என் மலர்
விளையாட்டு
- முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 208 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய இந்தியா இஷான் கிஷன், சூர்யகுமார் அதிரடியில் எளிதில் வென்றது.
ராய்ப்பூர்:
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாக்பூரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 208 ரன்கள் குவித்தது. மிட்செல் சாண்ட்னர் 47 ரன்னும், ரச்சின் ரவீந்திரா 44 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. அபிஷேக் சர்மா டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். சஞ்சு சாம்சன் 6 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் இஷான் கிஷனுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நியூசிலாந்து பந்து வீச்சை பதம் பார்த்தது. குறிப்பாக, இஷான் கிஷன் ருத்ர தாண்டவமாடி அரை சதம் கடந்தார்.
3வது விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்த நிலையில் இஷான் கிஷன் 32 பந்துகளில் 76 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து சூர்யகுமார் யாதவும் அரை சதம் கடந்தார்.
இறுதியில், இந்திய அணி 15.2 ஓவரில் 209 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், டி20 தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது. சூர்யகுமார் யாதவ் 82 ரன்னும், ஷிவம் துபே 36 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது.
- இதில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி 3வது சுற்றில் தோல்வி அடைந்தார்.
மெல்போர்ன்:
நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடக்கிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, அமெரிக்காவின் இவா ஜோவிக் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய இவா ஜோவிக் 6-2, 7-6 (3) என்ற செட் கணக்கில் வென்று 4வது சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி 3வது சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறினார்.
- முகமது ரிஸ்வான், ஹாரிஸ் ராஃப் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.
- ஜனவரி 29 முதல் பிப்ரவரி 1 வரை லாகூரில் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், ஷாஹீன் அப்ரிடி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முகமது ரிஸ்வான், ஹாரிஸ் ராவ் ஆகியோர் சேர்க்கப்படவில்லை. விக்கெட் கீப்பராக கவாஜா நஃபே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த இந்த மாதம் தொடக்கத்தில் அணியில் அறிமுகமாகி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் சதாக் கானும் அணியில் இடம் பிடித்துள்ளார்.
பாகிஸ்தான் அணி:-
சல்மான் அலி ஆகா (கேப்டன்), அப்ரார் அகமது, பாபர் அசாம், பஹீம் அஷ்ரப், பகர் ஜமான், கவாஜா முகமது நஃபே (வி.கி.), முகமது நவாஸ், முகமது சல்மான் மிர்சா, முகமது விசாம் ஜூனியர், நசீம் ஷா, சஹிப்சதா பர்ஹான் (வி.கீ,), சைப் ஆயூப், ஷஹீன் ஷா அப்ரிடி, சதாப் பான், உஸ்மான் கான் (வி.கீ.). உஸ்மான் தரீக்.
- நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் எடுத்தது.
- இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான 2-வது டி20 போட்டி இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. பும்ரா, அகஷர் படேலுக்கு பதிலாக ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
அதன்படி நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக கான்வே, டிம் சீஃபர்ட் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே அதிரடியாக விளையாடிய கான்வே, அந்த ஓவரில் 18 ரன்கள் விளாசினார்.
9 பந்துகள் சந்தித்து 19 ரன்கள் எடுத்த நிலையில் கான்வே ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் டிம் சீஃபர்ட் 24 ரன்னில் வெளியேறினார்.
அதனை தொடர்ந்து பிலிப்ஸ் 19, டேரில் மிட்செல் 18, சாப்மேன் 10 என விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதிரடியாக விளையாடிய ரச்சின் 26 பந்தில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கடைசியில் வந்த கேப்டன் சாட்னர் 27 பந்தில் 47 ரன்கள் குவிக்க நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் எடுத்தனர். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- டெல்லி கேப்பிட்டல்ஸ் 5 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்றுள்ளது.
- இன்னும் 3 போட்டிகளில் விளையாட வேண்டியுள்ளது.
பெண்களுக்கான பிரீமியர் லீக் டி20 நடைபெற்று வரும் நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இரண்டு வீராங்கனைகள் காயத்தால் விலகியுள்ளனர்.
பேட்டர் தியா யாதவ், விக்கெட் கீப்பர் மமதா மதிவாலா ஆகியோர் காயத்தால் விலகியுள்ளனர். பிரகதி சிங் மற்றும் எட்லா ஸ்ருஜனா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இருவரையும் தலா 10 லட்சம் ரூபாய்க்கு டெல்லி அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
டெல்லி அணி 5 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. நாளை ஆர்சிபி அணியை எதிர்கொள்கிறது. 27-ந்தேதி குஜராத் அணியையும், பிப்ரவரி 1-ந்தேதி உ.பி. வாரியர்ஸ் அணியையும் எதிர்கொள்கிறது.
- இந்தியா 2011-ல் உலகக் கோப்பையை வென்றது.
- ரோகித் சர்மா தலைமையில் 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்றியது.
இந்திய அணிக்கு டி20 உலகக் கோப்பையை வாங்கிக் கொடுத்தவர் ரோகித் சர்மா. இவரது தலைமையிலான இந்திய அணி 2024-ல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது. அதற்கு முன்னதாக இந்தியா எம்.எஸ். டோனி தலைமையில் 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றிருந்தது. 13 வருடத்திற்குப் பிறகு இந்தியா உலகக் கோப்பை வென்றுள்ளது.
இது தொடர்பாக ரோகித் சர்மா கூறியதாவது:-
நம்முடைய நிலை கீழ் நோக்கி சென்று கொண்டிருக்கும்போது, அது எப்போதுமே அவ்வாறு சென்று கொண்டிருக்காது என்று எப்போதுமே நான் நம்புவேன். ஒரு காலக்கட்டத்தில் பழைய நிலை திரும்பும். ஆனால், அதற்கு 13 வருடங்கள் எடுத்துக் கொள்ளும் என நான் நினைக்கவில்லை.
2011-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றோம். அதன்பின் 2024-ல் மீண்டும் கோப்பையை கைப்பற்றினோம். அதற்கு 13 ஆண்டுகள் ஆகின. நாம் 2013-ல் சாம்பியன்ஸ் டிராபியை வென்றோம். சரியாக பார்த்தோம் என்றால் 11 வருடம் எடுத்துக் கொண்டது. எனினும், 11 வருடங்களும் மிக நீண்டு காலம்தான்.
இவ்வாறு ரோகித் சர்மா தெரிவித்தார்.
- முதல் டி20 போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.
- பும்ரா, அகஷர் படேலுக்கு இந்த போட்டியில் இடம் கிடைக்கவில்லை.
மும்பை:
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் , 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.
இதையடுத்து, கடந்த 21-ம் தேதி இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில், இரு அணிகள் இடையேயான 2-வது டி20 போட்டி இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. பும்ரா, அகஷர் படேலுக்கு பதிலாக ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்தியா:
அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரிங்கு சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப்சிங், வருண் சக்ரவர்த்தி.
- பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து சீனாவின் சென் யூபி உடன் மோதினார்.
- இந்த ஆட்டத்தில் 21-13, 21-17 என்ற கணக்கில் சிந்து தோல்வியடைந்தார்.
ஜகார்த்தா:
இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் இந்தோனேசியாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து சீனாவின் சென் யூபி உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் 21-13, 21-17 என்ற கணக்கில் சீனா வீராங்கனை சென் யூபி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
இதேபோல், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் லக்ஷயா சென் மற்றும் தாய்லாந்தை சேர்ந்த பக்கபோன் தீரரட்சகுல் ஆகியோர் மோதினர்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் தீரரட்சகுல் 21-18, 22-20 செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
- ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசி வில் பைரோம் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
- 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
16 அணிகள் பங்கேற்கும் 19 வயதுக்குட்பட்டவருக்கான (யு19) ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை - ஆஸ்திரேலிய அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி வீரர்கள், ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 18.5 ஓவர்களில் இலங்கை அணி 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசி வில் பைரோம் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து 59 ரன்கள் இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடியது.
தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி 12 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்தது. இதனால் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் ஏற்கனவே சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- சபலென்கா 7-6(7-4), 7-6( 9-7) என்ற நேர் செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
- உலகின் முதல் நிலை வீரரான அல்காரஸ் (ஸ்பெயின்) 3-வது சுற்றில் பிரான்சை சேர்ந்த சேர்ந்த கோரன்டின் மவுடெட்டை சந்தித்தார்.
மெல்போர்ன்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
உலகின் முதல் நிலை வீராங்கனையான சபலென்கா (பெலாரஸ் ) இன்று காலை நடைபெற்ற 3-வது சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரியாவை சேர்ந்த பொட்டாபோவாவை எதிர் கொண்டார். இதில் சபலென்கா 7-6(7-4), 7-6( 9-7) என்ற நேர் செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 2 மணி 2 நிமிட நேரம் தேவைப்பட்டது.
மற்றொரு ஆட்டத்தில் 17-வது வரிசையில் உள்ள விக்டோரியா எம்போகோ (கனடா) 7-6 (7-5), 5-7, 6-3 என்ற கணக்கில்14-ம் நிலை வீராங்கனையான கிளாராடவுசனை போராடி வீழ்த்தினார்.
உலகின் முதல் நிலை வீரரான அல்காரஸ் (ஸ்பெயின்) 3-வது சுற்றில் பிரான்சை சேர்ந்த சேர்ந்த கோரன்டின் மவுடெட்டை சந்தித்தார். இதில் அல்காரஸ் 6-2, 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.இந்த வெற்றியை பெற அவருக்கு 2 மணி 5 நிமிட நேரம் தேவைப்பட்டது.
