search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை அணி 4-வது வெற்றி
    X

    ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை அணி 4-வது வெற்றி

    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை அணி 1-0 என்ற கோல் கணக்கில் கவுகாத்தியை வீழ்த்தி 4-வது வெற்றியை ருசித்ததுடன், புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.
    கவுகாத்தி:

    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை அணி 1-0 என்ற கோல் கணக்கில் கவுகாத்தியை வீழ்த்தி 4-வது வெற்றியை ருசித்ததுடன், புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.

    8 அணிகள் இடையிலான 3-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் ஆட்டங்கள் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

    இந்த போட்டி தொடரில் கவுகாத்தியில் உள்ள இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 31-வது லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி.(கவுகாத்தி)-மும்பை சிட்டி எப்.சி. அணிகள் மோதின.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 45-வது நிமிடத்தில் மும்பை அணி கோல் அடித்தது. மும்பை அணி வீரர் சோனி நோர்டே கடத்தி கொடுத்த பந்தை சக வீரர் ஜாக்சந்த் சிங் கோலாக மாற்றினார். முதல் பாதியில் மும்பை அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

    பின் பாதி ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் இரு அணியினர் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. பந்தை கடத்தி சென்ற கவுகாத்தி அணி வீரர் கட்சுமியை, மும்பை அணி வீரர் ரால்ட் பந்தை கைப்பற்ற பின்னால் இருந்து தள்ளினார். இதனால் ஆத்திரம் அடைந்த கட்சுமி, ரால்டுடன் மோதினார். இதனால் இரு அணியினருக்கும் இடையே கைகலப்பு உருவானது. இந்த நேரத்தில் கவுகாத்தி அணி வீரர் சோகோரா, ரால்ட்டை தரையில் தள்ளி விட்டார். நடுவர்கள் தலையிட்டு இரு அணியினரையும் சமாதானப்படுத்தினார்கள். கைகலப்பில் ஈடுபட்ட 3 வீரர்களுக்கும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

    பின் பாதியில் இரு அணிகளும் ஆக்ரோஷமாக ஆடினாலும் கோல் எதுவும் விழவில்லை. முடிவில் மும்பை அணி 1-0 என்ற கோல் கணக்கில் கவுகாத்தியை வீழ்த்தி 4-வது வெற்றியை ருசித்ததுடன், புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் இருந்து முதலிடத்துக்கு முன்னேறியது. 8-வது ஆட்டத்தில் ஆடிய கவுகாத்தி அணி சந்தித்த 4-வது தோல்வி இதுவாகும்.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) புனேயில் நடைபெறும் 32-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.புனே சிட்டி-அட்லெடிகோ டீ கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இரவு 7 மணிக்கு தொடங்கும் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, 2 மற்றும் விஜய் சூப்பர் டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
    Next Story
    ×