search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெயினை அச்சுறுத்தும் காயம்: ஆஸ்திரேலியாவிலும் தொடர்கிறது
    X

    ஸ்டெயினை அச்சுறுத்தும் காயம்: ஆஸ்திரேலியாவிலும் தொடர்கிறது

    தென்ஆப்பிரிக்காவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஸ்டெயினை காயம் அச்சுறுத்தி வருகிறது. இதனால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரலாம் என அஞ்சப்படுகிறது.
    தென்ஆப்பிரிக்காவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின். தன்னுடைய தனித்திறமையான வேகப்பந்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட்டுக்களை குவித்து வருகிறார். 33 வயதாகும் அவர் தனது உடற்தகுதியை கட்டுக்கோப்பாக வைத்திருந்தார்.

    இதன் காரணமாக 85 போட்டிகளில் விளையாடி 417 விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருக்கிறார். தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷேன் பொல்லாக் 421 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய தென்ஆப்பிரிக்க வீரர் என்ற பெருமையை தக்க வைத்துள்ளார்.

    இந்த சாதனையை முறியடிக்க ஸ்டெயினுக்கு இன்னும் 6 விக்கெட்டுக்கள்தான் தேவை. இந்த நிலையில்தான் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பெர்த் நகரில் நேற்று தொடங்கிய முதல் டெஸ்டில் களம் இறங்கினார்.

    இன்றைய 2-வது நாள் ஆட்டத்தில் வார்னரை 97 ரன்னில் ஆட்டமிழக்கச் செய்தார். அதன்பின் அவர் தனது 13-வது ஓவரின் 4-வது பந்தை வீசும்போது அவருக்கு தோள்பட்டையில் வலி ஏற்பட்டது. இதனால் அவர் பெவிலியன் திரும்பினார். அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த பின்னரே அவரது காயம் குறித்து தெரிய வரும் என்று அணி சார்பில் கூறப்பட்டுள்ளது.

    கடந்த வருடம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்கா அணி இந்தியா வந்தது. முதல் டெஸ்டில் விளையாடும்போது ஸ்டெயினுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் கடைசி மூன்று டெஸ்டிலும் விளையாடவில்லை.

    அதன்பின் இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் காயம் காரணமாக ஸ்டெயின் களம் இறங்கவில்லை. இதன் காரணமாக சொந்த மண்ணில் இங்கிலாந்திடம் தொடரை பறிகொடுத்தது தென்ஆப்பிரிக்கா. பின்னர் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து ஸ்டெயினுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது.

    நீண்ட நாட்கள் விளையாடாமல் இருந்ததால், இங்கிலாந்தில் நடைபெற்ற நாட்வெஸ்ட் டி20 பிளாஸ்ட் தொடரில் விளையாட அனுமதிக்கப்பட்டார். அதன்பின் நியூசிலாந்து அணி தென்ஆப்பிரிக்கா சென்று விளையாடியது. அப்போது செஞ்சூரியனில் 8 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார். இந்த தொடரின்போது ஸ்டெயின் தோள்பட்டையில் வலி ஏதும் ஏற்படவில்லை.

    இதனால் ஆஸ்திரேலியா தொடரில் ஸ்டெயின் முக்கிய பந்து வீச்சாளராக இருப்பார் என்று தென்ஆப்பிரிக்கா கருதியது. ஆனால், முதல் டெஸ்டிலேயே ஸ்டெயின் காயம் காரணமாக வெளியேறியுள்ளது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை
    ஏற்படுத்தியுள்ளது.

    மேலும், அடிக்கடி காயம் ஏற்படுவதால் ஸ்டெயின் நீண்ட காலம் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

    பெர்த் டெஸ்டில் ஸ்டெயின், பிலாண்டர் மற்றும் ரபாடா ஆகிய மூன்று முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களுடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. தற்போது ஸ்டெயினுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடன்தான் தென்ஆப்பிரிக்கா பந்து வீச நேரிடும்.

    இந்த மூன்று பேரையும் தவிர மோர்னே மோர்கல், கைல் அபாட் ஆகிய இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களும் தென்ஆப்பிரிக்கா அணியில் இடம்பிடித்துள்ளனர். 2-வது டெஸ்டில் ஸ்டெயின் ஆடவில்லை என்றால் இவர்களில் ஒருவர் அணியில் இடம்பிடிப்பார்.
    Next Story
    ×