search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர்: இங். ஸ்பின்னர்களுக்கு ஆலோசனை வழங்கும் சக்லைன் முஸ்தாக்
    X

    இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர்: இங். ஸ்பின்னர்களுக்கு ஆலோசனை வழங்கும் சக்லைன் முஸ்தாக்

    பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஸ்தாக், இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்யும்போது அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஆலோசனை வழங்க இருக்கிறார்.
    இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடர் நவம்பர் 9-ந்தேதி தொடங்குகிறது. தற்போது இங்கிலாந்து அணி வங்காள தேசத்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இந்த தொடர் முடிந்தவுடன் இங்கிலாந்து அணி இந்தியா வந்து விளையாடுகிறது. இந்திய ஆடுகளங்கள் பொதுவாக சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். இதனால் இங்கிலாந்து அணியில் கரேத் பேட்டி, அதில் ரஷித், சாகர் அன்சாரி மற்றும் மொயீன் அலி ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

    மொயீன் அலியைத் தவிர மற்ற வீரர்கள் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது கிடையாது. அதனால் இந்திய மண்ணில் எவ்வாறு பந்து வீசுவது என்பது குறித்து ஆலோசனை வழங்க முன்னாள் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஸ்தாக்கை நியமனம் செய்ய இங்கிலாந்து அணி முடிவு செய்துள்ளது.

    இதனடிப்படையில் சக்லைன் முஸ்தாக் வரும் 2-ந்தேதி முதல் இங்கிலாந்து அணியுடன் இணைந்து சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஆலோசனை வழங்க இருக்கிறார். ஆனால், சக்லைன் முஸ்தான் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் விசா கிடைக்குமா? என்பது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் அணி இங்கிலாந்து சென்றிருந்தபோது சக்லைன் முஸ்தாக் இங்கிலாந்து அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சக்லைன் முஸ்தாக் பாகிஸ்தான் அணிக்காக 49 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 208 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். மற்றொரு பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரான முஸ்தாக் அஹமது இங்கிலாந்து அணியின் சுழற்பந்து பயிற்சியாளராக இருந்தார். இவர் கடந்த 2014-ம் ஆண்டு அந்த பதவியில் இருந்து விலகினார். அதன்பின் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சுழற்பந்துக்கென நிரந்தர பயிற்சியாளரை நியமிக்காமல் உள்ளது.
    Next Story
    ×