததால் ஆஸ்திரேலிய அணியினர் நடுவரின் முடிவை எதிர்த்து அப்பீல் செய்தனர். இதனை ஆய்வு செய்த 3-வது நடுவர் அவுட் இல்லை என்று அறிவித்தார். ஏனெனில் பந்து பேட் அல்லது கையுறையில் பட்டு சென்றதற்கான அதிர்வை ஸ்னிக்கோ மீட்டர் சரியாக காட்டவில்லை.

    இதேபோல் அவர் 22 ரன்னில் கம்மின்ஸ் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் கேட்ச் ஆனார். அந்த அவுட்டை எதிர்த்து ஜேமி சுமித் அப்பீல் செய்தார். இதையடுத்து ரீப்ளேயை பார்த்த போது பந்துக்கும், பேட்டுக்கும் சற்று இடைவெளி இருப்பது போல் தெரிந்தது.

    ஆனால் ஸ்னிக்கோ மீட்டர் பந்து பேட்டில் உரசியதற்கான அடையாளத்தை காட்டியது. அதன் அடிப்படையில் நடுவரும் அவுட்டை உறுதி செய்தார். இதனால் ஸ்னிக்கோ மீட்டரின் முடிவுகள் விவாதப்பொருளாகி இருக்கிறது. சர்ச்சைக்குரிய இந்த ஸ்னிக்கோ மீட்டர் தொழில்நுட்பத்தை நீக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் வலியுறுத்தியுள்ளார்.

    • இந்திய அணி என்று பெயரிட்டது கடைசி வரை எனக்கு தெரியாது.
    • கடந்த காலங்களில் இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் தனியார் அணிக்காக இணைந்து விளையாடி இருக்கிறார்கள்.

    கராச்சி:

    பக்ரைனில் கடந்த 16-ந்தேதி தனியார் அமைப்பு சார்பில் ஜி.சி.சி. கோப்பைக்கான கபடி போட்டி நடத்தப்பட்டது. இதில் இந்தியா, பாகிஸ்தான், கனடா, ஈரான் போன்ற பெயரில் அணிகள் உருவாக்கப்பட்டு அதன் சார்பில் வீரர்கள் ஜாலியாக பங்கேற்றனர். பெரும்பாலான அணிகளில் அந்தந்த நாட்டை சேர்ந்தவர்களே இடம் பெற்றிருந்தனர்.

    ஆனால் இந்திய அணியின் சார்பில் களம் இறங்கிய வீரர்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த சர்வதேச கபடி வீரர் உபைதுல்லா ராஜ்புத்தும் ஒருவர். அவர் இந்திய அணிக்குரிய சீருடை அணிந்தும், தேசிய கொடியை உற்சாகமாக அசைத்தப்படியும் இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அவருக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதனை கவனத்தில் கொண்டுள்ள பாகிஸ்தான் கபடி சம்மேளனம் அவர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. இதற்காக வருகிற 27-ந்தேதி அவசர கூட்டத்தை கூட்டியுள்ளனர்.

    பாகிஸ்தான் கபடி சம்மேளன செயலாளர் ராணா சர்வார் கூறுகையில், 'இந்தியாவைச் சேர்ந்த வீரர்கள், இந்திய தனியார் அணியை பிரதிநிதித்துவப்படுத்தினர். ஆனால் அவர்களுக்காக உபைதுல்லா ஆடியதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் கபடி சம்மேளனத்திடமோ அல்லது பாகிஸ்தான் விளையாட்டு வாரியத்திடமே எந்த அனுமதியும் பெறாமல் சென்றுள்ளார். அவர் மட்டுமல்ல இவ்வாறு 16 வீரர்கள் பக்ரைன் சென்றுள்ளனர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

    உபைதுல்லா ராஜ்புத் கூறுகையில், 'இது தனியார் போட்டி. இதில் இந்தியா, பாகிஸ்தான் பெயரை பயன்படுத்த வேண்டாம் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கேட்டுக் கொண்டேன். ஆனால் அவர்கள் இந்திய அணி என்று பெயரிட்டது கடைசி வரை எனக்கு தெரியாது. கடந்த காலங்களில் இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் தனியார் அணிக்காக இணைந்து விளையாடி இருக்கிறார்கள். ஆனால் ஒரு போதும் இந்தியா அல்லது பாகிஸ்தான் பெயரில் விளையாடவில்லை. தவறுதலாக இந்தியாவின் பெயரில் விளையாடியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்' என்றார்.

    • ஹெட் 142 ரன்னிலும் அலெக்ஸ் 52 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
    • 99 ரன்னில் ஹெட்டுக்கு கேட்ச் மிஸ் செய்யப்பட்டது.

    அடிலெய்டு:

    ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான ஆசஸ் தொடரின் 3- வது டெஸ்ட் போட்டி அடிலெய்டுவில் நடைபெற்று வருகிறது.

    ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 371 ரன் குவித்தது. அலெக்ஸ் கேரி 106 ரன்னும், உஸ்மான் கவாஜா 82 ரன்னும், ஸ்டார்க் 54 ரன்னும் எடுத்தனர். ஜோப்ரா ஆர்ச்சர் 5 விக்கெட்டும், கார்ஸ், வில் ஜேக்ஸ் தலா 2 விக்கெட்டும், ஜோஷ் டங் 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 213 ரன் எடுத்து இருந்தது. பென் ஸ்டோக்ஸ் 45 ரன்னும், ஆர்ச்சர் 30 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. 158 ரன்கள் பின்தங்கி, கைவசம் 2 விக்கெட் என்ற நிலையில் இங்கிலாந்து தொடர்ந்து ஆடியது. அந்த அணி மேலும் 73 ரன் எடுத்தது. இங்கிலாந்து 87.2 ஓவரில் 286 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. இது ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை விட 85 ரன் குறைவாகும்.

    கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணியை சரிவில் இருந்து மீட்டார். அவருக்கு ஆர்ச்சர் உறுதுணையாக இருந்தார். பென் ஸ்டோக்ஸ் 37-வது அரை சதத்தை பதிவு செய்தார். அவர் 83 ரன் எடுத்தார். 18-வது டெஸ்டில் ஆடும் ஆர்ச்சர் முதல் அரை சதம் அடித்தார். அவர் 51 ரன் எடுத்தார். 9-வது விக்கெட் ஜோடி 106 ரன் எடுத்தது.

    கம்மின்ஸ், ஸ்காட் போலண்டுக்கு தலா 3 விக்கெட்டும், நாதன் லயனுக்கு 2 விக்கெட்டும், ஸ்டார்க், கேமரூன் கிரீனுக்கு தலா 1 விக்கெட்டும் கிடைத்தன.

    85 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. 2-வது ஓவரில் தொடக்க ஜோடி பிரிந்தது. ஜேக் வெதரால்ட் 1 ரன்னில் கார்ஸ் பந்தில் அவுட் ஆனார். அடுத்து வந்த லெபுசென் 12 ரன்னிலும் கவாஜா 40, கிரீன் 7 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

    இதனையடுத்து டிராவிஸ் ஹெட் மற்றும் அலெக்ஸ் கேரி ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் ஹெட் சதமும் அலெக்ஸ் கேரி அரை சதமும் கடந்தனர். இதனால் 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 271 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 356 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஹெட் 142 ரன்னிலும் அலெக்ஸ் 52 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இங்கிலாந்து தர்ப்பில் ஜோஸ் டங் 2 விக்கெட்டும் வில் ஜக் மற்றும் பிரைடன் கார்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • கேப்டன் என்பவர் ஒரு வீரர் சதம் அடித்து விட்டால், அவரை அழைத்து விருந்து கொடுக்க தேவையில்லை.
    • பயிற்சியாளர் அல்லது கேப்டனின் பணியே அணிக்கு நம்பிக்கை தருவது மட்டும்தான்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்தது. இதனால் இந்திய அணி விமர்சனத்துக்கு உள்ளானது. குறிப்பாக பயிற்சியாளர் கம்பீர் மீது முன்னாள் வீரர்கள் விமர்சனங்களை முன்வைத்தனர்.

    இந்த நிலையில் கம்பீருக்கு இந்திய அணி முன்னாள் கேப்டன் கபில்தேவ் அறிவுரை வழங்கி உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    என்னை பொறுத்தவரை தற்போது உள்ள கிரிக்கெட் உலகில் பயிற்சியாளர் என்ற பொறுப்பே இல்லை என்று நினைக்கிறேன். காம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்க முடியாது. அவர் அணியின் மேலாளராக வேண்டுமென்றால் இருக்கலாம்.

    நான் பயிற்சியாளர் பற்றி பேச வேண்டும் என்றால் பள்ளிகல்லூரியில் எங்களுக்கு கிரிக்கெட் கற்றுக் கொடுத்த நபர்களைப் பற்றி தான் பேச வேண்டும். அவர்கள் தான் உண்மையில் பயிற்சியாளர்கள்.

    ஒரு சுழற்பந்து வீச்சாளருக்கோ அல்லது விக்கெட் கீப்பருக்கோ காம்பீர் எவ்வாறு சொல்லித்தர முடியும்? எனவே வீரர்களை நிர்வகிப்பது தான் மிகவும் முக்கியம். அணியின் மேலாளராக நீங்கள் வீரர்களை ஊக்கப்படுத்தி உங்களால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை கொண்டு வர வேண்டும்.

    இதன் மூலம் இளம் வீரர்கள் உங்களைப் பார்த்து பின் தொடர்வார்கள். பயிற்சியாளர் அல்லது கேப்டனின் பணியே அணிக்கு நம்பிக்கை தருவது மட்டும்தான். இன்னும் உன்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்று கூறி, அதன் பின் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும்.

