search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கான்பூரில் நாளை முதல் ஆட்டம்: 20 ஓவர் தொடரிலும் இந்தியா ஆதிக்கம் நீடிக்குமா?
    X

    கான்பூரில் நாளை முதல் ஆட்டம்: 20 ஓவர் தொடரிலும் இந்தியா ஆதிக்கம் நீடிக்குமா?

    இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் முத்திரை பதித்த விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நாளை நடக்கும் 20 ஓவர் போட்டியிலும் ஆதிக்கம் செலுத்துமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    கான்பூர்:

    மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஏற்கனவே நவம்பர்- டிசம்பரில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் கொண்ட தொடரை 4-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்று இருந்தது.

    அடுத்து இரு அணிகள் இடையே 20 ஓவர் போட்டி நடைபெறுகிறது. இந்தியா-இங்கிலாந்து இடையேயான மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் முதல் ஆட்டம் கான்பூரில் நாளை (26-ந்தேதி) நடக்கிறது.

    டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் முத்திரை பதித்த விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 20 ஓவர் போட்டியிலும் ஆதிக்கம் செலுத்துமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    விராட் கோலி, டோனி, யுவராஜ்சிங், ஹர்த்திக் பாண்டியா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். ஒருநாள் போட்டியில் தொடக்கம் சரியாக அமையவில்லை. ராகுலும், தவானும் ஏமாற்றம் அளிக்கும் வகையில் ஆடினார்கள். இதில் தவான் 20 ஓவரில் இடம் பெறவில்லை. இதனால் நாளைய போட்டியில் ராகுலுடன் மனிஷ் பாண்டே தொடக்க வீரராக இடம் பெறலாம்.

    ஒருநாள் தொடரில் அதிரடியாக விளையாடிய கேதர் ஜாதவ் 20 ஓவர் அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை. சுரேஷ் ரெய்னா அவர் இடத்தை பிடித்திருக்கிறார்.

    முன்னணி சுழற்பந்து வீரர் அஸ்வின், ஜடேஜாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. பர்வேஷ், அமித் மிஸ்ரா ஆகியோருக்கு அவர் இடத்தில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வேகப் பந்தில் புவனேஸ்வர் குமார், பும்ரா, ஆசிஷ் நெக்ரா உள்ளனர்.

    கொல்கத்தாவில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று இருந்ததால் இங்கிலாந்து அணி மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது.

    கேப்டன் மோர்கன், ஜோரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், மொய்ன் அலி, ஹால்ஸ், டேவிட் வில்லி, பட்லர் போன்ற சிறந்த வீரர்கள் இங்கிலாந்து அணியில் உள்ளனர்.

    மேலும் அந்த அணி கடைசியாக இந்தியாவுக்கு எதிராக விளையாடிய கடைசி இரண்டு 20 ஓவர் போட்டியிலும் வெற்றி பெற்று இருந்தது. இதனால் அந்த அணி 20 ஓவர் தொடரையாவது வென்று விடவேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறது.

    இங்கிலாந்துக்கு எதிராக தான் யுவராஜ்சிங் 6 பந்தில் 6 சிக்சர் அடித்து முத்திரை பதித்திருந்தார். இதனால் அவரது அதிரடி ஆட்டத்தை காணும் ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

    இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்பதால் இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நாளைய ஆட்டம் மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் கிரிக்கெட் மற்றும் தூர்தர்சனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ராகுல், மனிஷ் பாண்டே, யுவராஜ்சிங், டோனி, ரெய்னா, ஹர்த்திக் பாண்டியா, அமித் மிஸ்ரா, புவனேஸ்வர் குமார், ஆசிஷ் நெக்ரா, பர்வேஷ், பும்ரா, மன்தீப்சிங், ரிஷப் பண்ட், யசுவேந்திரஷால்.

    இங்கிலாந்து: மோர்கன் (கேப்டன்), ஜேசன் ராய், ஹால்ஸ், ஜோரூட், மொய்ன்அலி, பென் ஸ்டோக்ஸ், பட்லர், சாம் பில்லிங்ஸ், ஜேக்பால், டாசன், கிறிஸ் ஜோர்டான், புளுன்செட், மில்ஸ், ஆதில் ரஷீத், டேவிட் வில்லி.
    Next Story
    ×