search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி அணியை பழிதீர்க்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் யோமகேஷ் பேட்டி
    X

    தூத்துக்குடி அணியை பழிதீர்க்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் யோமகேஷ் பேட்டி

    தூத்துக்குடி அணியை பழி தீர்க்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் யோமகேஷ் பேட்டியளித்துள்ளார்
    சென்னை:

    தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்‘ போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அரை இறுதியில் 17 ரன்னில் கோவை கிங்சை வீழ்த்தியது.

    ‘டாஸ்’ வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன் எடுத்தது. வசந்த் சரவணன் 39 பந்தில் 52 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), கோபிநாத் 33 பந்தில் 44 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். விக்கேஷ், ஹரிஷ்குமார் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய கோவை கிங்ஸ் அணியால் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 144 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் 17 ரன்னில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. தொடக்க வீரர் சூரியபிரகாஷ் 28 பந்தில் 38 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் அந்தோணி தாஸ் 3 விக்கெட்டும், சாய்கிஷோர், அலெக்சாண்டர் தலா 2 விக்கெட்டும், ஆர்.சதீஷ், யோமகேஷ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    வெற்றி குறித்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் யோமகேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    19-வது ஓவரை நான் திட்டமிட்டு நேர்த்தியுடன் வீசினேன். பவுலர்கள் களத்தில் நின்றதால் அதற்கு ஏற்ற வகையில் திட்டத்தை செயல்படுத்தினேன். பயிற்சியாளருக்குத்தான் எல்லா பாராட்டும் சேரும். அவரது திட்டம் சிறப்பாக இருந்தது. பந்து வீச்சாளர்களாகிய எங்களது பணி திட்டத்தை செயல்படுத்துவதாகும். இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

    நாங்கள் தொடக்க ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்சிடம் தோற்றோம். தற்போது அந்த அணியை இறுதிப் போட்டியில் சந்திக்கிறோம். தூத்துக்குடி அணியை பழி தீர்க்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தூத்துக்குடி அணி நல்ல நிலையில் இருக்கிறது.

    எங்களது அணியும் தொடர்ந்து வெற்றிகளை பெற்று சிறப்பான நிலையில் உள்ளது. இரு அணிகளும் நல்ல நிலையில் இருப்பதால் இறுதிப் போட்டி ரசிகர்களுக்கு நல்ல உற்சாகமாக இருக்கும்.

    தூத்துக்குடி பேட்ரியார்ட்ஸ் அணியின் பலம், பலவீனத்தை அறிந்து அதற்கு ஏற்ற வகையில் செயல்படுவோம்.

    இவ்வாறு யோமகேஷ் கூறினார்.

    தோல்வி குறித்து கோவை கிங்ஸ் அணி வீரர் அணிருத் கூறும் போது அரை இறுதி என்பதால் ரன் இலக்கை எட்ட கூடுதல் நெருக்கடி ஏற்பட்டு விட்டது. இதுவே தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டது என்றார்.
    Next Story
    ×