search icon
என் மலர்tooltip icon

  செய்திகள்

  2-வது அரைஇறுதி போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-கோவை கிங்ஸ் இன்று மோதல்
  X

  2-வது அரைஇறுதி போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-கோவை கிங்ஸ் இன்று மோதல்

  தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் உத்வேகத்துடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, அரைஇறுதியில் கோவை கிங்சை இன்று எதிர்கொள்கிறது.

  சென்னை:

  தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரில், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை நடைபெறும் 2-வது அரைஇறுதியில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீசும், 4-வது இடத்தை பெற்ற கோவை கிங்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதையொட்டி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பயிற்சியாளர் ஹேமங் பதானி தலைமையிலும், கோவை அணி பயிற்சியாளர் லான்ஸ் குளுஸ்னர் முன்னிலையிலும் இரு தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு தங்களை ஆயத்தப்படுத்தி இருக்கிறார்கள்.

  சேப்பாக் சூப்பர் கில்லீஸ் லீக் சுற்றில் 5-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டது. முதல் ஆட்டத்தில் தோல்வியுடன் தொடங்கிய போதிலும் சரியான நேரத்தில் எழுச்சி பெற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர்கள் வரிசையாக வெற்றிகளை குவித்து லீக் முடிவில் முதலிடத்தை பிடித்தனர். உச்சக்கட்ட பார்மில் உள்ள தொடக்க ஆட்டக்காரர்கள் தலைவன் சற்குணம் (11 சிக்சர் உள்பட 226 ரன்கள்), கோபிநாத் (229 ரன்) மற்றும் வசந்த் சரவணன் (186 ரன்) ஆகியோர் சேப்பாக் அணியின் பேட்டிங் முதுகெலும்பாக திகழ்கிறார்கள். இவர்கள் மூன்று பேரும் தலா 2 அரைசதம் அடித்திருக்கிறார்கள். மிடில் வரிசையில் கேப்டன் சதீஷ், கவ்ஜித் சுபாஷ் வலு சேர்க்கிறார்கள். தொடக்கம் கச்சிதமாக அமைந்து விட்டால், கில்லீஸ் அணியை அசைத்து பார்ப்பது கடினம்.

  பந்து வீச்சில், சுழற்பந்து வீச்சாளர்கள் அலெக்சாண்டர், ஓவருக்கு சராசரியாக 5.38 ரன் வீதம் விட்டுக்கொடுத்து சிக்கனத்தை காட்டியுள்ள சாய்கிஷோர் (9 விக்கெட்), வேகப்பந்து வீச்சாளர்கள் அந்தோணி தாஸ் (11 விக்கெட்), அஷ்வாத் முகுந்தன் மிரட்டக்கூடியவர்கள். முகுந்தன் கடந்த ஆட்டத்தில் அறிமுக வீரராக விளையாடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அமர்க்களப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அத்துடன் ரசிகர்களின் ஆதரவு சேப்பாக் அணிக்கு கூடுதல் உந்துசக்தியாக இருக்கும்.

  அதே சமயம் சையத் முகமது தலைமையிலான கோவை கிங்சையும் குறைத்து மதிப்பிட முடியாது. லீக்கில் 4-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும் சந்தித்து இருந்தது. அரைஇறுதிக்கு வந்துள்ள மற்ற மூன்று அணிகளையும் வீழ்த்திய ஒரே அணி கோவை கிங்ஸ் தான். சேப்பாக் சூப்பர் கில்லீசுக்கு எதிரான லீக்கில் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

  அந்த அணியில் இடம் பெற்றிருந்த முரளிவிஜய் இந்திய டெஸ்ட் அணிக்காக விளையாட புறப்பட்டு விட்டதால், இன்றைய ஆட்டத்தில் அவர் ஆட வாய்ப்பில்லை. தொடக்க ஆட்டக்காரர்கள் அனிருத் சீதாராம் (281 ரன்), சூர்யபிரகாஷ் (158 ரன்) ஆகியோரைத் தான் கோவை அணி பெரிதும் நம்பி இருக்கிறது. இவர்களை சீக்கிரம் காலி செய்து விட்டால், கோவை அணி சவாலான ஸ்கோரை எட்டுவது கஷ்டமாகி விடும். பந்து வீச்சில் ஆல்-ரவுண்டர்கள் முகமது, ஹரிஷ்குமார், ‘ஹாட்ரிக்’ விக்கெட் கைப்பற்றியவரான சிவகுமார் ஆகியோர் நல்ல நிலையில் இருக்கிறார்கள். எது எப்படியோ, ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்ற நிலையில் இவ்விரு அணிகளும் மோதுவதால் இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

  சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை நடந்துள்ள 10 ஆட்டங்களில் முதலில் பேட் செய்த அணியே 7 முறை வெற்றிக்கனியை பறித்திருக்கிறது. முதலில் பேட் செய்யும் அணி 150 ரன்களுக்கு மேல் எடுத்து விட்டாலே, எதிரணியின் பாடு திண்டாட்டம் ஆகி விடுகிறது. அதனால் டாஸ் வெல்லும் அணி தயக்கமின்றி முதலில் பேட்டிங்கையே தேர்வு செய்யும்.

  போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

  சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: கோபிநாத், தலைவன் சற்குணம், வசந்த் சரவணன், சதீஷ் (கேப்டன்), சசிதேவ், அந்தோணி தாஸ், கவ்ஜித் சுபாஷ், யோ மகேஷ், அலெக்சாண்டர், சாய் கிஷோர், அஷ்வாத் முகுந்தன்.

  கோவை அணி: அனிருத் சீதா ராம், சூர்யபிரகாஷ், ரோகித், சையத் முகமது (கேப்டன்), ஹரிஷ்குமார், எம்.முகமது, தருண் ஸ்ரீனிவாஸ், ஸ்ரீனிவாசன், கே.விக்னேஷ், அருண், அஜித் ராம்.

  மாலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ்2, விஜய் சூப்பர் ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

  Next Story
  ×