search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சம்பள பிரச்சினை முடிவுக்கு வந்தது: போராட்டத்தை கைவிட்ட ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர்கள்
    X

    சம்பள பிரச்சினை முடிவுக்கு வந்தது: போராட்டத்தை கைவிட்ட ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர்கள்

    சம்பள பிரச்சினையால் ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது கிரிக்கெட் வாரியம் உறுதியளித்துள்ளதால் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.
    ஆப்பிரிக்க கண்டத்தில் தென்ஆப்பிரிக்காவை அடுத்து கிரிக்கெட் விளையாடும் ஒரே நாடு ஜிம்பாப்வே. வீரர்கள்- கிரிக்கெட் வாரியம், இனவெறி பிரச்சினைகளால் அந்த அணி சிக்கித் தவித்து, தற்போது அதில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறது.

    இந்நிலையில் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு போட்டியில் பங்கேற்றதற்கான சம்பளத்தை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. விரைவில் பாகிஸ்தான் ‘ஏ’ அணி ஜிம்பாப்வே சென்று விளையாட இருக்கிறது. இதற்கான பயிற்சி முகாமை ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் அமைத்துள்ளது.

    ஆனால் தங்களது சம்பளத்தை வழங்க கிரிக்கெட் வாரியம் உறுதியளிக்கும் வரை பயிற்சி முகாமில் கலந்து கொள்ளமாட்டோம் என்று ஹராரேவைச் சேர்ந்த வீரர்கள் தெரிவித்தனர். ஹராரேயை விட்டு மற்ற இடங்களில் இருக்கும் வீரர்கள் ஹராரேவிற்கு செல்லமாட்டோம் என்று தெரிவித்தனர்.

    இதனால் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத் தலைவர் முகோண்டிவா வீரர்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ‘‘வீரர்களின் சம்பளத்திற்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறோம். வீரர்களுக்கு வழங்க வேண்டிய பணம் வரைவில் வழங்கப்படும்’’ என்று முகோண்டிவா உறுதி அளித்தார். அத்துடன் ஒப்பந்தம் குறித்த உறுதியான நம்பிக்கையை வீரர்கள் பெற்றுள்ளனர். இதனால் வீரர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு இன்று பயிற்சி முகாமிற்கு செல்கிறார்கள்.

    பாகிஸ்தான் ‘ஏ’ அணிக்கெதிரான தொடருக்குப்பின் இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக விளையாட இருக்கிறது. இதற்கான போட்டி அட்டவணை இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஜிம்பாப்வே அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு இன்னும் ஆள் நியமிக்கப்படாமல் இருக்கிறது. தற்போது தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நிட்னி இடைக்கால பயிற்சியாளராக இருக்கிறார். வங்காள தேச அணியின் பயிற்சியாளராக பணியாற்றிய ஜிம்பாப்வேயின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஹீத் ஸ்ட்ரீக் ஜிம்பாப்வே அணியின் பயிற்சியாளராக நியமனம் செய்யப்படலாம் என்று தெரிகிறது.
    Next Story
    ×