search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை - கவுகாத்தி ஆட்டம் ‘டிரா’
    X

    ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை - கவுகாத்தி ஆட்டம் ‘டிரா’

    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை-கவுகாத்தி அணிகள் இடையிலான ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.
    சென்னை:

    3-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து திருவிழாவில், சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 49-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி.- நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி) அணிகள் கோதாவில் குதித்தன.

    கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் களம் புகுந்த சென்னை அணிக்கு 12-வது நிமிடத்தில் பிரீகிக் வாய்ப்பு கிடைத்தது. அதில் 30 யார்டு தூரத்தில் இருந்து சென்னை வீரர் அர்னே ரைஸ் அடித்த ஷாட்டை கவுகாத்தி கோல் கீப்பர் சுப்ரதா பால் பாய்ந்து தடுத்தார்.

    34-வது நிமிடத்தில் சென்னை அணி கோல் கணக்கை தொடங்கியது. வலது பகுதியில் இருந்து சென்னை வீரர் வாடூ கோல் பகுதிக்குள் தூக்கியடித்த பந்தை, சக வீரர் டுடு ஒமாக்பெமி (நைஜீரியா நாட்டவர்) மின்னல் வேகத்தில் தலையால் முட்டி கோல் அடித்தார். ஆனால் இந்த மகிழ்ச்சி வெகுநேரம் நீடிக்கவில்லை. 38-வது நிமிடத்தில் பந்துடன் கோல் பகுதிக்குள் ஊடுருவிய கவுகாத்தி வீரர் லியான்ட்ரோ வேலஸ், 4 பின்கள வீரர்களை ஏமாற்றி அற்புதமாக கோல் அடித்து சமனுக்கு கொண்டு வந்தார்.

    பந்து அதிகமான நேரம் சென்னை வீரர்களின் வசமே (60 சதவீதம்) சுற்றிக்கொண்டிருந்தது. 45-வது நிமிடத்தில் டுடு ஒமாக்பெமி மீண்டும் ஒரு கோல் போட்டு முதல் பாதியில் சென்னை அணிக்கு முன்னிலை ஏற்படுத்தி தந்தார்.

    பிற்பாதியில் இரு வீரர்களும் தாக்குதல் பாணியை துரிதப்படுத்தினர். 51-வது நிமிடத்தில் சென்னையின் தடுப்பாட்ட பலவீனத்தை சரியாக பயன்படுத்தி கவுகாத்தியின் லியான்ட்ரோ வேலஸ் மறுபடியும் கோல் அடித்து சமனுக்கு கொண்டு வந்தார்.

    இப்படியே அனல் பறந்த இந்த ஆட்டத்தில் 81-வது நிமிடத்தில் ஒமாக்பெமி 3-வது கோல் அடித்து ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். கேப்டன் பெர்னர்ட் மென்டி தட்டிக்கொடுத்த பந்தை பாய்ந்து விழுந்து எப்படியோ வலைக்குள் தள்ளினார். குழுமியிருந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளூர் ரசிகர்கள் ஆர்ப்பரிப்பில் மிதந்தனர். இந்த முறையும் முன்னிலையை தக்க வைக்க சென்னை அணி தவறியது.

    கடைசி நிமிடத்தில் (90-வது நிமிடம்) கார்னர் பகுதியில் இருந்து அடிக்கப்பட்ட பந்தை கவுகாத்தி வீரர் ஷோவிக் கோஷ் துள்ளி குதித்து தலையால் முட்டி கோலாக்கி அசத்தினார். முன்னதாக கவுகாத்தி வீரர் வேலஸ், சென்னை வீரர் வாடூ மீது பந்தை தூக்கி எறிந்ததால் இரு அணி வீரர்களும் கைகலப்பில் ஈடுபட்டனர். பிறகு நடுவர் தலையிட்டு அமைதிப்படுத்தினார். வேலஸ், வாடூ உள்பட மூன்று வீரர்கள் மஞ்சள் அட்டை காட்டி எச்சரிக்கப்பட்டனர். முடிவில் இந்த ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் ‘டிரா’வில் முடிந்தது.

    இன்று இரவு 7 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் டெல்லி -கோவா அணிகள் மோதுகின்றன.
    Next Story
    ×