search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரண்டு அடுக்கு டெஸ்ட் முறைக்கு இலங்கை கடும் எதிர்ப்பு
    X

    இரண்டு அடுக்கு டெஸ்ட் முறைக்கு இலங்கை கடும் எதிர்ப்பு

    இரண்டு குழுக்களால் பிரித்து டெஸ்ட் தொடரை நடத்தும் ஐ.சி.சி.யின் பரிந்துரைக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
    சர்வதேச கிரிக்கெட் வாரியம் டெஸ்ட் கிரிக்கெட்டில் குறிப்பிட்ட மாற்றம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. அதன்படி தற்போது 10 நாடுகள் கொண்டு முழு உறுப்பினர் நாடுகளுடன் இரண்டு அசோசியேட் உறுப்பினர்கள் கொண்ட நாடுகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 12 நாடுகள் டெஸ்ட் விளையாட அனுமதிக்கப்படும்.

    இதில் முதல் 7 அணிகள் ஒரு பிரிவாகவும், அடுத்த ஐந்து அணிகள் ஒரு பிரிவாகவும் பிரிக்கப்படும். இவர்களுக்குள் டெஸ்ட் கிரிக்கெட் லீக் தொடர் நடைபெறும். இறுதியில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கிடையில் இறுதிப்போட்டி நடைபெற்று சாம்பயின் பட்டம் வழங்கப்படும். இதற்கிடையில் இருநாடுகளுக்கிடையிலான தொடரிலும் பங்கேற்கலாம் என்ற கருத்தை ஐ.சி.சி. முன்மொழிந்துள்ளது.

    இப்படி நடைபெற்றால் அது எங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று வங்காள தேசம் கிரிக்கெட் வாரியம் தங்களது எதிர்ப்பை தெரிவித்திருந்தது. தற்போது இலங்கை கிரிக்கெட் வாரியமும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் திலங்கா சுமதிபாலா கூறுகையில் ‘‘இந்த முறையால் இலங்கை கிரிக்கெட் மற்றும் வீரர்களுக்கு எந்தவித பயனும் கிடைக்காது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த முறை நிதி ஆதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

    இந்த முறைக்கு நாங்கள் ஆதரவு கொடுக்கப்போவதில்லை என்று முடிவு செய்துவிட்டோம். இந்த முறை இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அழித்துவிடும் என்பதாலும், எங்களின் வருங்காலம் குறித்தும் இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம். 7 அணிகளைத் தவிர மற்ற மூன்று அணிகளை வேறு லெவலுக்கு கீழே தள்ளிவிடும் நிலை ஏற்படும் என்று நாங்கள் உணர்கிறோம்.

    முழு உறுப்பினர்களாக உள்ள 10 அணிகளுக்கும் இரண்டு அடுக்குப்பிரிவு இருக்கக்கூடாது. முக்கிய காரணம் கிரிக்கெட் பொருாளதாரத்தை தொடர்ந்து தாக்குப்பிடிப்பது முக்கியம். ஒருவேளை இந்தியா தரவரிசையில் 8-வது இடத்தில் இருந்திருந்தால், என்ன நடக்கும்?’’ என்றார்.
    Next Story
    ×