    கேப்டன் என்பவர் ஒரு வீரர் சதம் அடித்து விட்டால், அவரை அழைத்து விருந்து கொடுக்க தேவையில்லை. அதற்கு பதிலாக யார் சரியாக விளையாடவில்லையோ அவர்களுடன் விருந்துக்கு செல்ல வேண்டும்.

    அவர்களுக்கு நம்பிக்கையை நாம் ஏற்படுத்த வேண்டும். ஒரு கேப்டனாக நாம் நமது செயல்பாடுகளை மட்டும் கவனிக்கக்கூடாது. ஒட்டுமொட்ட அணியும் ஒருங்கிணைத்து செயல்பட வைக்க வேண்டும்.

    இவ்வாறு கபில்தேவ் கூறினார்.

    • ஒரு அரையிறுதியில் இந்திய அணி, இலங்கையை சந்திக்கிறது.
    • மற்றொரு அரையிறுதியில் பாகிஸ்தான் அணி, வங்காளதேசத்தை சந்திக்கிறது.

    துபாய்:

    19 வயதுக்குட்பட்டோருக்கான (இளையோர்) 12-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடந்து வருகிறது. இதில் இன்று நடக்கும் அரையிறுதியில் ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி, இலங்கையுடன் மோதுகிறது. மற்றொரு அரையிறுதியில் பாகிஸ்தான் அணி, நடப்பு சாம்பியன் வங்காளதேசத்தை சந்திக்கிறது.

    லீக் சுற்றில் தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போட்ட இந்திய அணி அரையிறுதியிலும் ஆதிக்கம் செலுத்துவதற்கு வாய்ப்புள்ளது.

    இந்நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்க வேண்டிய ஆட்டம், மழை காரணமாக டாஸ் கூட போடமுடியாமல் உள்ளது. மற்றொரு அரைஇறுதி ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

    • பென் ஸ்டோக்ஸ் 83 ரன்களில் ஆட்டமிழந்தார்.
    • டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை 6-வது முறையாக ஸ்டார்க் வீழ்த்தியுள்ளார்.

    அடிலெய்டு:

    ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3-வது போட்டி அடிலெய்டில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 371 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 106 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 5 விக்கெட்டுகளை அள்ளினார்.

    இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி 168 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இந்த இக்கட்டான சூழலில் பின்வரிசையில் களமிறங்கிய ஜோப்ரா ஆர்ச்சர் கேப்டன் ஸ்டோக்சுடன் கை கோர்த்து அணிக்கு வலு சேர்த்தார்.

    இந்த ஜோடி சிறப்பாக ஆடி இங்கிலாந்து அணி 200 ரன்களை கடக்க உதவியது. ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் இருவரும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தனர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஸ்டோக்ஸ் 83 ரன்களில் வெளியேறினார். ஆர்ச்சர் 51 ரன்களில் வெளியேறினார். இறுதியில் இங்கிலாந்து அணி 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் 85 ரன்கள் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றது.

    முன்னதாக இந்த போட்டியில் பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை ஸ்டார்க் வீழ்த்தினார். இதனால விரக்தியடைந்த ஸ்டோக்ஸ் கோபத்தில் துள்ளிக்குதித்து தன்னை தானே திட்டிக் கொண்டார். மேலும் பேட்டை மேலே தூக்கி போட்டு கோபத்தில் வெளியேறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • நியூசிலாந்து வீரர் கான்வே 227 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
    • வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ், ஆண்டர்சன் பிலிப், ஜஸ்டின் கிரீவ்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    மவுண்ட் மாங்கானு:

    நியூசிலாந்து வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மவுண்ட் மாங்கானுவில் நடைபெற்று வருகிறது.

    முதலில் விளையாடிய நியூசிலாந்து நேற்றைய முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 334 ரன் எடுத்து இருந்தது.

    தொடக்க வீரர்களான கேப்டன் டாம் லாதம், கான்வே சதம் அடித்தனர். லாதம் 137 ரன் எடுத்தார். கான்வே 178 ரன்னிலும், ஜேக்கப் டபி 9 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. கான்வே மிகவும் அபாரமாக ஆடி இரட்டை சதம் அடித்தார். அவர் 316 பந்துகளில் 28 பவுண்டரியுடன் 200 ரன்னை எடுத்தார்.

    34 வயதான கான்வேக்கு இது 2-வது இரட்டை சதமாகும். இதற்கு முன்பு 2021-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் இரட்டை சதம் அடித்து இருந்தார். கான்வே 227 ரன்னில் ஆட்டம் இழந்தார். டெஸ்டில் அவரது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

    5-வது வீரராக களம் இறங்கிய ரச்சின் ரவீந்திரா அரைசதம் அடித்தார். டேரில் 11, டாம் ப்ளண்டெல் 4, பிலிப்ஸ் 29, ஜகரி ஃபௌல்க்ஸ் 1 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். இதனையடுத்து நியூசிலாந்து 575 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. ரச்சின் 72 ரன்னிலும் அஜாஸ் படேல் 30 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ், ஆண்டர்சன் பிலிப், ஜஸ்டின் கிரீவ்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ×