என் மலர்
கிரிக்கெட் (Cricket)

வருண் சக்கரவர்த்தி அசத்தல்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை 3-1 என கைப்பற்றியது இந்தியா
- டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவரில் 231 ரன்கள் குவித்தது.
அகமதாபாத்,
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி அகமதாபாத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 231 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 42 பந்தில் 73 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 25 பந்தில் 63 ரன்களும் அடித்தனர். சஞ்சு சாம்சன் 37 ரன்னும், அபிஷேக் சர்மா 34 ரன்னும் எடுத்தனர்.
தென் ஆப்பிரிக்கா சார்பில் கார்பின் போஷ் 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 232 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. டி காக் அதிரடியாக ஆடினார். 35 பந்தில் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். டெவால்டு பிரேவிஸ் 17 பந்தில் 31 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா டி20 தொடரை 3-1 என கைப்பற்றி அசத்தியது.
இந்தியா சார்பில் வருண் சக்கரவர்த்தி 4 விக்கெட்டும், பும்ரா 2 விக்கெட்டும், பாண்ட்யா, அர்ஷ்தீப் சிங் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.






