search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா தொடரில் இருந்து நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி விலகல்
    X

    இந்தியா தொடரில் இருந்து நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி விலகல்

    இந்தியாவிற்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான நியூசிலாந்து அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி காயம் காரணமாக விலகியுள்ளார்.
    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 22-ந்தேதி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் க்ரீன் பார்க் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி அந்த அணியில் இடம்பிடித்திருந்தார்.

    தற்போது நியூசிலாந்து அணி மும்பை அணிக்கெதிரான மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. இதில் டிம் சவுத்தி இடம்பிடித்திருந்தார். பயிற்சியின்போது டிம் சவுத்தியின் கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் வலியால் துடித்த அவர் நியூசிலாந்து சென்று காயத்திற்கு சிகிச்சை எடுக்க விரும்பினார். இதனால் இந்தியாவிற்கு எதிரான தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக மாட் ஹென்றி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    காயம் குணமடைந்ததும் அடுத்த மாதம் 16-ந்தேதி தர்மசாலாவில் தொடங்கும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு தயாராகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ‘‘இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக டிம் சவுத்தி கடின பயிற்சியை மேற்கொண்டார். இதனால் இந்த தொடரில் இருந்து விலகியது அவருக்கு பெரிய ஏமாற்றமாகத்தான் இருக்கும். அவருக்கு ஏற்பட்ட காயத்திற்காக 7 முதல் 10 நாட்கள் வரை ஓய்வு எடுக்க வேண்டும். அதன்பின் ஒருநாள் போட்டிக்காக தயாராகுவார்’’ என்று நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் மைக் ஹெசன் தெரிவித்தார்.
    Next Story
    ×