என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: இந்தியா-நியூசிலாந்து இன்று மீண்டும் மோதல்
    X

    இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் - நியூசிலாந்து கேப்டன் சான்ட்னெர்

    2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: இந்தியா-நியூசிலாந்து இன்று மீண்டும் மோதல்

    • விரலில் ஏற்பட்ட காயத்தால் பாதியில் வெளியேறிய சுழற்பந்து வீச்சாளர் அக்‌ஷர் பட்டேல் இன்றைய ஆட்டத்தில் ஆடுவது சந்தேகம் தான்.
    • 20 ஓவர் உலகக் கோப்பைக்கு முன்பாக நடக்கும் கடைசி தொடர் என்பதால் அவர்கள் தவறுகளை திருத்தி கொண்டு வெற்றிப்பாதைக்கு திரும்புவதில் தீவிரமாக உள்ளனர்.

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நாக்பூரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி சத்தீஷ்கார் தலைநகர் ராய்ப்பூரில் இன்று அரங்கேறுகிறது.

    தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி அபிஷேக் ஷர்மாவின் அதிரடி ஜாலத்தால் (8 சிக்சருடன் 84 ரன்) 238 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. கடைசி கட்டத்தில் ரிங்கு சிங் 44 ரன்கள் விளாசி வலுவூட்டினார். ஆனால் 2½ ஆண்டுக்கு பிறகு அணிக்கு திரும்பிய இஷான் கிஷன் (8 ரன்) ஏமாற்றம் அளித்தார்.

    பின்னர் ஆடிய நியூசிலாந்தை 190 ரன்னில் மடக்கினர். வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப்சிங், சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி (2 விக்கெட்) கட்டுக்கோப்புடன் பந்து வீசி கவனத்தை ஈர்த்தனர். ஆனால் பீல்டிங் தான் சற்று சொதப்பலாக இருந்தது. இரண்டு எளிதான கேட்ச் மற்றும் ஒரு ரன்-அவுட் வாய்ப்பை வீணடித்தனர். எனவே பீல்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள் என்று நம்பலாம். மற்றபடி இதே உத்வேகத்துடன் 2-வது ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்த தயாராக இருக்கிறார்கள். விரலில் ஏற்பட்ட காயத்தால் பாதியில் வெளியேறிய சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேல் இன்றைய ஆட்டத்தில் ஆடுவது சந்தேகம் தான்.

    நியூசிலாந்து அணியை பொறுத்தவரை முதல் ஆட்டத்தில் கிளென் பிலிப்ஸ் (78 ரன்), சாப்மேன் (39 ரன்) ஆகியோர் பேட்டிங்கிலும், ஜேக்கப் டப்பி பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட்டனர். 20 ஓவர் உலகக் கோப்பைக்கு முன்பாக நடக்கும் கடைசி தொடர் என்பதால் அவர்கள் தவறுகளை திருத்தி கொண்டு வெற்றிப்பாதைக்கு திரும்புவதில் தீவிரமாக உள்ளனர். இதனால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

    போட்டி நடக்கும் ராய்ப்பூரில் இதற்கு முன்பு ஒரே ஒரு 20 ஓவர் போட்டி நடந்துள்ளது. 2023-ம் ஆண்டு நடந்த அந்த ஆட்டத்தில் இந்திய அணி 20 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரிங்கு சிங், அக்ஷர் பட்டேல் அல்லது குல்தீப் யாதவ் அல்லது ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப்சிங், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி.

    நியூசிலாந்து: டிவான் கான்வே, டிம் ராபின்சன், ரச்சின் ரவீந்திரா, கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னெர் (கேப்டன்), கிறிஸ்டியன் கிளார்க், கைல் ஜாமிசன் அல்லது மேட் ஹென்றி, சோதி, ஜேக்கப் டப்பி.

    இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    Next Story
    ×