உலகின் 11-நிலை வீரரான மெட்வதேவ் (ரஷியா) 3-வது சுற்றில் அங்கேரியை சேர்ந்த பேபியன் மரோஸ்சனை எதிர் கொண்டார். இதில் மெட்வதேவ் 6-7 ( 5-7), 4-6, 7-5, 6-0, 6-3 என்ற செட் கணக்கில் போராடி வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
- விரலில் ஏற்பட்ட காயத்தால் பாதியில் வெளியேறிய சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேல் இன்றைய ஆட்டத்தில் ஆடுவது சந்தேகம் தான்.
- 20 ஓவர் உலகக் கோப்பைக்கு முன்பாக நடக்கும் கடைசி தொடர் என்பதால் அவர்கள் தவறுகளை திருத்தி கொண்டு வெற்றிப்பாதைக்கு திரும்புவதில் தீவிரமாக உள்ளனர்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நாக்பூரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி சத்தீஷ்கார் தலைநகர் ராய்ப்பூரில் இன்று அரங்கேறுகிறது.
தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி அபிஷேக் ஷர்மாவின் அதிரடி ஜாலத்தால் (8 சிக்சருடன் 84 ரன்) 238 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. கடைசி கட்டத்தில் ரிங்கு சிங் 44 ரன்கள் விளாசி வலுவூட்டினார். ஆனால் 2½ ஆண்டுக்கு பிறகு அணிக்கு திரும்பிய இஷான் கிஷன் (8 ரன்) ஏமாற்றம் அளித்தார்.
பின்னர் ஆடிய நியூசிலாந்தை 190 ரன்னில் மடக்கினர். வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப்சிங், சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி (2 விக்கெட்) கட்டுக்கோப்புடன் பந்து வீசி கவனத்தை ஈர்த்தனர். ஆனால் பீல்டிங் தான் சற்று சொதப்பலாக இருந்தது. இரண்டு எளிதான கேட்ச் மற்றும் ஒரு ரன்-அவுட் வாய்ப்பை வீணடித்தனர். எனவே பீல்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள் என்று நம்பலாம். மற்றபடி இதே உத்வேகத்துடன் 2-வது ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்த தயாராக இருக்கிறார்கள். விரலில் ஏற்பட்ட காயத்தால் பாதியில் வெளியேறிய சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேல் இன்றைய ஆட்டத்தில் ஆடுவது சந்தேகம் தான்.
நியூசிலாந்து அணியை பொறுத்தவரை முதல் ஆட்டத்தில் கிளென் பிலிப்ஸ் (78 ரன்), சாப்மேன் (39 ரன்) ஆகியோர் பேட்டிங்கிலும், ஜேக்கப் டப்பி பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட்டனர். 20 ஓவர் உலகக் கோப்பைக்கு முன்பாக நடக்கும் கடைசி தொடர் என்பதால் அவர்கள் தவறுகளை திருத்தி கொண்டு வெற்றிப்பாதைக்கு திரும்புவதில் தீவிரமாக உள்ளனர். இதனால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
போட்டி நடக்கும் ராய்ப்பூரில் இதற்கு முன்பு ஒரே ஒரு 20 ஓவர் போட்டி நடந்துள்ளது. 2023-ம் ஆண்டு நடந்த அந்த ஆட்டத்தில் இந்திய அணி 20 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரிங்கு சிங், அக்ஷர் பட்டேல் அல்லது குல்தீப் யாதவ் அல்லது ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப்சிங், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி.
நியூசிலாந்து: டிவான் கான்வே, டிம் ராபின்சன், ரச்சின் ரவீந்திரா, கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னெர் (கேப்டன்), கிறிஸ்டியன் கிளார்க், கைல் ஜாமிசன் அல்லது மேட் ஹென்றி, சோதி, ஜேக்கப் டப்பி.
இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
- இந்தியாவின் சாய்னா நேவால் சமீபத்தில் ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.
- இவர் 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
புதுடெல்லி:
இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் நட்சத்திரம் சாய்னா நேவால். இவர் ஓய்வுபெறுவதாக சமீபத்தில் அறிவித்தார்.
இவர் 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றார். 2017 உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம், 2018 காமன்வெல்த்தில் தங்கம் வென்றார்.
இந்நிலையில், பேட்மிண்டனில் இருந்து ஓய்வுபெற்ற சாய்னா நேவாலுக்கு, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின்ன் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுதொடர்பாக, சச்சின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், சாய்னா, நீங்கள் இந்திய பேட்மிண்டனை உலக அரங்கிற்கு கொண்டு சென்றீர்கள். பதக்கங்களையும் தாண்டி மிகப்பெரிய சாதனை ஒன்று உள்ளது. அது, நாடு முழுவதும் உள்ள இளம் வீரர், வீராங்கனைகளுக்கு உலக அளவிலான வெற்றி சாத்தியம் என்ற நம்பிக்கையை கொடுத்து உத்வேகம் அளித்தீர்கள். இந்திய விளையாட்டுக்கு நீங்கள் அளித்த பங்களிப்புக்கு நன்றி. உங்களது தாக்கம் தலைமுறைகள் கடந்து உணரப்படும் என பதிவிட்டுள்ளார்.






