search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் அஸ்வின், ஜடேஜாவுக்கு ஓய்வு
    X

    இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் அஸ்வின், ஜடேஜாவுக்கு ஓய்வு

    இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து முன்னணி சுழற்பந்து வீரர்கள் அஸ்வின், ரவிந்திர ஜடேஜா மற்றும் ஜெயந்த் யாதவுக்கு ஓய்வு கொடுக்க தேர்வு குழு முடிவு செய்து உள்ளது.
    புதுடெல்லி:

    அலஸ்டர் கூக் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் தொடரில் விளையாடியது.

    இதில் இந்தியா 4-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

    கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கான இங்கிலாந்து அணி நாடு திரும்பியது. ஒருநாள் போட்டி மற்றும் 20 ஒவர் தொடரில் விளையாடுவதற்காக அந்த அணி ஜனவரி மாதம் மீண்டும் இந்தியா வருகிறது.

    மார்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவுடன் 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.

    ஜனவரி 15-ந்தேதி முதல் ஆட்டம் புனேயில் நடக்கிறது. 2-வது போட்டி 19-ந்தேதியும் (கட்டாக்), 3-வது ஆட்டம் 22-ந்தேதி (கொல்கத்தா) நடக்கிறது. 20 ஓவர் ஆட்டங்கள் ஜனவரி 26, 29 மற்றும் பிப்ரவரி 1-ந்தேதிகளில் கான்பூர், நாக்பூர், பெங்களூர் நகரங்களில் முறையே நடக்கிறது.

    இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து முன்னணி சுழற்பந்து வீரர்கள் அஸ்வின், ரவிந்திர ஜடேஜா மற்றும் ஜெயந்த் யாதவுக்கு ஓய்வு கொடுக்க தேர்வு குழு முடிவு செய்து உள்ளது.

    வங்காளதேசம், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடைபெற இருப்பதால் அதை கருத்தில் கொண்டு ஓய்வு கொடுக்கலாம் என்று தெரிகிறது.

    நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் காயம் அடைந்த தவான் தற்போது உடல் தகுதி பெற்று உள்ளார். இதனால் அவரும், சென்னை டெஸ்டில் டிரிபிள் சதம் அடித்தவருமான கருண்நாயர் ஆகியோரும் அணியில் இடம் பெறுகிறார்கள். மனிஷ்பாண்டே மற்றும் ரகானே ஆகியோரும் அணிக்கு திரும்புவார்கள். ரோகித்சர்மா லண்டனில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அவர் இன்னும் உடல் தகுதி பெறவில்லை. இதனால் அவர் இடம் பெறமாட்டார்.

    இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்பு கேப்டன் டோனி இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறார். இதில் ஒரு ஆட்டம் பகல்-இரவாக இருக்கும். பயிற்சி ஆட்டத்தில் விளையாட இருக்கும் தகவலை அவர் கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துவிட்டார்.

    இதற்கிடையே இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கு முன்பு இந்திய வீரர்களின் பயிற்சி முகாம் டெல்லியில் நடத்தப்படுகிறது. ஜனவரி 5 அல்லது 6-ந்தேதி பயிற்சி முகாம் தொடங்கும். 12-ந்தேதி வரை வீரர்கள் பயிற்சி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பயிற்சியாளர் கும்ப்ளே தான் பயிற்சி முகாம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று கூறியதாக கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    Next Story
    ×