search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மொகாலி டெஸ்ட்: 3-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 78/4; அஸ்வின் அபாரம்
    X

    மொகாலி டெஸ்ட்: 3-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 78/4; அஸ்வின் அபாரம்

    மொகாலியில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டின் 3-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 78 ரன்களுக்குள் 4 விக்கெட்டுக்களை இழந்து திணறி வருகிறது.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் மொகாலியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 283 ரன்களில் ஆல்அவுட் ஆனது.

    பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. புஜரா (51), விராட் கோலி (62), ஜடேஜா (90) மற்றும் ஜயந்த் யாதவ் (55) ஆகியோரின் அபார ஆட்டத்தால் இந்தியா முதல் இன்னிங்சில் 417 ரன்கள் குவித்தது.

    134 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. முதல் இன்னிங்சில் காயம் அடைந்த ஹமீத் இன்று தொடக்க வீரராக களம் இறங்கவில்லை. அலஸ்டைர் குக் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    இந்தியாவின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் திணறினார்கள். இதனால் ஓவருக்கு சராசரியாக இரண்டு ரன்கள் மட்டுமே அடித்தனர். விக்கெட்டுக்களை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இந்திய பந்து வீச்சாளர்கள் தொடர் தாக்குதல் நடத்தினார்கள்.



    இதற்கு 14-வது ஓவரில் பலன் கிடைத்தது. அஸ்வின் வீசிய அந்த ஓவரின் கடைசி வந்தில் குக் க்ளீன் போல்டாகி வெளியேறினார். அப்போது இங்கிலாந்து 14 ஓவரில் 27 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்த வந்த மொயீன் அலி 5 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் ஜயந்த் யாதவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

    3-வது விக்கெட்டுக்கு ரூட் உடன் பேர்ஸ்டோவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 31 ரன்கள் சேர்த்தது. பேர்ஸ்டோவ் 15 ரன்கள் எடுத்த நிலையில் ஜயந்த் யாதவ் பந்தில் ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஆட்டம் முடியும் கடைசி ஓவரில் 5 ரன்னில் அஸ்வின் பந்தில் ஆட்டம் இழந்தார்.

    இங்கிலாந்து அணி 3-வது நாள் ஆட்ட முடிவில் 78 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுக்களை இழந்துள்ளது. தற்போது அந்த அணி இந்தியாவை 56 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 36 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.

    அந்த அணியில் இன்னும் பட்லர் மட்டும்தான் நன்றாக பேட்டிங் செய்யக்கூடியவர். நாளை 4-வது நாள் ஆட்டம் தொடங்கியதும், ஜோ ரூட் விக்கெட்டை மட்டும் இந்தியா விரைவில் வீழ்த்தி விட்டால் இந்த டெஸ்டில் இந்தியா வெற்றி பெற பிரகாசமான வாய்ப்பு உள்ளது.
    Next Story
    ×