search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிஎன்பிஎல் கிரிக்கெட்: திருச்சிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தோல்வி
    X

    டிஎன்பிஎல் கிரிக்கெட்: திருச்சிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தோல்வி

    சென்னையில் நடைபெற்ற திருச்சிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தோல்வி அடைந்தது. #NammaOoruNammaGethu #PattaiyaKelappu #CSG #TNPL2018
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 3-வது சீசன் கடந்த 11-ம் தேதி தொடங்கியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 3-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியின் பரத் ஷங்கர், பாபா இந்த்ரஜித் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    பரத் ஷங்கர் 14 பந்தில் 23 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த எஸ் அரவிந்த் 1 ரன்னில் அவுட்டானார். 3வது விக்கெட்டுக்கு பாபா இந்த்ரஜித்தும், சுரேஷ் குமாரும் ஜோடி சேர்ந்தனர். சிறப்பாக விளையாடிய சுரேஷ் குமார் 37 பந்தில் அரைசதம் அடித்தார்.

    மறுமுனையில் அரைசதம் அடித்த இந்த்ரஜித் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த்ரஜித் - சுரேஷ்குமார் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் குவித்தது. சுரேஷ் குமார் 2 பவுண்டரி, 6 சிக்சருடன் 74 ரன்கள் சேர்த்தார். இறுதியில், ரூபி திருச்சி வாரியர்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது.



    இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் களமிறங்கியது.

    கோபிநாத், அருண்குமார் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். திருச்சி வாரியர்ஸ் சிறப்பாக பந்து வீசியதால் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.
     
    அருண்குமார் ஒரு ரன்னிலும், கோபிநாத் 11 ரன்னிலும், கங்கா ஸ்ரீதர் ராஜு 15 ரன்னிலும், கார்த்திக் 5 ரன்னிலும் அவுட்டாகினர். இதனால் 7 ஓவரில் 40 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தத்தளித்தது.

    அடுத்து இறங்கிய பாஸ்கரன் ராகுல், சசிதேவும் நிதானமாக ஆடினர். இந்த ஜோடி அரை சதம் கடந்தது. பொறுப்புடன் ஆடிய சசிதேவ் 30 ரன்னில் வெளியேறினார். சிறிது நேரத்தில் பாஸ்கரன் ராகுல் 53 ரன்னில் அவுட்டானார்.

    அடுத்து இறங்கியவர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. இதனால் திருச்சி வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தோல்வி அடைந்தது.

    திருச்சி வாரியர்ஸ் அணி சார்பில் சந்திரசேகர் கணபதி 5 விக்கெட் வீழ்த்தினார்.
    Next Story
    ×