search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய கேப்டன் கோலி பந்தை சேதப்படுத்தினாரா?: பயிற்சியாளர் கும்பிளே பதில்
    X

    இந்திய கேப்டன் கோலி பந்தை சேதப்படுத்தினாரா?: பயிற்சியாளர் கும்பிளே பதில்

    இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த புகாரை பயிற்சியாளர் கும்பிளே திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
    மொகாலி :

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மொகாலியில் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

    பின்னர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்பிளே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், இந்திய கேப்டன் விராட் கோலி ராஜ்கோட் டெஸ்டின் போது பந்தை சேதப்படுத்த முயற்சி செய்ததாக இங்கிலாந்து பத்திரிகை வீடியோ காட்சியுடன் செய்தி வெளியிட்டு இருப்பது குறித்து கேட்கப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த கும்பிளே, ‘ஊடகத்தின் புகாருக்கு பதில் அளிக்க விரும்பவில்லை. என்னை பொறுத்தவரை கள நடுவர்களோ அல்லது போட்டி நடுவரோ யாரும் இது பற்றி எங்களிடம் வந்துபேசவில்லை. இந்த விஷயத்துக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுக்க விரும்பவில்லை. அது பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. மக்கள் குற்றம் சுமத்தலாம். ஊடகத்தினர் எதையும் எழுதிக்கொள்ளலாம்.

    ஆனால் எங்கள் அணியை பொறுத்தவரை இது போன்ற செயல்களில் யாருக்கும் தொடர்பு கிடையாது. தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் 2-0 என்ற கணக்கில் தோற்கடித்து இருக்கிறது. பந்தை சேதப்படுத்தியதாக தென்ஆப்பிரிக்க கேப்டன் பிளிஸ்சிஸ் மீதான குற்றச்சாட்டு சிறுபிள்ளைத்தனமானது. சிறிய விஷயத்தை பெரிதாக்கி விட்டார்கள்’ என்றார்.

    சிறந்த அனுபவத்தையும், கீப்பிங் திறமையையும் கருத்தில் கொண்டே இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட்டை காட்டிலும் பார்த்தீவ் பட்டேலின் தேர்வுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாகவும் கும்பிளே நிருபர்களிடம் தெரிவித்தார்.

    இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘2-வது டெஸ்டில் இந்திய கேப்டன் விராட் கோலி நிறைய ரன்கள் குவித்து விட்டார். எனவே தகுந்த யுக்தியுடன் களம் இறங்கி அவரது ரன் குவிப்பை தடுக்க முயற்சிப்போம். ஆனால் களத்தில் அவர் நிலைத்து நின்று விட்டால், அதன் பிறகு அவரை வீழ்த்துவது கடினம்’ என்றார்.

    3-வது டெஸ்டுக்கான இங்கிலாந்து அணியில் சில மாற்றங்கள் இருக்கும். காயத்தால் அவதிப்படும் ஸ்டூவர்ட் பிராட், ஜாபர் அன்சாரி விளையாடுவது சந்தேகம் தான். இதே போல் சரியாக விளையாடாத டக்கெட்டுக்கு பதிலாக அதிரடி வீரர் ஜோஸ் பட்லர் களம் காணுவார் என்று தெரிகிறது.
    Next Story
    ×