search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா - வங்காளதேசம் மோதும் டெஸ்ட் போட்டி நாளை தொடக்கம்
    X

    இந்தியா - வங்காளதேசம் மோதும் டெஸ்ட் போட்டி நாளை தொடக்கம்

    இந்தியா- வங்காளதேசம் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நாளை தொடங்குகிறது.
    ஐதராபாத்:

    வங்காளதேச கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்தியா- வங்காளதேசம் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நாளை (9-ந்தேதி) தொடங்குகிறது.

    விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் கொண்ட தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. இதேபோல வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டிலும் இந்திய அணியின் ஆதிக்கம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய அணி கடைசியாக விளையாடிய 18 டெஸ்டில் தோல்வி எதையும் சந்திக்க வில்லை. 14 டெஸ்டில் வெற்றி பெற்றது. 4 டெஸ்ட் ‘டிரா’ ஆனது. 5 டெஸ்ட் தொடரை தொடர்ச்சியாக கைப்பற்றி இருந்தது. இலங்கை, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட்இண்டீஸ், நியூசிலாந்து, இங்கிலாந்துக்கு எதிரான தொடரை வென்று இருந்தது.

    இதேபோல வங்காள தேசத்துக்கு எதிராகவும் வென்று தொடர்ச்சியாக 6-வது டெஸ்ட் தொடரை கைப்பற்றும் ஆர்வத்துடன் இந்திய அணி இருக்கிறது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் திகழும் நமது அணி வங்காள தேசம் எதிராகவும் அதிரடியை வெளிப்படுத்தும்.

    கேப்டன் விராட் கோலி பேட்டிங்கில் மிகவும் நல்ல நிலையில் இருக்கிறார். கிரிக்கெட்டின் அனைத்து நிலைகளிலும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக ஜொலிக்கிறார்.

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் 655 ரன் குவித்து முத்திரை பதித்தார். இதில் இரண்டு சதமும், இரண்டு அரை சதமும் அடங்கும். அதிகபட்ச மாக 235 ரன் குவித்து சாதித்தார். இதேபோல புஜாரா, முரளிவிஜய், கருண்நாயர், ராகுல் போன்றோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    இங்கிலாந்து தொடரில் புஜாரா 401 ரன்னும், முரளிவிஜய் 357 ரன்னும் எடுத்தனர். புதுமுக வீரர் கருண்நாயர் டிரிபிள் செஞ்சூரி அடித்து சாதனை புரிந்தார்.

    பந்துவீச்சில் சுழற்பந்து வீரர்களான அஸ்வின், ரவிந்திர ஜடேஜா மிகவும் சிறப்பான நிலையில் உள்ளனர். இங்கிலாந்து தொடரில் இருவரும் இணைந்து 54 விக்கெட் (அஸ்வின் 28+ ஜடேஜா 26) கைப்பற்றி இருந்தனர்.

    வங்காளதேசத்துக்கு எதிராகவும் இருவரும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்கள். மேலும் இருவரும் பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தக் கூடியவர்கள். வங்காள தேசத்தை எளிதில் வீழ்த்தும் நம்பிக்கையுடன் இந்திய அணி இருக்கிறது. அமித் மிஸ்ரா முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக குலதீப் யாதவ் சேர்க்கப்பட்டார்.

    இந்திய மண்ணில் முதல் முறையாக டெஸ்டில் விளையாடும் வங்காளதேசம் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் திகழ்கிறது. இந்தியாவை அதன் சொந்த மண்ணில் சந்திப்பது என்பது வங்காளதேச அணிக்கு மிகப்பெரிய சவாலாகும்.

    கேப்டன் முஷ்பிக்குர் ரகீம், சகீப்-அல்-ஹசன், தமிம் இக்பால் போன்ற முன்னணி வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். தொடக்க வீரர் இம்ருல் காயத்தால் விலகியது பாதிப்பே.

    இந்த டெஸ்ட் போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் கிரிக்கெட டெலிவிசனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
    Next Story
    ×