search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெகதீசனை அவுட் செய்தது திருப்புமுனை: தூத்துக்குடி வீரர் அஸ்வின் கிறிஸ்ட் பேட்டி
    X

    ஜெகதீசனை அவுட் செய்தது திருப்புமுனை: தூத்துக்குடி வீரர் அஸ்வின் கிறிஸ்ட் பேட்டி

    திண்டுக்கல் தொடக்க வீரர் ஜெகதீசன் அவுட் ஆனது திருப்புமுனையாக இருந்ததாக தூத்துக்குடி வீரர் அஸ்வின் கிறிஸ்ட் பேட்டி அளித்தார்.

    நெல்லை:

    தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ போட்டியில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    நெல்லை ஐ.சி.எல். மைதானத்தில் நேற்று நடந்த முதல் அரை இறுதியில் ‘டாஸ்’ வென்ற தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 187 ரன் குவித்தது. தொடக்க வீரர் அபினவ் முகுந்த் 55 பந்தில் 91 ரன்னும் (10 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் தினேஷ் கார்த்திக் 31 பந்தில் 48 ரன்னும் (1 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர். சன்னி குமார்சிங் 3 விக்கெட் கைப்பற்றினார்.

    பின்னர் விளையாடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் 38 ரன் வித்தியாசத்தில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

    தொடக்க வீரர் ஜெகதீசன் 41 பந்தில் 59 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்) அஸ்வின் வெங்கட்ராமன் 26 பந்தில் 40 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டும், அஸ்வின் கிறிஸ்ட் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    இந்த வெற்றி தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியின் பந்துவீச்சாளர் அஸ்வின் கிறிஸ்ட் கூறியதாவது:-

    திண்டுக்கல் அணிக்கு தொடக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை கைப்பற்றி நெருக்கடி கொடுத்து விட்டோம். அதில் இருந்து மீள அந்த அணிக்கு அதிக உறுதி தேவை.

    ரன்களை விட்டு கொடுத்து விடக்கூடாது என்பதில் நாங்கள் குறிப்பாக இருந்தோம். தொடக்க வீரர் ஜெகதீசனை அவுட் செய்தது திருப்பு முனையானது. ஜெகதீசன், அஸ்வின் வெங்கட்ராமனின் பலவீனம் அறிந்து அதற்கு ஏற்ற வகையில் பந்து வீசினேன். இதற்கு நல்ல பலன் கிடைத்தது.

    2-வது பேட்டிங் செய்தால் நெருக்கடி ஏற்படும். இதனால் ‘டாஸ்’ வென்று முதலில் பேட்டிங் செய்தோம். 160 ரன்கள் எடுப்போம் என்று நினைத்தோம். ஆனால் தினேஷ் கார்த்திக், அபினவ் முகுந்த் சிறப்பான ஆட்டம் மூலம் 180 ரன்களுக்கு மேல் சென்று விட்டோம்.

    இறுதிப்போட்டியிலும் இதே மனநிலையில் ஆடுவோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தோல்வி குறித்து திண்டுக்கல் அணியின் பயிற்சியாளர் எம்.வெங்கட்ரமனா கூறும்போது, அபினவ்முகுந்தும், தினேஷ் கார்த்திக்கும் எங்களது வெற்றியை பறித்து சென்றுவிட்டனர் என்றார்.

    Next Story
    ×